இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அக்டோபர் 6 அன்று, இலங்கையின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் (PTA) பதிலாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்தை (PSTA) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி/தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம், புதிய சட்டமூலத்தைப் பேர்போன கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஜனநாயகச் சீர்திருத்தமாக முன்வைக்கிறது. உண்மையில், புதிய முன்மொழியப்பட்டுள்ள சட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஒடுக்குமுறை அம்சங்களைத் தக்கவைத்துக்கொள்வதுடன், சமூக மற்றும் அரசியல் எதிர்ப்புகளுக்கு எதிராக நிறைவேற்று அதிகாரத்திற்கும் இராணுவத்திற்கும் பரந்த அதிகாரங்களை வழங்குவதோடு சில அம்சங்களில், இது தற்போதைய சட்டத்தைவிடவும் அதிக ஒடுக்குமுறையானதாக உள்ளது.
1979இல் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம், ஆரம்பத்தில் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட தமிழ் ஆயுத குழுக்களை இலக்குவைத்தது. 1983இல் இனவாதப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, அது தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையின் பிரதான கருவியாக மாறியது. 1988–90 காலப்பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு எதிராகவும், ஏனைய அரசியல் எதிர்ப்பாளர்களுக்கும் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கும் எதிராகவும் இச்சட்டம் பயன்படுத்தப்பட்டது.
அடுத்தடுத்து ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாக வாக்குறுதியளித்த போதிலும், அதனைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டன. 2024 தேர்தலுக்கான ஜே.வி.பி./தே.ம.ச.வின் தேர்தல் விஞ்ஞாபனம், “பயங்கரவாதத் தடைச் சட்டம் உட்பட அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ஒழிப்பதாக” உறுதியளித்தது. எனினும், 2024 செப்டம்பர் 23 அன்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக பதவியேற்றதிலிருந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைத் தயாரிக்கத் தொடங்கியதுடன், அந்த ஆண்டின் டிசம்பரில் அதன் முதல் வரைவை வெளியிட்டது. அந்த வரைவுக்கு எதிராகப் பரவலான எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து, சட்டமூலத்தைத் திருத்துவதற்காக ஓர் “நிபுணர் குழு” நியமிக்கப்பட்டது. அக்குழு சில சரத்துகளை நீக்கியபோதிலும், சட்டமூலத்தின் ஒடுக்குமுறை உள்ளடக்கத்தைத் தக்கவைத்துக்கொண்டது.
அக்டோபர் 7 அன்று, நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த சட்டத்தரணிகள் சங்க முன்னாள் தலைவர் சாலிய பீரிஸ், தடுப்புக் காவலின் காலவரம்புகள் மற்றும் பிணை வழங்குவதற்கான நீதவான்களின் அதிகாரங்கள் தொடர்பாகக் குழுவுடன் எட்டப்பட்ட உடன்பாடுகளில் இருந்து, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் “பெருமளவில் விலகிச் சென்றுள்ளதாக” வெளிப்படுத்தினார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், குழுவின் அறிக்கையை ஒதுக்கிவைத்ததை ஒப்புக்கொண்ட போதிலும், அதற்கான காரணத்தை விளக்கவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் அலுவலகம், சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் குறித்து விமர்சித்துள்ளன. பயங்கரவாதம் குறித்த அதன் தெளிவற்ற வரைவிலக்கணம், நீண்டகாலத் தடுப்புக் காவலுக்கான ஏற்பாடுகள், இராணுவத்திற்குக் கைது செய்யும் அதிகாரங்களை வழங்குதல் மற்றும் போதிய நீதித்துறைப் பாதுகாப்புகள் இல்லாமை ஆகியவை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் காலத்தில் இடம்பெற்ற துஷ்பிரயோகங்களை மீண்டும் உருவாக்கக்கூடும் என்று அவை எச்சரித்துள்ளன. இதன் மூலம், சிறுபான்மையினர், ஊடகவியலாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக எதேச்சதிகாரமான தடுப்புக் காவல், சித்திரவதை மற்றும் ஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
மாற்றுக் கருத்துக்களை இலக்குவைக்கும் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம்
பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தின் (PSTA) பிரிவு 3(1), “அரசியல் அல்லது கருத்தியல் நோக்கத்தை முன்னெடுப்பதற்காக”, ஓர் அரசாங்கத்தையோ சர்வதேச அமைப்பையோ செயற்படுமாறு அல்லது செயற்படாமல் இருக்குமாறு “தகாத முறையில்” நிர்ப்பந்திப்பதை நோக்கமாகக் கொண்ட செயல்களையும் பயங்கரவாதமாக வரையறுக்கிறது.
அடுத்த பிரிவு, பயங்கரவாதச் செயல்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு மிகவும் விரிவான வரைவிலக்கணத்தை வழங்குகிறது. இதில் மரணம், காயம் மற்றும் பணயக் கைதிகளாகப் பிடித்துவைத்தல் ஆகியவற்றுடன், பொதுச் சொத்துக்கள், போக்குவரத்து, “எந்தவொரு உட்கட்டமைப்பு வசதி”, பொது சுகாதாரம் மற்றும் மின்னணு அமைப்புகளுக்குக் கடுமையான சேதம் விளைவித்தலும் உள்ளடங்குகின்றன. முக்கியமாக, பாதிப்பு என்பதற்கான வரைவிலக்கணத்தில் “கணிசமான பொருளாதார இழப்பும்” உள்ளடக்கப்பட்டுள்ளது.
பிரிவு 3(4), ஆர்ப்பாட்டம் நடத்துதல், உரிமைக்காக முன்நிற்றல், மாற்றுக்கருத்தை வெளிப்படுத்துதல் அல்லது தொழிற்துறை போராட்ட நடவடிக்கை மூலம் பயங்கரவாத நடவடிக்கை ஒன்று நடந்துள்ளதாக முடிவுக்கு வருவதற்குப் “போதுமான அடிப்படையாகாது” என்று கூறுகிறது. எனினும், இத்தகைய செயல்களைப் பயங்கரவாதமாகக் கருதி அதிகாரிகள் வழக்குத் தொடர்வதை இது தடுக்காது. போக்குவரத்து, துறைமுகங்கள், எரிசக்தி அல்லது சுகாதார சேவைகளைப் பாதிக்கும் வேலைநிறுத்தங்கள், வீதிகளை மறித்துப் போராடுதல் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் ஆகியவை, “கணிசமான பொருளாதார இழப்பை” ஏற்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தை “தகாத முறையில்” நிர்ப்பந்திக்கும் முயற்சிகளாகச் சித்தரிக்கப்படலாம்.
மரணத்தை ஏற்படுத்தும் பயங்கரவாதச் செயல்களுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்; ஏனைய பயங்கரவாதச் செயல்களுக்கு 20 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனையும் 20 மில்லியன் ரூபாய் (சுமார் 60,000 அமெரிக்க டொலர்கள்) வரை அபராதமும் விதிக்கப்படலாம். பிரிவு 5 இன் கீழ், எந்தவொரு பயங்கரவாதச் செயலும் இடம்பெறாதபோதிலும், அத்தகைய செயல்களுக்கான முயற்சி, உடந்தையாக இருத்தல், சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் தயாரிப்புகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
பிரிவு 6, தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பில் இணைவது, அதற்கு ஆட்சேர்ப்பு செய்வது, நிதியளிப்பது அல்லது அதன் எந்தவொரு நடவடிக்கையிலும் பங்கேற்பதையும் குற்றமாக்குகிறது. “வெறுமனே கருத்து, நம்பிக்கை அல்லது அனுதாபத்தை வெளிப்படுத்துவது” இதிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தாலும், தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பதாகக் கருதப்படும் தொழிலாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள், இடதுசாரிக் குழுக்கள், சமூக அமைப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் பரந்த தடைகள் பயன்படுத்தப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு பயங்கரவாதி இருக்கும் இடத்தைப் பொலிஸாரிடமிருந்து மறைப்பவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் -தங்களது தகவல் மூலங்களை மறைக்கும் ஊடகவியலாளர்களைக் குறிவைக்க இந்தப் பிரிவு பயன்படுத்தப்படலாம்.
பிரிவு 9, பயங்கரவாதத்தை “நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ” தூண்டும் அறிக்கைகள், சொற்கள் அல்லது அடையாளங்களைக் குற்றமாக்குகிறது. மிகவும் பரந்த முறையில் வரையறுக்கப்பட்டுள்ள இந்தக் குற்றத்திற்கு 15 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறைத்தண்டனை, 15 மில்லியன் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். அடுத்த பிரிவு, “பயங்கரவாத வெளியீடு” ஒன்றை வைத்திருப்பது, விநியோகிப்பது அல்லது அதனை அணுகுவதற்கு மற்றொருவருக்கு உதவுவது ஆகியவற்றைக் குற்றமாக்குகிறது. சமூக ஊடக நிர்வாகிகள், தளங்கள் மற்றும் இணையச் சேவை வழங்குநர்களுக்கு எதிராக வழக்குத் தொடர இதைப் பயன்படுத்த முடியும்.
பொலிஸார் அல்லது ஆயுதப் படையினரின் “எந்தவொரு உத்தியோகபூர்வ நடவடிக்கை” பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வது, அடுத்தவர் ஒரு குற்றத்தைப் புரிவதற்கு உதவும் என “நம்புவதற்கான நியாயமான காரணங்களின் அடிப்படையில்” நபர்கள் சிறையில் அடைக்கப்படலாம். உதாரணமாக, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு எதிராகப் படையினர் களமிறக்கப்படுவதை அம்பலப்படுத்தும் பதிவுகளை சமூக ஊடகங்களில் வெளியிடும் ஒருவருக்கு எதிராக, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் (PSTA) கீழ் வழக்குத் தொடரப்படலாம்.
பொலிஸாராகச் செயற்படும் இராணுவம்
பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பிடியாணையின்றிக் கைது செய்தல், சோதனையிடுதல் மற்றும் பொருட்களைக் கைப்பற்றுதல் ஆகிய அதிகாரங்களைப் பொலிஸாருக்கு மட்டுமே வழங்கியிருந்த போதிலும், பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் (PSTA) பிரிவு 19, படையினருக்கும் கடலோரக் காவல்படை அதிகாரிகளுக்கும் அதே அதிகாரங்களை வழங்குகிறது. பிரிவு 20, “நியாயமான சந்தேகத்தின்” அடிப்படையில் மக்களைத் தடுத்து நிறுத்திச் சோதனையிடவும், வளாகங்களுக்குள் நுழையவும், தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் உட்பட “எந்தவொரு ஆவணம், பொருள் அல்லது சாதனத்தையும்” பிடியாணையின்றிக் கைப்பற்றவும் அவர்களுக்கு அனுமதியளிக்கிறது.
பிரிவு 24, இராணுவத்தினர் கைது செய்வதை “விதிவிலக்கான சூழ்நிலைகளுக்கு” மட்டுப்படுத்துவதாகக் கூறுகின்ற போதிலும், “பொது ஒழுங்கைப் பேணுவதற்காக ஒரு பகுதியில் பணியில் ஈடுபடுத்தப்படுவது” இந்தச் சூழ்நிலைகளில் உள்ளடங்குகிறது. வேலைநிறுத்தங்கள் அல்லது போராட்டங்களுக்கு எதிராகக் களமிறக்கப்படும் படையினர், தானாகவே பிடியாணையின்றிக் கைது செய்வதற்கான அதிகாரங்களைப் பெற்றுக்கொள்கின்றனர்.
நிறைவேற்று அதிகாரத்தின் கீழான தடுப்புக்காவல்
பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், ஒருவரை, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இரண்டு மாத காலத்திற்கு தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிட முடியும். மேல் நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் இந்தக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்கலாம். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை, ஆறு மாதங்கள் வரை பொலிஸாரின் கட்டுப்பாட்டிலுள்ள தடுப்புக்காவலுக்கு மாற்றவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் முடியும். ஒரு குற்றச்சாட்டு “நன்கு ஆதாரங்களைக் கொண்டதாகத் தோன்றுகிறது” என்பதை மேல் நீதிமன்ற நீதிபதி ஏற்றுக்கொண்ட பின்னர், சந்தேகநபர் ஒருவரை “தனிமைப்படுத்தப்பட்ட நிலையில்” தடுத்து வைக்க முடியும்.
“தேசிய பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கு” என்ற அடிப்படையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒருவரை “விசாரணை முடிவடையும் வரை” தடுப்புக்காவலில் வைக்குமாறும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோர முடியும். இலங்கையில் நீண்டகாலமாக சித்திரவதைகளுடன், சிறைச்சாலை கட்டமைப்பிற்கு வெளியே பொலிஸாரால் நிர்வகிக்கப்படும் தடுப்புக்காவல் நிலையங்களில் கைதிகளைத் தடுத்து வைக்க முடியும்.
கூட்டங்களையும் கூட்டுச் செயற்பாடுகளையும் தடைசெய்தல்
பிரிவு 51 இன் கீழ், “அவசரமான” சந்தர்ப்பங்களில், ஒரு பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியால் கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகள் அல்லது “குறிப்பிடப்பட்ட எந்தவொரு செயற்பாட்டையும்” தடைசெய்ய முடியும். இத்தகைய உத்தரவுகள் 72 மணிநேரம் வரை அமுலில் இருக்கலாம்; அவற்றை ஆயுதப் படைகள் அமுல்படுத்துவதோடு இத்தடைகளை மீறுவோருக்கு ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். மறியல் போராட்டங்களையும் வெகுஜன வேலைநிறுத்தக் கூட்டங்களையும் தடைசெய்வதற்கு இந்த அதிகாரம் பயன்படுத்தப்படலாம்.
விசாரணையின்றித் தண்டித்தல்
சந்தேகநபர் ஒருவர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலங்களைச் சாட்சியமாகப் பயன்படுத்த அனுமதிக்கும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழுள்ள மோசமான விதியொன்றை இந்தச் சட்டமூலம் நீக்குகிறது. எனினும், நீதவான்களால் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களைச் சாட்சியமாக ஏற்றுக்கொள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் அனுமதிக்கிறது. பொலிஸாரால் நிர்வகிக்கப்படும் தடுப்புக்காவல் நிலையத்தில் பல மாதங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு சந்தேகநபர் அளிக்கும் இத்தகைய வாக்குமூலங்கள் சுயவிருப்புடன் அளிக்கப்பட்டவை என்று கூறுவது அபத்தமானதாகும்.
பிரிவு 59, இந்தச் சட்டத்தின் கீழான குற்றங்களில் ஓர் அமைப்பு ஈடுபட்டுள்ளது என நம்புவதற்கு “நியாயமான காரணங்கள்” இருப்பதாகக் கூறி, எந்தவொரு அமைப்பையும் தடைசெய்யும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்குகிறது. இத்தகைய தடைக்கு முன்னதாக நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையில்லாததோடு தடை நீக்கப்படும் வரை அது செல்லுபடியாகும்; இதற்கு காலவரையறையோ, குறிப்பிட்ட கால எல்லைக்குள்ளான மீளாய்வு இல்லை; ஜனாதிபதியிடம் மேன்முறையீடு செய்வதன் மூலமோ அல்லது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதித்துறை மீளாய்வைக் கோருவதன் மூலமோ மட்டுமே இந்தத் தடையை சவால் செய்ய முடியும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே நடைமுறையில் உள்ள அனைத்துத் தடைகளையும் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் தொடர்ந்து பேணும். இதில் தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம் மற்றும் 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்புகள் மீதான தடைகளும் அடங்கும்.
தனியார்மயமாக்கல்கள், அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் மற்றும் சமூகச் செலவினங்களைக் குறைத்தல் ஆகியவை அடங்கும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள சிக்கனத் திட்டத்திற்கு எதிராகத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிகரித்து வரும் கோபத்தின் மத்தியில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட மூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாழ்க்கைச் செலவுகள் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்யத் தள்ளப்பட்ட 2022 வெகுஜன எழுச்சியைப் போன்ற, வெகுஜன வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும் வெடிக்கக்கூடும் என்று ஆளும் உயரடுக்கினர் அஞ்சுகின்றனர். அரசின் ஜனநாயக விரோத அதிகாரங்களை வலுப்படுத்துவதன் மூலம் ஜனாதிபதி திசாநாயக்கவின் நிர்வாகம் இதற்குத் தயாராகி வருகிறது.
பாராளுமன்ற எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டமூலம் குறித்து முன்வைக்கும் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து உருவான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி (ஐ.ம.ச.), பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட விதிகள் பிரஜைகளை “கொடூரமாக” நடத்துவதற்கு வழிவகுக்கும் என்று அறிவித்தது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது ஐ.தே.க. அரசாங்கமே ஆகும். தற்போதைய ஐ.ம.ச. தலைவர்கள் பல தசாப்தங்களாக இந்த ஒடுக்குமுறைச் சட்டத்தைப் பாதுகாத்து வந்துள்ளனர்.
அக்டோபர் 7 அன்று, போலி இடதுசாரிக் கட்சியான முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.), அரசியல் செயற்பாடுகளை ஒடுக்குவதற்காகவே அரசாங்கம் பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் குற்றஞ்சாட்டியது. ஆனால், முன்னிலை சோசலிசக் கட்சியானது முதலாளித்துவ அரசையும் அதன் ஒடுக்குமுறைச் செயற்பாடுகளையும் கொள்கையளவில் எதிர்க்கவில்லை.
செப்டம்பர் 30 அன்று, முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதை எதிர்க்குமாறு ஜே.வி.பி./தே.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய குழுக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். தண்டனைச் சட்டக்கோவை மற்றும் பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம் உட்பட, ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்டங்கள் போதுமானவை என்று அவர் வாதிட்டார். பொது மக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டம், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தவும் “ஒழுங்கை” பேணுவதற்காக இராணுவத்தை ஈடுபடுத்தவும் ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்குகிறது.
முன்னர் நடைமுறையில் இருந்த பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் போலவே, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமும் வர்க்க ஆட்சிக்கான ஒரு கருவியாகும். சமூக சமத்துவமின்மை வெளிப்படையான அளவுக்கு நிலவும் முதலாளித்துவ அமைப்புடன் ஜனநாயக உரிமைகள் அடிப்படையிலேயே பொருந்தாதவை என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் உயரடுக்கினர் தமது ஆட்சியைப் பாதுகாப்பதற்காக சர்வாதிகார மற்றும் பாசிச வழிமுறைகளை நாடுகின்றனர். அதேநேரம், உழைக்கும் மக்கள் இடதுபுறம் திரும்பி, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஏகாதிபத்தியப் போர்களுக்கு எதிரான போராட்டங்களில் இறங்குகின்றனர். ஒரு சோசலிச மற்றும் சர்வதேச முன்னோக்கும் தலைமைத்துவமுமே அவர்களுக்கு அவசியமாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்காகவும், சோசலிசத்திற்கான பொதுவான போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்காகவும் தொடர்ந்து போராடி வந்துள்ளன.
சோசலிச சமத்துவக் கட்சி, பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் உட்பட அனைத்து ஒடுக்குமுறைச் சட்டங்களையும் ரத்துச் செய்யவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கவும் கோருகிறது. முதலாளித்துவ வர்க்கத்தின் எந்தவொரு பிரிவினரிடமும் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் இதைச் சாதிக்க முடியாது. ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டமானது, முதலாளித்துவத்தை ஒழித்து, சோசலிச அடிப்படையில் சமூகத்தை மறுசீரமைப்பதற்காக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதறக்காக, ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வேலைத்திட்டத்தின் பின்னால் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும்.
