250,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நகரமாகவும், 8,50,000 பேர் வசிக்கும் பெருநகரப் பகுதியாகவும் திகழும் போர்தோ நகரத்தில் இருந்து மக்களை வெளியேற்றுவது குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றனர். உலகின் மிகச் சிறந்த திராட்சைத் தோட்டங்களில் சிலவற்றைக் கொண்டுள்ள இந்நகரம் 2,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கிறது. மேலும், இந்நகரின் மூன்றில் ஒரு பகுதிக்கும் மேலான பகுதி யுனெஸ்கோ அமைப்பால் உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் பகுதிகள் முழுவதும் அடர்ந்த புகையால் சூழப்பட்டுள்ளன. ஏற்கனவே சாதனை அளவிலான நிலப்பரப்பை எரித்து, தனது பாதையில் இருந்த 2,00,000 மக்களை வெளியேறக் கட்டாயப்படுத்திய காட்டுத்தீயால் இது ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, ஐரோப்பா முழுவதும் தீ விபத்துகளால் இடம்பெயர்ந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,00,000-ஐ எட்டியுள்ளது. நிலவும் கடும் வெப்பமும் புகைமூட்டமும் இப்போது அவற்றிற்கே உரித்தான இடிமின்னலுடன் கூடிய புயல்களை உருவாக்கி வருகின்றன. இதனால் ஏற்படும் மின்னல் தாக்குதல்கள் எரியும் தீயை மேலும் மோசமாக்கக்கூடும்.
உலகின் மிகவும் 10 பணக்கார நாடுகளில் ஒன்றிலும், தனிநபர் சமூகச் செலவினங்களில் மிக உயர்ந்த மட்டங்களைக் கொண்ட கண்டத்திலும் இத்தகைய நிலைமை நிலவுவது, முதலாளித்துவத்தின் மீதான ஒரு மறுக்க முடியாத குற்றச்சாட்டாகும்.
அரசாங்கத்தின் அலட்சியமும் போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததும், மோசமாக நிர்வகிக்கப்படும் காடுகளில் தீ வேகமாகப் பரவுவதற்குக் காரணமாக அமைந்ததோடு, அதைத் தடுப்பதற்கான முயற்சிகளையும் சீர்குலைத்துள்ளன. இந்தப் பெரும் தீயைக் கட்டுப்படுத்த தினமும் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் போராடும் பிரான்சின் தேசியத் தீயணைப்பாளர்கள் கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஒருவர், “இது டேவிட் மற்றும் கோலியாத் மோதும் நிலைமை போன்றது” (ஒரு சிறிய சக்தி பிரம்மாண்டமான சக்தியை எதிர்த்துப் போராடுவது) என்று செய்தியாளர்களிடம் வெட்டவெளிச்சமாகக் கூறினார். ஊழியர்களுக்கும், உபகரணங்களுக்கும் பெரியளவு பற்றாக்குறையாக இருப்பதால், வரவிருக்கும் நவம்பர் மாதம் வரை தீ தொடர்ந்து எரியக்கூடும் என்று ஐரோப்பிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நெருக்கடிக்கு அவசரமாகவும் பிரம்மாண்டமான முறையிலும் தீர்வு காணவும், எதிர்காலத்தில் இதற்கு முகம்கொடுப்பதுக்காக கண்டத்தின் ஆயத்த நிலையை மேம்படுத்தவும் தேவையான வளங்களைக் கேட்டு தொழிலாளர்கள் போராட வேண்டும். ஆனால், இந்தப் பேரழிவுகளை உருவாக்கும் சமூக அமைப்பு முறையை எதிர்த்துப் போராடாமல் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது, ஒரு எரிமலையின் சரிவில் நின்று கொண்டு தீயை அணைக்க முயல்வதைப் போன்றதாகும்.
பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை மிகவும் தவறாக நிர்வகிக்கப்பட்டு, அருவருக்கத்தக்க வகையில் சில பெருஞ்செல்வந்தர்களின் இலாப நலன்களால் ஆதிக்கம் செலுத்தப்படுவதால், சீர்கெட்ட காலநிலை உலகின் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் வளர்ச்சியடைந்த பகுதிகளில் கூட மில்லியன் கணக்கான மக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரான்ஸின் பிற பகுதிகள் மட்டுமல்லாமல் ஸ்பெயின், இத்தாலி, கிரீஸ், பிரித்தானியாவிலும் காட்டுத்தீ பரவி வருகிறது. இது மாட்ரிட், வலென்சியா மற்றும் பாரிஸ் நகரங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கும் அச்சுறுத்தலை விடுத்துள்ளது. சில வாரங்களுக்கு முன்புதான், வட அமெரிக்கா நச்சுமிக்க காட்டுத் தீயின் புகையால் சூழப்பட்டிருந்தது.
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் விஞ்ஞானிகள் “தீ அலை” (Firewave) என்ற புதிய சொல்லை உருவாக்க தள்ளப்பட்டுள்ளனர். தீ அறிவியல்துறை பேராசிரியர் கில்லர்மோ ரெய்ன் இதை, “வெப்ப அலைக்கு இணையான காட்டுத் தீயின் நிகழ்வு: ஒரு நகரம், பிராந்தியம் அல்லது நாட்டின் அவசரகால மீட்புப் படைகளை நிலைகுலைய வைக்கும் அளவிலான விதிவிலக்கான அதிதீவிர காட்டுத் தீயின் காலம்” இது என்று விவரிக்கிறார்.
புதைபடிவ எரிபொருள் உமிழ்வுகளால் பூமியின் சராசரி வெப்பநிலை உயர்வதன் காரணமாக, இத்தகைய நிகழ்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் அவற்றின் தீவிரத்தன்மையும் வெகுவாக அதிகரித்துள்ளன. நீண்ட கால மற்றும் சாதனை அளவிலான வெப்ப அலைகள் — பிரிட்டன் இந்த ஆண்டில் தனது நான்காவது வெப்ப அலையைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது — மற்றும் மோசமடைந்து வரும் வறட்சி ஆகியவற்றின் விளைவாகவே இவை நிகழ்கின்றன.
இந்த நிலைமைகள் காட்டுத் தீயிற்கு வழிவகுத்தது மட்டுமின்றி, கண்டம் முழுவதிலும் 10,000-க்கும் மேற்பட்ட மக்களை கொன்று குவித்துள்ளன — இந்தியானா பல்கலைக்கழகத்தின் மதிப்பீட்டின்படி இது 25,000ம் வரை இருக்கலாம் — மேலும் சுமார் 2,77,000 தொழிலாளர்களை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளன. இவை பல பில்லியன்கணக்கான யூரோக்கள் மதிப்பிலான பொருளாதார சேதத்தை, குறிப்பாக விவசாயத்திற்கு ஏற்படுத்தியுள்ளன.
ஐரோப்பா இந்த ஆபத்துகளை எதிர்கொள்ளும் சூழல் குறித்து விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக எச்சரித்து வருகின்றனர். ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது மனித துன்பங்கள் குறித்து ஏற்கனவே தன் அலட்சியத்தை நிரூபித்த ஒரு ஆளும் வர்க்கம், இவற்றைத் தடுக்க எதுவுமே செய்யவில்லை.
இந்த தன்னலக் குழுக்களைப் பொறுத்தவரை, இது வியாபாரம் செய்வதற்கான ஒரு செலவு மட்டுமே — மற்றவர்கள் தங்களது உயிர்கள், ஆரோக்கியம் மற்றும் வரிகளின் மூலம் இதற்கான விலையைக் கொடுக்கிறார்கள். காலநிலை மாற்றத்தின் செலவுகளைப் புறக்கணித்து சம்பாதிக்கப்போகும் பில்லியன் கணக்கான டாலர்களுடன் ஒப்பிடும்போது, கடந்த ஜூன் மாதத்தில் ஏற்பட்ட பத்தாயிரக்கணக்கான மரணங்களும், ஜூலையில் போர்தோ நகரம் அழியக்கூடும் என்பதும், ஆகஸ்டில் வேறு என்னவெல்லாம் நிகழுமோ என்பதும் இவர்களுக்கு என்ன பெரிய விஷயமாக இருக்கப் போகிறதா?
உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு, இது ஒரு கடுமையான எச்சரிக்கையாகும். மேலும், இது அவர்களை உடனடியாகச் செயல்படத் தூண்டுவதாக அமைய வேண்டும். தொழில்துறைக்கு முந்தைய காலத்து சராசரியை விட, பூமியின் வெப்பமயமாதல் 1.5 டிகிரி செல்சியஸை எட்டும் தொடக்கக் கட்டத்திலேயே இன்றைய சுற்றுச்சூழல் பேரழிவுகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகின் முதலாளித்துவ அரசாங்கங்கள் 2100 ஆம் ஆண்டிற்குள் இந்த நிலையை இருமடங்கிற்கு அருகில் (2.8°C) கொண்டு செல்லும் என்று பெரும்பாலான அதிகாரப்பூர்வ கணிப்புகள் எச்சரிக்கின்றன.
இதன் விளைவுகள் — தீவிர வெப்பம் மற்றும் வறட்சி மட்டுமல்ல, வெள்ளப்பெருக்கு மற்றும் புயல்களும் கூட — வெப்பநிலையில் ஏற்படும் ஒவ்வொரு 0.1 டிகிரி அதிகரிப்புடனும் பன்மடங்கு மோசமடைகின்றன.
இந்த ஆய்வுகளின் ஆசிரியர்கள் எச்சரிப்பது போல, இதன் தாக்கம் ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள ஏழ்மையான நாடுகளைத் தான் மிகவும் கடுமையாகப் பாதிக்கும். ஒரு நவீன மற்றும் நிலையான பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் வாய்ப்பை ஏகாதிபத்தியம் இந்நாடுகளுக்கு வழங்க மறுத்தது. இப்போது, பெரும் செல்வந்தர்கள் புதைபடிவ எரிபொருட்களை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருவதன் மோசமான விளைவுகளை இந்நாடுகள் சுமக்க வேண்டியுள்ளது.
நீடித்த வறட்சியினால் 1.5 மில்லியன் மக்கள் ஆபத்தில் இருக்கும் நிலையில், பட்டினியால் 19 பேர் உயிரிழந்ததாகப் பதிவானதை அடுத்து, உகாண்டா அவசர உணவு விநியோகத்தை இந்த வாரத்தில்தான் தொடங்கியுள்ளது.
எல் நினோ (El Niño) காலநிலை முறையோடு தொடர்புடைய தீவிர வானிலை காரணமாக, 2028 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய உணவுப் பொருட்களின் விலையில் சுமார் 16 சதவீதம் அளவுக்கு உயர்வு ஏற்படும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். முதலாளித்துவத்தின் கீழ், செல்வாக்கு மிக்கவர்கள் மனித உயிர்களை விடத் தங்களின் பங்கு வர்த்தகத்தின் மீதான தாக்கத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுகிறார்கள் என்பதாலேயே ஒரு முதலீட்டு வங்கி இந்தத் தகவலை வழங்குகிறது.
இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஆகிய அமைப்புகள், 22 உயர் ஆபத்துள்ள நாடுகளில் உள்ள 8.8 மில்லியன் மக்களைப் பாதுகாப்பதற்கான குறைந்தபட்ச நடவடிக்கைகளுக்காக 202 மில்லியன் டாலர்களைக் கேட்டு அரசாங்கங்களிடம் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் குறைவான நிதியையே அவை பெற்றுள்ளன.
காலநிலை மாற்றத்தின் விளைவுகள், மரணப் போராட்டத்தில் இருக்கும் முதலாளித்துவத்தின் அனைத்துக் கேடுகெட்ட அறிகுறிகளுடனும் பின்னிப் பிணைந்துள்ளன.
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவுகள், ஆயுதங்களை உற்பத்தி செய்யும் மற்றும் அடுத்தகட்ட நிதிச் சரிவுக்கான சூழலை உருவாக்கும் பொருளாதாரங்களின் உமிழ்வுகளால் தீவிரமடைகின்றன. இதன் விளைவுகளான வறுமை மற்றும் போர்கள், மனிதகுலத்தின் பெரும் பகுதியினரை வறட்சி, வெப்ப அலைகள், வெள்ளப்பெருக்கு, புயல்கள் மற்றும் வைரஸ்களின் பரவலால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளுகின்றன.
அதே நேரத்தில், சுற்றுச்சூழல் நெருக்கடிகள் வளங்களுக்கான இராணுவப் போட்டியை தீவிரப்படுத்துவதோடு தொழிலாளர்களின் வருமானத்தையும் பெருமளவு வெட்டிச் சுருக்குகின்றன. 2024-ல் நிலவிய கடும் வெப்பம் காரணமாக இந்தியாவின் விவசாயம், கட்டுமானம் மற்றும் போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் ஆண்டுக்கு 6 முதல் 10 சதவீதம் வரை ஊதிய இழப்பைச் சந்தித்தது குறித்த சமீபத்திய அறிக்கை ஒன்று, இதனை “வறுமையை பலமடங்கு அதிகரிக்கும் காரணி” என்று விவரித்துள்ளது.
ஒன்றையொன்று தீவிரப்படுத்தும் இந்தப் பேரழிவுகளின் தற்போதைய மையப்புள்ளியாக ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதி (Horn of Africa) திகழ்கிறது. 140 மில்லியன் மக்கள் வாழும் இப்பகுதியின் மக்கள் தொகை 2050-க்குள் இருமடங்காகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, வறட்சி மற்றும் தீவிர வானிலை, ஈரானுக்கு எதிரான அமெரிக்க போரினால் ஏற்பட்ட உர நெருக்கடி, மற்றும் உள்ளூர் மோதல்களால் ஏற்பட்ட அழிவு மற்றும் இடம்பெயர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். இதில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சுமார் 5 மில்லியன் குழந்தைகளும் உள்ளடங்குவர்.
நாகரிகத்தின் மிக அடிப்படையான நிபந்தனையான உலகளாவிய இயற்கைச் சூழலையே ஆபத்தில் ஆழ்த்தும் அளவுக்கு வேறு எந்தவொரு சமூக அமைப்பு முறையும் இந்த அளவுக்கு அழிவுமிக்கதாக இருந்ததில்லை — அணு ஆயுதப் போரின் உடனடிப் பேரழிவு மட்டுமல்லாமல், புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் சரிவு போன்ற நீண்டகாலப் பேரழிவுகளாலும் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளது.
போரைப் போலவே, காலநிலை நெருக்கடியும் எமது காலத்தின் மிக முக்கியமானப் பிரச்சினைகளில் ஒன்றாகும். சர்வதேச தொழிலாள வர்க்கம் இதை அனுபவித்தே தீர வேண்டும் அல்லது இதனை தீர்க்க வேண்டும். வலதுசாரி அரசியல்வாதிகளும் அவர்களின் ஊடகப் பிரச்சாரப் பீரங்கிகளும் உரிமை கோருவதைப் போல, இது வசதி படைத்த நடுத்தர வர்க்கத்திற்கு மட்டுமே ஆர்வமுள்ள ஒரு “வாழ்க்கை முறை” கேள்வி அல்ல. மாறாக, இது ஒவ்வொரு தொழிலாளிக்கும் வாழ்வா சாவா என்ற கேள்வியாகும். பசுமை இயக்கம் உரிமை கோருவது போல, இது தனிப்பட்ட பொறுப்பு பற்றிய கேள்வி அல்ல, மாறாக இது ஒரு கூட்டு வர்க்கப் போராட்டமாகும்.
மேலும், இது தவிர்க்க முடியாத வகையில் ஒரு புரட்சிகரமான கேள்வியாகும்.
கடந்த ஜூன் மாதம், உலக சமத்துவமின்மை ஆய்வகம் உலகளாவிய நீதி அறிக்கையை வெளியிட்டது. இயற்கை அறிவியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஆய்வுகளின் பெரும் தொகுப்பின் அடிப்படையில், 2100-ஆம் ஆண்டிற்குள் புவி வெப்பமயமாதலை 2°C ஆகக் கட்டுப்படுத்தி, அதன் விளைவுகளைச் சமாளிப்பதற்கான தழுவல் நடவடிக்கைகளில் முதலீடு செய்வதன் மூலம், பெரும்பான்மையான மக்களுக்கு மிக உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கான பொருள்சார் சாத்தியக்கூறுகளை அது நிரூபிக்கிறது.
இருப்பினும், இந்த ஆய்வின் ஆசிரியர்கள் 20 சதவீதம் வரையிலான உலகளாவிய சொத்து வரிகள் மற்றும் 90 சதவீதம் வரையிலான வருமான வரிகள் மூலம் இதைச் செய்ய முன்மொழிகின்றனர். இதுபோன்ற அனைத்து சீர்திருத்தவாதப் பகல் கனவுகளின் பயனற்ற தன்மையை மட்டுமே இது நிரூபிக்கிறது.
இந்த வரிகள் யாருக்குப் பொருந்துமோ, அந்த தன்னலக்குழு ஒரு பைசாவைக் கூட விட்டுக்கொடுக்காது. ஜனநாயகத்தை மிதித்து, புதைபடிவ எரிபொருள் பிரித்தெடுப்பை ஊக்குவிக்கும் டொனால்ட் ட்ரம்ப், இந்த வர்க்க யதார்த்தத்தின் அருவருப்பான தனிநபர் வடிவமாகத் திகழ்கிறார். அமெரிக்காவிலும் அதற்கு அப்பாலும் உள்ள இதன் பல-மில்லியனர் மற்றும் பில்லியனர் உறுப்பினர்கள், தங்கள் சொத்துக்களின் மதிப்பு குறைவதைக் காட்டிலும் ஒரு சர்வாதிகாரத்தைப் பார்க்கவே விரும்புகிறார்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
மிகப்பெருஞ் செல்வந்தர்களால் ஏகபோகமாக்கப்பட்டுள்ள சமூகச் செல்வமும், அதனுடன் சேர்த்து மனிதகுலத்தின் விதியை வழிநடத்தும் அதிகாரமும், தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தின் மூலம் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பூமியின் காலநிலையைத் தீவிரமாக மாற்றியமைக்கும் அளவுக்கு உற்பத்தித் திறனைக் கொண்டிருந்தும், அதே சமயம் தனது குடிமக்கள் அனைவருக்கும் உணவளித்து அவர்களைப் பாதுகாக்கும் திறன் இல்லாதது போன்றதொரு முரண்பாடான நிலையை, ஜனநாயக மற்றும் அறிவியல் பூர்வமான திட்டமிடலின் மூலமாக மட்டுமே முடிவுக்குக் கொண்டுவர முடியும்.
இதுவே உலக சோசலிசப் புரட்சியின் முன்னோக்காகும். இப்போது தங்கள் வீடுகளிலிருந்து தீயினால் விரட்டப்படும் ஐரோப்பியத் தொழிலாளர்களாலும், முதலாளித்துவத்தின் காலநிலை நெருக்கடியின் விளைவுகளால் அச்சுறுத்தப்படும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்களாலும் இந்தப் புரட்சி முன்னெடுக்கப்பட வேண்டும்.
