இந்தியாவின் அதி-வலது அரசாங்கத்தை உலுக்கியெடுத்த மாணவர் போராட்டங்களின் எழுச்சி

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

கரப்பான் ஜனதா கட்சி ஆதரவாளர்கள், கல்வி அமைச்சரின் இராஜினாமாவை வலியுறுத்தி இந்திய நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றபோது, பொலிஸாருடன் மோதுகின்றனர். புதுடெல்லி, திங்கட்கிழமை, ஜூலை 20, 2026. [AP Photo/Vipin]

இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட கரப்பான் ஜனதா கட்சி (CJP) கடந்த மாதம் தொடங்கிய போராட்ட இயக்கம், பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், வேலையற்ற இளைஞர்கள் மற்றும் இளம் தொழிலறிஞர்களையும் தலைநகரின் தெருக்களுக்கு இழுத்து வந்துள்ளதோடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தீவிர வலதுசாரி பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசாங்கத்தை ஆழமடைந்து வரும் அரசியல் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

அரசாங்கத்தால் நடத்தப்படும், கடுமையானதும் ஆழ்ந்த சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டதுமான பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளில் ஒன்றைச் சுற்றிய ஊழல் விவகாரமே போராட்டங்களுக்கான உடனடி தூண்டுதலாக இருந்தது. எனினும், இந்த இயக்கம் வேலைவாய்ப்பின்மை, பரவலான வறுமை, மக்களின் பெரும்பான்மைக்கும் செல்வந்தர்கள் மற்றும் அதி-செல்வந்தர்களின் சிறிய அடுக்குக்கும் இடையே நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் ஆழமான இடைவெளி ஆகியவற்றின் மீதான மிகவும் பரந்த சமூகக் கோபத்தின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.

இந்த வாரம், நாடாளுமன்றக் கட்டிடங்களை நோக்கி பேரணியாகச் செல்வதற்கான அரசாங்கத் தடையை பல்லாயிரக்கணக்கானோர் மீறியபோது, இந்தப் போராட்ட இயக்கம் மேலும் முக்கியத்துவம் பெற்றது. தனது வன்முறை மற்றும் சர்வாதிகார இயல்பிற்கு ஏற்ப, மோடி ஆட்சியானது கண்ணீர்ப்புகை தாக்குதல்கள், தடியடித் தாக்குதல்கள், பெருமளவிலான கைது நடவடிக்கைகள் மற்றும் ஆயிரக்கணக்கான துணை இராணுவப் படையினரைக் குவிப்பது உட்பட கடுமையான பொலிஸ் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.

இந்த இளைஞர் எழுச்சிக்கு முன்னதாக, புதுடெல்லியின் புறநகரான நொய்டாவிலும் அண்டை மாநிலமான ஹரியானாவின் மனேசர் நகரிலும் கொடூரமாகச் சுரண்டப்படும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்தில் எழுச்சியில் ஈடுபட்டிருந்தனர். வாழ்வதற்குப் போதுமான ஊதியத்தைக் கோரியதற்காக மட்டுமே, இந்த இரு தொழிற்துறை நகரங்களிலும் தொழிலாளர்கள் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மாணவர் இளைஞர்கள் எல்லா துறைகளிலும் இருண்ட எதிர்காலத்தையே எதிர்கொள்கின்றனர். ஊழலால் சீரழிந்துள்ள கல்லூரி நுழைவுத் தேர்வு முறைமையின் காரணமாக அவர்கள் உயர்கல்வியைப் பெறுவதிலிருந்து தடுக்கப்படுகின்றனர்; இதனால் ஆரம்பத்திலிருந்தே வறுமை மட்டத்திலான ஊதியங்களுக்கு அவர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றனர். அல்லது, பட்டம் பெற்ற பின்னர், பெரும்பாலான பட்டதாரிகளுக்கு தற்காலிக வேலைகள், வேலையின்மை அல்லது தகுதிக்கு தாழ்வான வேலைவாய்ப்பை மட்டுமே வழங்கும் உழைப்புச் சந்தையை அவர்கள் எதிர்கொள்கின்றனர்.

இந்திய அரசாங்கத்தின் சொந்த தொழிலாளர் படை ஆய்வு, நாட்டின் வேலையின்மை விகிதம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கை அரசியல் ரீதியாக மிகவும் வெடிப்புத்தன்மை வாய்ந்ததாக இருந்ததால், மோடி அரசாங்கம் ஆரம்பத்தில் அதனை மறைத்தது. ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் சந்தையில் நுழையும் 10 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களில், மிகச் சிறிய பகுதியினர் மட்டுமே ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலை பெறுகின்றனர். இது தற்செயலானதோ அல்லது தற்காலிகக் கோளாறோ அல்ல. மாறாக, மொத்த நிகரச் சொத்து மதிப்பு 1 டிரில்லியன் அமெரிக்க டாலரைத் தாண்டுகின்றி 229 பில்லியனர்களுக்கு அசாதாரண செல்வத்தை உருவாக்கிக்கொடுத்து, ஒரு முழுத் தலைமுறையையே நிரந்தர பாதுகாப்பின்மைக்குள் தள்ளிவிடும் முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்புரீதியான விளைவாகும்.

போராட்ட இயக்கத்தின் தோற்றம்

ஜூன் 6 அன்று, இந்தியத் தலைநகர் டெல்லியில் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், கரப்பான் ஜனதா கட்சி (CJP) எனத் தம்மை அழைத்துக்கொண்ட புதிய இயக்கத்தின் முதல் பெரிய பொதுநிகழ்வில் பங்கேற்க ஒன்றுகூடியமையே தற்போதைய போராட்டத்தின் உடனடியான ஆரம்பம் ஆகும். இந்த இயக்கம், அரசியல் ஸ்தாபன-எதிர்ப்பை வெளிப்படுத்திய சமூக ஊடக பதிவொன்றுக்கு கிடைத்த பரவலான மக்கள் ஆதரவின் விளைவாக உருவாக்கப்பட்டது. பின்னர், நாட்டின் பல முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணிகளை நடத்திய சிஜேபி, ஜூன் 20 அன்று மத்திய டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியான அமர்வு போராட்டத்தைத் தொடங்கியது. எட்டு நாட்களுக்குப் பின்னர், சுற்றுச்சூழல் மற்றும் கல்விச் சீர்திருத்த செயற்பாட்டாளரான சோனம் வாங்சுக், மாணவர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், அந்தப் போராட்டத் தளத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

சிஜேபியின் பிரதான கோரிக்கை, அரசாங்கத்தால் நடத்தப்படும், NEET எனப் பொதுவாக அறியப்படும் தேசிய தகுதித் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்விலும், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தேர்வுகளிலும் அம்பலமான, திட்டமிட்ட மோசடிகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதாகும்.

இந்தப் போராட்டத்திற்கான ஆரம்பத் தூண்டுதல், மே 3 அன்று நடைபெற்ற நீட் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வின் வினாத்தாள்கள், அரசியல் செல்வாக்கு மிக்க தனியார் பயிற்சி நிறுவனங்களால் கசியவிடப்பட்டமை அம்பலமானதிலிருந்தே உருவானது. ஆண்டுதோறும் 2.3 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் வெறும் 136,000 மருத்துவக் கல்லூரி ஆசனங்களுக்காகப் போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள, மிகக் கடுமையான போட்டித் தேர்வே நீட் ஆகும். பின்னர் அந்தத் தேர்வு இரத்து செய்யப்பட்டு, ஜூன் 21 அன்று மீண்டும் நடத்தப்பட்டது. இதன் விளைவுகள் பேரழிவை ஏற்படுத்தின: தங்களது நம்பிக்கைகள் சிதைந்து, பல ஆண்டுகால தயாரிப்புகள் அனைத்தும் வீணாகிவிட்டதாக உணர்ந்த, குறைந்தபட்சம் 12 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பெயரை நையாண்டி செய்யும் வகையில் உருவாக்கப்பட்ட “கரப்பான் ஜனதா கட்சி”; மேலும் அது வளர்ந்து வரும் சமூகக் கொந்தளிப்பின் வெளிப்பாடாகும். மே 15 அன்று, இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிமன்ற அமர்வின் போது, கோடிக்கணக்கான வேலையற்ற இந்திய இளைஞர்களை “ஒட்டுண்ணிகள்” என்றும் “கரப்பான் பூச்சிகள்” என்றும் இழிவாகக் குறிப்பிட்டார். இந்த அவமதிப்பு தற்செயலானதல்ல. ஆளும் வர்க்கம் தாம் தோல்வியுறச் செய்து கைவிட்ட பெருந்திரளான இளைஞர்களை எவ்வளவு இழிவாக நோக்குகிறது என்பதற்கான அப்பட்டமான வெளிப்பாடாக அது இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அது அவ்வாறே மக்களால் புரிந்துகொள்ளப்பட்டது. இந்திய இளைஞர்கள், அந்த இழிவுச் சொல்லை எதிர்ப்பின் அடையாளமாக மாற்றியுள்ளனர். எவ்வாறெனினும், சிஜேபி ஸ்தாபன அரசியலின் எல்லைகளைத் தாண்டிச் செல்லாமல், போராட்ட இயக்கத்தை மிகவும் வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளுக்குள் மட்டுப்படுத்த முயன்றுள்ளது.

“சன்சத் சலோ”: நாடாளுமன்றத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி

ஜூலை 20, திங்கட்கிழமை, மோடி அரசாங்கத்திற்கு எதிரான சவாலின் வெளிப்பாடாக, நாடாளுமன்றத்தின் “மழைக்காலக் கூட்டத்தொடர்” தொடங்கிய நாளோடு இணைந்த வகையில், பல்லாயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் “சன்சத் சலோ” (நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்லுங்கள்) என்ற பேரணியை முன்னெடுக்க முயன்றனர்.

சிஜேபி தலைமையிலான இயக்கத்தின் பரவலான அளவும் உறுதியும் அரசாங்கத்தை அதிர்ச்சியடையச் செய்திருந்தது. இதனால், பேரணியை முன்கூட்டியே குற்றமாக அறிவித்ததோடு, அதைத் தடை செய்திருப்பதையும் பரவலாகப் பிரசாரம் செய்து, ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்த அரசாங்கம் முயன்றது.

ஆனால், இந்த முயற்சி முற்றிலும் தோல்வியடைந்தபோது, அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் செயல்பட்ட டெல்லி பொலிஸார், கொடூரமான பலப்பிரயோகத்தின் மூலம் அவர்களை எதிர்கொண்டனர். பேரணி நாடாளுமன்றத்தை அடைவதற்கு முன்பே அதைத் தடுக்க, பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தனர். பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதோடு, மீண்டும் மீண்டும் தடியடித் தாக்குதல்களையும் நடத்தினர். அமைதியான முறையில் கூடியிருந்த இளைஞர்களையும் இளம்பெண்களையும் எந்தவித வேறுபாடுமின்றி அவர்கள் தாக்கினர். ஏராளமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 200க்கும் அதிகமானோர் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டதால், அவர்களுக்கு எலும்பு முறிவுகள், தலையில் ஆழமான காயங்கள் மற்றும் கண்ணீர்ப்புகை வாயுவால் கடுமையான நச்சுப் பாதிப்புகள் ஏற்பட்டன. 21 வயதான ஒரு இளம்பெண் மிக மோசமாகக் காயமடைந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் நகர மையத்தை அடைவதைத் தடுக்கும் திட்டமிட்ட நடவடிக்கையாக, டெல்லி மெட்ரோவின் பல நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன. மேலும், தலைநகரின் பல பகுதிகளில் பரவலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், புதுடெல்லி முற்றுகையிடப்பட்ட நகரத்தை ஒத்த தோற்றத்தைப் பெற்றது.

“சன்சத் சலோ” பேரணியில் கலந்து கொண்டவர்களில், முந்தைய இரவு ஜந்தர் மந்தர் போராட்டத் தளத்தை பொலிஸார் வன்முறையாகக் கலைத்தபோது அவர்கள் ஏற்படுத்திய காயங்களை மறைக்கத் தலையில் கட்டுப் போட்டிருந்த பல துணிச்சலான இளைஞர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கல்விச் சீர்திருத்தங்களைக் கோரி கரப்பான் ஜனதா கட்சியின் தொடர்ச்சியான போராட்டங்களின் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 22, புதன்கிழமை, இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு ஆர்ப்பாட்டக்காரர் பொலிஸ் வாகனத்தின் முன்பகுதியில் அமர்ந்திருக்கிறார். [AP Photo/Vipin]

திங்கட்கிழமை நிகழ்வுகளைத் தொடர்ந்து, போராட்ட இயக்கம் தொடர்ந்து விரிவடைந்துள்ளது. ஜந்தர் மந்தர் போராட்டத் தளத்தில் அமர்வு போராட்டம் மீண்டும் தொடங்கப்பட்டதோடு, மும்பை, சென்னை, ஹைதராபாத் மற்றும் பாட்னா உட்பட பல நகரங்களிலும் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இவற்றில், இந்தியாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான பீகாரின் தலைநகரான பாட்னாவில், புதன்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கொடூரமான தாக்குதலை நடத்தினர்.

வியாழக்கிழமை, இளைஞர் போராட்டம் குறித்து தனது மௌனத்தைக் கலைத்த மோடி, சமூக ஊடகத்தில் வெளியிட்ட சுருக்கமான பதிவொன்றில், இந்திய இளைஞர்களின் நலன் குறித்து போலியான அக்கறையை வெளிப்படுத்தினார். கடந்த பத்தாண்டுகளில் டஜன் கணக்கில் இடம்பெற்ற தேசியத் தேர்வு வினாத்தாள் கசிவுகளுக்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்காக, “விரைவு நீதிமன்றம்” ஒன்றை அமைப்பதாகவும் அவர் வாக்குறுதியளித்தார்.

அதேவேளை, திங்கட்கிழமை சிஜேபி பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் சமிக்ஞை காட்டியுள்ளது.

இதுவரை, சிஜேபியின் நிறுவனர் அபிஜீத் திப்கே அந்த அழைப்பை நிராகரித்துள்ளார். முன்னர் வலதுசாரி முதலாளித்துவக் கட்சியான ஆம் ஆத்மி (பொது மனிதர்) கட்சியுடன் தொடர்பு கொண்டிருந்த, தற்போது போஸ்டன் பல்கலைக்கழக மாணவரான திப்கே, போராட்ட இயக்கத்தை நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வி அமைச்சரின் இராஜினாமா என்ற ஒரே விவகாரத்திற்குள் மட்டுப்படுத்துவதற்கு இதுவரை முயன்று வந்துள்ளார். பொதுச் சேவைகளை விரிவுபடுத்தவும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், செல்வந்தர்களின் செல்வத்திலும் இராணுவத்திற்காக வீணடிக்கப்படும் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களிலும் கைவைக்கும் கோரிக்கைகள் எதுவும் முன்வைக்கப்படாதது ஒருபுறம் இருக்க, உயர்கல்விக்கான நீடித்த நிதிப் பற்றாக்குறையைச் சரிசெய்வதற்கோ, மாணவர்களுக்கு வழங்கப்படும் மிகச் சொற்ப நிதி உதவிகளை அதிகரிப்பதற்கோ எந்தக் கோரிக்கையும் முன்வைக்கப்படவில்லை.

ஆயினும், தனது காலடியில் நிலைமைகள் மாறிக்கொண்டிருப்பதையும், தற்போதைய சூழ்நிலையில் திங்கட்கிழமை பொலிஸ் அடக்குமுறையால் மேலும் தீவிரமடைந்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பகைமையுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் திப்கே தெளிவாக உணர்கிறார். “மோடி ஜி,” என்று இந்திய மரியாதைச் சொல்லைப் பயன்படுத்திய திப்கே, “தர்மேந்திர பிரதானின் இராஜினாமாவை ஏற்றுக்கொள்ளுமாறு மீண்டும் ஒருமுறை உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், இந்தப் பிரச்சினை தர்மேந்திர பிரதானின் இராஜினாமாவோடு மட்டுமே நின்றுவிடாது; அது உங்கள் இராஜினாமாவையும் கோரும் நிலைக்கு வரும்,” என்று கூறினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நேற்று வெளியிட்ட செய்தியில், 1980 ஆம் ஆண்டின் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு டெல்லி பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்பலப்படுத்தியது. இந்த “அனுமதி” ஜூலை 15 ஆம் தேதியே வழங்கப்பட்டதுடன், ஜூலை 19 முதல் அக்டோபர் 18 வரை மூன்று மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கொடுங்கோன்மையான சட்டத்தின் கீழ், “அரசின் பாதுகாப்பிற்கோ, பொது ஒழுங்கைப் பேணுவதற்கோ, அல்லது சமூகத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் பராமரிப்பிற்கோ பாதகமான வகையில் செயற்படுவதாக” கருதப்படும் எவரையும், எந்தவொரு முறையான குற்றச்சாட்டும் இன்றி, ஒரு ஆண்டு வரை சிறையில் அடைக்க பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மோடியின் பிரதான கைக்கூலியான, இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் வரலாற்றில் மிகவும் அடக்குமுறையான நடவடிக்கைகளில் சிலவற்றின் வடிவமைப்பாளராக விளங்குபவரான உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த முனைந்துள்ளார். அவர், ஆயிரக்கணக்கான மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (CRPF) வீரர்களையும் விரைவு நடவடிக்கைப் படை (RAF) பிரிவுகளையும் திரட்டி, தலைநகர் முழுவதும் குவித்துள்ளார்.

நிராயுதபாணி இளம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த துணை இராணுவப் படை அணிதிரட்டல், மோடி அரசாங்கத்தின் உள்ளார்ந்த அச்சத்தை அம்பலப்படுத்துகிறது. அரசியல் மற்றும் சமூக எரிமலையின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒரு ஆட்சியே இது—அதனை அது நன்கு அறிந்திருக்கிறது.

ஏப்ரல் மாதம் நொய்டா தொழிலாளர்களின் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலே காட்டியபடி, மாணவர் போராட்டம் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வெடிப்பிற்கு ஒரு தூண்டுதலாக மாறிவிடும் என்பதே இந்த ஆட்சியின் மிகப் பெரிய அச்சமாகும்.

இளைஞர் போராட்டத்தைப் சுரண்டிக்கொள்ளவும் கட்டுப்படுத்தவும் எதிர்க்கட்சிகள் அவசரப்படுகின்றன

இந்தியாவின் முதலாளித்துவ எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் கட்சியும், பெருமிதமான பெயரைக் கொண்டிருந்தாலும் அரசியல் ரீதியில் வெற்றான அதன் “INDIA” கூட்டணியும், போராடும் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் தாங்களே ஆதரவாளர்கள் எனத் தங்களைக் காட்டிக்கொள்ள விரைந்து செயல்பட்டுள்ளன. ஜூலை 20 அன்று தடை செய்யப்பட்ட “சன்சத் சலோ” பேரணியின் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய மறுநாளே, இந்தியாவின் பரம்பரை முதலாளித்துவ “எதிர்க்கட்சியின்” குறியீடாக விளங்கும் ராகுல் காந்தி, மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அவரும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் மோடியின் உத்தியோகபூர்வ இல்லத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அங்கு அவர் டெல்லி பொலிஸாரால் சிறிது நேரம் தடுத்து வைக்கப்பட்டார்.

இந்திய உழைக்கும் மக்களுக்கு எதிராக பாஜக முன்னெடுக்கும் வர்க்கப் போருக்கான மாற்றீடாக காங்கிரஸ் கட்சி இல்லை. மாறாக, அந்த வர்க்கப் போரின் இணை வடிவமைப்பாளர்களில் ஒன்றாக அது விளங்குகிறது. காங்கிரஸ் மற்றும் வலதுசாரி, இனவாத-தேசியவாத மற்றும் சாதியவாதக் கட்சிகளின் கலவையுடனும், ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான சிபிஎம் மற்றும் சிபிஐ உடனும் அமைந்துள்ள அதன் இந்தியா கூட்டணியானது ஒரு மாற்று வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தையே முன்வைக்கின்றன. மோடி அரசாங்கத்தைப் போலவே, அது தொழிலாளர் விரோத, முதலீட்டாளர் ஆதரவு “சீர்திருத்தங்களுக்கும்”, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சீனாவுக்கு எதிரான போர்க்கூட்டணியில் புதுடெல்லி தொடர்ந்து பங்கேற்பதற்கும் அர்ப்பணிப்புடன் இருக்கும்.

வரலாற்று ரீதியாக “இடதுசாரி” என அடையாளப்படுத்தப்பட்ட அமைப்புகளான சிபிஎம், சிபிஐ மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான இந்திய தொழிற்சங்க மையம் (CITU), அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) உட்பட தொழிற்சங்கங்கள், பரவலாகவும் நியாயமான முறையிலும் மதிப்பிழந்துள்ளன. இந்து மேலாதிக்கவாத பாஜகயை எதிர்ப்பதன் பெயரில், பல தசாப்தங்களாக இவை வர்க்கப் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்கி, மத்தியில் வலதுசாரி அரசாங்கங்களுக்கு ஆதரவளித்து, “முதலீட்டாளர் ஆதரவு” கொள்கைகள் என தாங்களே முத்திரைகுத்திய கொள்கைகளை தாங்கள் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் அமல்படுத்தியுள்ளதோடு போராட்ட குணாம்சம் கொண்ட தொழிலாளர்களின் போராட்டங்களை தனிமைப்படுத்தியுள்ளன.

நொய்டா தொழிலாளர்களின் போராட்டமும் தற்போதைய மாணவர் போராட்ட இயக்கமும், பாரம்பரிய ஸ்தாபன அமைப்புகளான தொழிற்சங்கங்களுக்கும் போலியான எதிர்க்கட்சிகளுக்கும் வெளியே வெடித்தெழுந்துள்ளன. இது சமூக நெருக்கடியின் ஆழத்தையும், “இடது” மற்றும் வலது என முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதும் மக்களிடையே நிலவும் பரவலான அந்நியப்படுதலையும் பிரதிபலிக்கும் அதேவேளை, பாஜக அரசாங்கத்திற்கும் மொத்த முதலாளித்துவ ஆளும் வர்க்கத்திற்கும் உண்மையான அச்சுறுத்தலாக உருவெடுக்கக்கூடிய சக்திகளையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.

ஆனால், இத்தகைய ஒவ்வொரு இயக்கமும் எதிர்கொள்ளும் மைய ஆபத்து சிஜேபி தலைமையின் அரசியலிலேயே ஏற்கனவே வெளிப்பட்டுள்ளது. தொழிலாள வர்க்கத்தை ஒரு சோசலிச மற்றும் அனைத்துலக வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அணிதிரட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்காவிட்டால், வெகுஜனப் போராட்டங்கள் எவ்வளவு போர்க்குணமிக்கவையாகவும் துணிச்சலானவையாகவும் இருந்தாலும், அவை முதலாளித்துவ மற்றும் போலி-இடது அரசியல் சக்திகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு, திசைதிருப்பப்பட்டு, இறுதியில் சீர்குலைக்கப்படுவதற்கான அபாயத்திலிருந்து தப்ப முடியாது. 2022 இலங்கையின் வெகுஜன எழுச்சியில் நடந்ததும் இதுவே ஆகும்.

இந்தியாவின் நுழைவுத் தேர்வுகளைச் சூழ்ந்துள்ள கடுமையான போட்டியும் இழிவான ஊழலும், அதேபோல் பரவலான வறுமை மற்றும் வேலையின்மை போன்ற அடிப்படைப் பிரச்சினைகளும், உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியிலேயே வேரூன்றியுள்ள சமூகக் கேடுகளாகும். மாற்றப்பட வேண்டியவற்றை மாற்றிக்கொண்டு கூறுவதானால், பாஜக அரசாங்கமும் பெருநிறுவன ஊடகங்களும் பெருமையாகப் புகழ்ந்து பேசும் இந்தியாவின் “எழுச்சி”, உலகளாவிய ரீதியில், குறிப்பாக உலக முதலாளித்துவத்தின் மையமான அமெரிக்காவில், நடைபெறும் வளர்ச்சிகளையே பிரதிபலிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிலும் தொடர்ந்து அதிகரித்தும் வரும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் சமூகம் பிளவுபட்டுள்ளது; தன்னலக்குழு ஆளும் வர்க்கம் அதி-வலது சர்வாதிகாரத்தைத் தழுவியுள்ளது; உழைக்கும் மக்களின் உரிமைகள் இடைவிடாத தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்ற அதேவேளை, பொதுச் சேவைகளுக்குப் பணமில்லை என்று அரசாங்கம் அறிவித்துக்கொண்டே, மறுஆயுதமயமாக்கலுக்கும் போருக்கும் மிகப்பெரிய வளங்களை வாரி வழங்குகிறது.

சோசலிச எண்ணம்கொண்ட இளைஞர்கள், நொய்டா தொழிலாளர்களிடமிருந்தும் குருகிராம்-மனேசர் தொழில்துறை வளையப் பகுதியிலுள்ள தொழிலாளர்களிடமிருந்தும் தொடங்கி, இந்தப் போராட்ட இயக்கத்தை தொழிலாள வர்க்கத்தை நோக்கித் திருப்புவதற்காகப் போராட வேண்டும். மோடி அரசாங்கத்தைத் தோற்கடித்து, சமூக சமத்துவத்தை அதன் வழிகாட்டும் அடிப்படைக் கொள்கையாகக் கொண்ட ஒரு சமூகத்தை உருவாக்கும் சமூக சக்தி தொழிலாள வர்க்கத்திடமே உள்ளது. ஆனால் அந்த சக்தியை அணிதிரட்ட வேண்டுமானால், தொழிலாள வர்க்கம் ஸ்ராலினிசக் கட்சிகள் உட்பட அனைத்து முதலாளித்துவ ஆதரவுக் கட்சிகளிலிருந்தும் தனது அரசியல் சுயாதீனத்தை நிலைநிறுத்துவதோடு, தொழிலாளர் அரசாங்கத்திற்காகவும் சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுசீரமைக்கும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களைத் தனது தலைமையின் கீழ் அணிதிரட்ட வேண்டும். இதற்கு புதிய வர்க்கப் போராட்ட அமைப்புகள், சுயாதீன அடிமட்ட நடவடிக்கைக் குழுக்கள், மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு புரட்சிகர தொழிலாள வர்க்கக் கட்சி—அதாவது, ஒரு ட்ரொட்ஸ்கிசக் கட்சி—கட்டியெழுப்பப்பட வேண்டும்.

Loading