இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
அலன் தோர்னெட் 2026 அக்டோபர் 9 அன்று, 89 வயதில் காலமானார். தனது வாழ்வின் இறுதிக் காலத்தில், பப்லோவாத நான்காம் அகிலத்தின் ஐக்கிய செயலகத்தின் பிரிட்டிஷ் பிரிவான ஆன்டி-கெப்பிட்டலிஸ்ட் ரெசிஸ்டன்ஸ் (Anti-Capitalist Resistance - முதலாளித்துவத்திற்கு எதிரான எதிர்ப்பு இயக்கம்) அமைப்பின் தலைவர்களில் ஒருவராக அவர் விளங்கினார். அதேவேளை, ட்ரொட்ஸ்கிசத்தின் கடுமையான எதிர்ப்பாளராகவும் மாறியிருந்தார்.
ஆயினும், 1960களிலும் 1970களின் முற்பகுதியிலும், தோர்னெட் வாகனத் தொழில்துறையில் ஒரு முன்னணி போர்க்குணமிக்க செயற்பாட்டாளராக விளங்கினார். ஸ்ராலினிச பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து, அப்போது நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரிட்டிஷ் பிரிவாக இருந்த சோசலிச தொழிலாளர் கழகத்திற்கு (SLL) அவர் வென்றெடுக்கப்பட்டார்.
SLL-இனதும் அதன் தலைவரான ஜெரி ஹீலியினதும் வழிகாட்டலின் கீழ் பணியாற்றிய தோர்னெட், ஒக்ஸ்போர்ட்ஷயரில் (Oxfordshire) உள்ள கவ்லியின் (Cowley) பிரிட்டிஷ் லேலண்ட் (British Leyland) தொழிற்சாலையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பணியை முன்னெடுத்தார். போக்குவரத்து மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் (TGWU) அதிகாரத்துவத்திற்கு எதிராகச் சாமானியத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான கொள்கைரீதியான போராட்டத்தையே அவரது பணி மையமாகக் கொண்டிருந்தது.
SLL-இன் வழித்தோன்றல் அமைப்பான தொழிலாளர் புரட்சிக் கட்சியுடன் (WRP) தோர்னெட் பின்னர் பிளவுபட்டதை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிட்டிஷ் பிரிவின் வரலாற்றிலிருந்து பிரித்துப் புரிந்துகொள்ள முடியாது. அத்துடன், அப்போது பிரெஞ்சுப் பிரிவாக இருந்த சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்புடன் (Organisation Communiste Internationaliste, OCI) ஏற்பட்ட அவசரமானதும் அரசியல் ரீதியாகத் தெளிவுபடுத்தப்படாததுமான பிளவைத் தொடர்ந்து, 1970களின் முற்பகுதியில் தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தை நோக்கி அந்தப் பிரிவு மேற்கொண்ட அரசியல் தகவமைப்புகளின் தாக்கத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
SLL-இல் தோர்னெட் இருந்த ஆண்டுகள் குறித்த ஒரு புறநிலையான வரலாற்றுக் கணக்கு முக்கியமானதாகும். ஏனெனில், பிரிட்டிஷ் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களில் ஒரு தீர்மானகரமான திருப்புமுனையில், தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு முக்கியமான பிரிவினரிடையே கட்சி மேற்கொண்ட மிக முக்கியமான தலையீட்டை அந்த ஆண்டுகள் உள்ளடக்கியுள்ளன. தொழிலாளர் வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமையை எவ்வாறு கட்டியெழுப்புவது, புரட்சிகரக் கட்சி எதிர்கொண்ட அரசியல் அழுத்தங்கள் என்ன, அவற்றை எதிர்த்துப் போராடத் தவறுவதால் ஏற்படும் பெரும் விலை என்ன என்பன குறித்து இன்றும் இன்றியமையாத படிப்பினைகளை இது வழங்குகிறது.
மொரிஸ் மோட்டார்ஸ் (Morris Motors) தொழிற்சாலை பிரிட்டிஷ் லேலண்ட் நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர், 1959-இல், தோர்னெட் அங்கு வேலை செய்யத் தொடங்கினார். சிறிது காலத்திலேயே அவர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியில் (CPGB) இணைந்தார்.
1960களின் நடுப்பகுதியில் CPGB இலிருந்து அவர் விலகியதும், 1966 இல் கவ்லி தொழிற்சாலையின் ஏனைய தொழிற்சாலைப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து SLL இல் இணைந்ததும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குக் கிடைத்த ஒரு முக்கியமான ஆதாயமாகும். இது ஸ்ராலினிசத்திற்கு எதிராக அந்த இயக்கம் தொடர்ந்து நடத்திய போராட்டத்தின் விளைவாகவும், SLL-இன் வளர்ந்து வந்த அரசியல் செல்வாக்கிற்குச் சான்றாகவும் அமைந்தது.
தொழிற்கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிராக முன்னெடுத்த சமரசமற்ற போராட்டத்தின் மூலம் SLL வென்றெடுத்த போர்க்குணமிக்க தொழிலாளர்களின் கணிசமான அடுக்கில் தோர்னெட்டும் ஒருவராக இருந்தார். புரட்சிகரக் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு, தொழிற்கட்சிக்குள்ளும் தொழிற்சங்கங்களுக்குள்ளும் உருவாகியிருந்த கணிசமான இடதுநோக்கிய இயக்கத்தை நோக்கித் திரும்புவது அவசியம் என்பதை SLL புரிந்துகொண்டிருந்தது. அக்காலத்தில் இந்த அமைப்புகள் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் விசுவாசத்தைப் பெற்றிருந்தன; அவர்களில் பலர் அவை சோசலிச அமைப்புகள் என்றே நம்பினர்.
தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களின், குறிப்பாக அவர்களின் இடது பிரதிநிதிகளின், சோசலிச பாசாங்குகளை முறையாக அம்பலப்படுத்துவதும், அரசியல்ரீதியாக மிகவும் முன்னேறிய தொழிலாளர்களை அவர்களின் செல்வாக்கிலிருந்து முறித்தெடுப்பதுமே SLL-இன் பணியாக இருந்தது.
ஹீலியுடன் நடைபெற்ற வாராந்திரக் கூட்டங்களின் வழிகாட்டுதலின் கீழ், தோர்னெட்டும் SLL-இன் தொழில்துறை அணியினரும், வில்சன் தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கம் 1966இல் விதித்த ஊதிய முடக்கத்திற்கு எதிராக உறுதியான போராட்டத்தை முன்னெடுத்தனர். ஹீலியின் “வில்சனுக்கான மாற்றீடு, 1967” (The Alternative to Wilson, 1967) என்ற சிற்றேட்டில் விளக்கப்பட்டபடி, இந்தப் போராட்டம் “இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போராட்டத்தில் இறக்குங்கள்” என்ற கோரிக்கையை முன்வைத்தது.
தோர்னெட், போக்குவரத்து மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் (Transport and General Workers’ Union, TGWU) 5/55 கிளையின் தலைவராகவும், கவ்லி தொழிற்சாலையின் கூட்டுத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் குழுவின் தலைவராகவும் ஆனார். அப்பதவிகளில் அவர் தொழிற்சாலையில் நடைபெற்ற பல போராட்டங்களுக்குத் தலைமை வகித்தார். கட்சியின் தொழில்துறைப் பிரிவான அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டணியின் (All Trades Unions Alliance, ATUA) செயலாளராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஒக்ஸ்போர்ட், ரெடிங், ஸ்விண்டன் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய WRP-இன் மேற்குப் பிராந்தியத்தை அவர் வழிநடத்தினார்.
WRP-இலிருந்து பிரிந்த பின்னரும், ட்ரொட்ஸ்கிசம் குறித்த தனது மதிப்பீட்டில் தோர்னெட் பின்வருமாறு ஒப்புக்கொண்டார்: “அதன் அளவும் செல்வாக்கும் காரணமாக, அக்காலத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிஸ்டாக இருப்பது என்பது பெரும்பாலும் SLL-இன் உறுப்பினராக இருப்பதையே குறித்தது... ட்ரொட்ஸ்கிசம் முதலாளித்துவத்தைப் பற்றிய பகுப்பாய்வை மட்டுமல்லாமல், தொழிற்சங்கத் தலைவர்கள், சமூகத்தில் அவர்களின் பாத்திரம் மற்றும் முதலாளிகளுடனான அவர்களின் உறவு ஆகியவற்றைப் பற்றிய பகுப்பாய்வையும் வழங்கியது.”
இந்தச் செல்வாக்கு, வாகனத் தொழில்துறை, கப்பல்துறைகள் மற்றும் கட்டுமானத் தொழில்துறை ஆகியவற்றில் பணியாற்றிய மிகவும் போர்க்குணமிக்க தொழிலாளர்களை ஈர்ப்பதில் ATUA கொண்டிருந்த ஆற்றலில் தெளிவாக வெளிப்பட்டது. தொழிற்சங்கங்களில் கட்சி மேற்கொண்ட பணியின் விளைவாக, 1972 இல் மான்செஸ்டரில் 4,000 பேர் கலந்துகொண்ட பேரணியும், 1973 இல் வெம்ப்ளியில் உள்ள எம்பயர் பூல் அரங்கில் 10,000 பேர் கலந்துகொண்ட பேரணியும் நடைபெற்றன. இதன் விளைவாக, 1974 இல் தோர்னெட் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு இலக்காக்கப்பட்டார், இதனை WRP தீவிரமாக எதிர்த்தது.
ட்ரொட்ஸ்கிசத்திலிருந்து விலகி மையவாதத்தை நோக்கிய OCI இன் சறுக்கலுக்கு எதிராக, SLL ஒரு உறுதியான, இடைவிடாத போராட்டத்தை நடத்தத் தவறியதே தோர்னெட்டின் பிளவின் பின்னணியாக இருந்தது. நான்காம் அகிலம் பப்லோவாதக் கலைப்புவாதத்தால் அழிக்கப்பட்டுவிட்டது என்றும், அது “மீளக் கட்டியெழுப்பப்பட” வேண்டும் என்றும் 1966 இல் OCI வலியுறுத்தியதே இந்தச் சறுக்கலின் மிகத் தெளிவான வெளிப்பாடாக இருந்தது. 1968 மே–ஜூன் பொது வேலைநிறுத்தத்தின்போது OCI இன் உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்த நிலையில், இந்தக் கூற்று, பிரான்சில் இருந்த மையவாத மற்றும் ஸ்ராலினிசப் போக்குகளுக்கு அக்கட்சி தகவமைத்துக்கொள்வதற்கான ஒரு அரசியல் பொறிமுறையை வழங்கியது.
OCI தலைமையின் மையவாத முன்னோக்கின் விளைவுகள் குறித்து பிரெஞ்சுப் பிரிவின் அணியினருக்கோ சர்வதேச இயக்கத்திற்கோ தெளிவுபடுத்துவதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே, 1971 நவம்பர் 24 அன்று SLL OCI உடனான பிளவைப் பகிரங்கமாக அறிவித்தது. இது, அதே அரசியல் அழுத்தங்களுக்கு பிரிட்டிஷ் பிரிவும் தகவமைத்துக்கொண்டிருந்ததைப் பிரதிபலித்தது. ஹீத் அரசாங்கத்திற்கு எதிராக அது முன்னெடுத்த பிரச்சாரத்தில் இந்தத் தகவமைப்பு வெளிப்பட்டது.
1973இல், தொழிலாளர் வர்க்கத்தின் வெகுஜன டோரி-எதிர்ப்பு இயக்கம் உச்சத்தை எட்டியிருந்தபோது, ஹீத் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்து அதற்குப் பதிலாக ஒரு தொழிற்கட்சி அரசாங்கத்தை அமைப்பது என்ற அறிவிக்கப்பட்ட நோக்கத்துடன் SLL தொழிலாளர் புரட்சிக் கட்சியை) நிறுவியது. இந்தத் திட்டம், சாராம்சத்தில், “அடிப்படை உரிமைகள்” (வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம், வீட்டுவசதி, மேலும் தெளிவாக வரையறுக்கப்படாத “அமைப்பை மாற்று”) ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு தேர்தல் வேலைத்திட்டமாக முன்வைக்கப்பட்டது. இதில், கட்சியின் ட்ரொட்ஸ்கிசத் தன்மை குறித்தும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சர்வதேச முன்னோக்கு குறித்தும் மிகக் குறைந்த அளவிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
1974இல் தொழிற்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வருவது, தொழிலாளர்களை விரைவிலேயே அந்த அரசாங்கத்துடன் மோதலுக்குக் கொண்டுவரும் என்று WRP எதிர்பார்த்தது. ஆனால், குறைந்தபட்சம் ஆரம்பத்திலாவது, தொழிற்கட்சி குறித்த பிரமைகள் மேலும் வலுப்பெற்றன. குறிப்பாக, அரசாங்கம் தொடக்கத்தில் தொழிலாளர்களுக்குக் குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கியதால் இது நிகழ்ந்தது.
இத்தகைய பிரமைகளை எதிர்த்துப் போராடுவதற்காக, WRP, கட்சியின் ட்ரொட்ஸ்கிச அடையாளத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு எதிரான தனது எதிர்ப்பையும் கூர்மைப்படுத்தியது. இந்த இடது திருப்பத்தின் முன்னணி எதிர்ப்பாளராகத் தோர்னெட் முன்வந்தார். அதை “குறுங்குழுவாதம்” நோக்கிய ஒரு மீண்டும் திரும்புதல் என்று வர்ணித்து, அவர் அதற்கு எதிராக வாதிட்டார்..
அவரது கருத்து வேறுபாடுகள், டோரி-எதிர்ப்பு நிலைப்பாட்டின் அடிப்படையில் கட்சியில் இணைந்திருந்த, ஆனால் புரட்சிகரக் கொள்கைகளுக்கு வென்றெடுக்கப்படாதிருந்த தொழிலாளர்களிடமிருந்து வந்த அழுத்தத்தைப் பிரதிபலித்தன. அவர்கள் கட்சிக்குள் ஒப்பீட்டளவில் பெரிய ஒரு பிரிவினராக இருந்தனர்; அவர்களிடையே நிலவிய குழப்பத்திற்கு WRP யே பொறுப்பாக இருந்தது; அவர்கள் அரசியல்ரீதியாகக் கல்வியூட்டப்பட்டு, ட்ரொட்ஸ்கிசத்திற்கு வென்றெடுக்கப்பட வேண்டியிருந்தனர்.
தோர்னெட் இதற்குக் கொள்கையற்ற முறையில் பதிலளித்தார்: ஹீலியைக் கட்சித் தலைமையிலிருந்து அகற்றும் நோக்கில், WRP மீதான ஒரு கன்னைவாத விமர்சனத்தை வகுப்பதற்காக, 1974 ஆகஸ்டில் பிரித்தானியாவில் இருந்த OCI பிரதிநிதிகளுடன் அவர் இரகசியத் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.
தோர்னெட்டின் நிலைப்பாடுகளை அரசியல்ரீதியாக எதிர்த்துப் போராடியிருந்தால், OCI உடனான மோதலை மீளாய்வு செய்வதும், திருத்தல்வாதத்திற்கு எதிரான ICFI இன் போராட்டத்தை ஒரு உயர்ந்த மட்டத்திற்கு எடுத்துச் செல்வதும் அவசியமாகியிருக்கும்; அதற்குப் பதிலாக, ஹீலியும் WRP தலைமையும் இலையுதிர் காலத்திற்குள் தோர்னெட்டைக் கட்சியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கினர்.
WRP அமைப்புரீதியான நடவடிக்கைகளை நாடியதன் விளைவாக, கட்சி பல நூறு உறுப்பினர்களையும், அடிப்படைத் தொழில்துறையில் தனக்கிருந்த மிக முக்கியமான அணியையும் இழந்தது; அதேவேளையில், சமூக ஜனநாயகத்திற்கும், தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கான மையவாதத் தகவமைப்புகளுக்கும் எதிரான போராட்டத்தின் அனைத்துத் தீர்க்கமான பிரச்சினைகளும் தெளிவுபடுத்தப்படாமலேயே விடப்பட்டன.
WRP உடனடியாக அதற்கான விலையைக் கொடுக்க நேர்ந்தது: கட்சியின் சமூக அடித்தளம் இப்போது நடுத்தர வர்க்கத்தை நோக்கிச் சாய்ந்தது; நடிகை வனேசா ரெட்கிரேவ், முன்னாள் சண்டே டைம்ஸ் பத்திரிகையாளர் அலெக்ஸ் மிட்செல் போன்றோர் கட்சியில் முக்கிய இடத்திற்கு உயர்ந்து, அரசியல் திசைதவறல் தொடர்ந்து நீடிப்பதற்கு வழிசெய்தனர்.
இந்தப் பிளவு, தனது சொந்த சிண்டிக்கலிச, மையவாத நோக்குநிலையைப் பின்தொடர்வதற்குத் தோர்னெட்டை விடுவித்தது. அவர் தொழிற் கட்சிக்குள்ளும், டோனி பென்னைச் சுற்றியிருந்த அரசியல் வட்டாரத்திலும் செயல்பட்டதுடன், ICFI இலிருந்து பிரிந்து சென்ற குழுக்களை மீண்டும் ஒன்றிணைப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டார். அவரது சர்வதேச சோசலிசக் குழு (International Socialist Group), 1991 இல் ஐக்கிய செயலகத்தின் அனுதாபப் பிரிவாக அங்கீகரிக்கப்பட்டு, 1995 இல் அதன் பிரிட்டிஷ் பிரிவாக மாறியது.
1990 ஆம் ஆண்டாகும்போது, அவர் ஹீலியை “சீரழிந்த அரசியல் அரக்கன்” என்றும், “பிரிட்டிஷ் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் சௌஷெஸ்கு” (Ceausescu) என்றும், ICFI ஐ ஒரு மோசடி என்றும் வர்ணித்து வந்தார்.
அவர் சந்தர்ப்பவாத “வெகுஜன இடதுசாரிக் கட்சி” முன்முயற்சிகளின் ஒரு தொடரை முன்னின்று ஆதரித்தார்: முதலில் ஜோர்ஜ் காலோவேயுடன் (George Galloway) இணைந்து ரெஸ்பெக்ட் (Respect), ரெஸ்பெக்ட் ரினியூவல் (Respect Renewal); பின்னர் லெஃப்ட் யூனிட்டி (Left Unity); அதன் பின்னர் ஜெரமி கோர்பினின் யுவர் பார்ட்டி (Your Party) ஆகியவை அவற்றுள் அடங்கும்.
ஆனால், அவர் கட்சிக்கு வென்றெடுக்கப்பட்டதும், ATUA க்கு அவர் வழங்கிய தலைமையும், கவ்லியில் அவர் மேற்கொண்ட பணியும், தொழிலாள வர்க்கத்திற்குள் ட்ரொட்ஸ்கிசத்திற்காக SLL நடத்திய போராட்டத்தின் முக்கியமான விளைபொருட்களாக இருந்தன என்ற உண்மையை, அவரது பிற்காலப் பரிணாமம் மாற்றிவிடாது. WRP தலைமையின் பிற்காலச் சீரழிவு அந்தச் சாதனைகளையே குழிபறித்தது.
உலக சோசலிச வலைத் தளம் (WSWS), தோர்னெட் பற்றியும், SLL இல் அவர் வகித்த பாத்திரமும் பின்னர் WRP உடனான அவரது முறிவும் எழுப்பிய மையப் பிரச்சினைகள் பற்றியும் மேலும் விரிவான ஒரு மதிப்பீட்டை, தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்காகத் தொடர்ந்து நடைபெறும் போராட்டத்திற்குக் கட்சியை ஆயுதபாணியாக்கும் பொருட்டு வெளியிடும்.
