வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீ ஐரோப்பாவைச் சூறையாடி வருவதால், சுமார் 4,00,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இந்த கோடைக்காலத்தின் மூன்றாவது வெப்ப அலையால் ஐரோப்பாவில் உருவான காட்டுத்தீ, இதுவரை பதிவானவற்றில் மிக மோசமான வெப்ப அலை பருவமாகக் கருதப்படும் சூழலில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் 3,75,000-க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் விடுமுறை தங்குமிடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பிரெஞ்சு நகரமான போர்டோவின் (Bordeaux) நகர சபை “தேவைப்பட்டால் முழுமையான வெளியேற்றத்தை” பரிசீலித்து வரும் நிலையில், இந்த எண்ணிக்கை தவிர்க்க முடியாமல் 4,00,000-ஐ நோக்கி உயர்ந்து வருகிறது.

ஸ்பெயினின் ஆவிலா மாகாணத்தில் உள்ள லா அத்ராடா அருகே காட்டுத்தீ முன்னேறும்போது புகையும் தீப்பிளம்புகளும் எழுகின்றன, வெள்ளிக்கிழமை, ஜூலை 24, 2026 [AP Photo/Manu Fernandez]

ஐரோப்பாவின் மீது உருவான வெப்பக் குவிமாடம், பல நாடுகளில் சாதனை அளவிலான வெப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் மாத இறுதியில் வெப்ப அலை உச்சத்தை எட்டியபோது, கண்டத்தின் பெரும்பகுதியில் வெப்பநிலை வழக்கத்தைவிட 14–18°C அதிகமாக இருந்தது. அதன்பிறகு வெப்பம் தணியவில்லை. சமீபத்திய காட்டுத்தீ பரவத் தொடங்கியபோது, ஜூலை 18 அன்று சிசிலியின் காஸ்டெல்டெர்மினி (Casteltermini) நகரில் 48.4°C வெப்பநிலை பதிவானது. இந்த வெப்ப அலையின்போது ஐரோப்பாவில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். வியாழக்கிழமை, ஸ்பெயினின் தென்கிழக்குப் உள்பகுதிகளிலும் குவாடல்கிவிர் (Guadalquivir) பள்ளத்தாக்கு முழுவதும் வெப்பநிலை 44°C-ஐ எட்டியது.

உள்துறை அமைச்சர் லோரன்ட் நுனெஸ் கூறியபடி, பிரான்ஸ் தனது வரலாற்றிலேயே “அநேகமாக” மிகப்பெரிய அமைதிக்கால பொதுமக்கள் வெளியேற்றத்தைச் சந்தித்துள்ளது. நாட்டின் முக்கிய விடுமுறைத் தலங்களில் ஒன்றான தென்மேற்கு ஜிரோண்ட் (Gironde) பிராந்தியத்தைத் தரை மற்றும் கடல் வழியாக முழுமையாகக் காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர். மேலும், 2,74,000-க்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட துறைமுக நகரமான போர்டோ, தனது சொந்த வெளியேற்றத்திற்கான திட்டங்களைத் தயாரிக்கத் தொடங்கியது.

ஸ்பெயினில், காட்டுத்தீ காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டது. 90,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். சனிக்கிழமை மாலை, வலென்சியா அருகேயுள்ள பள்ளத்தாக்கில், தனது காருக்குள் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது. இதுவரை மூன்று தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர்; அவர்களில் ஒருவர் இத்தாலியிலும், இருவர் பிரான்ஸிலும் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமைக்குள், பிரான்ஸின் தென்மேற்கில் எரிந்து கொண்டிருந்த முக்கிய காட்டுத்தீயின் பாதையிலிருந்து 2,20,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 98,000 ஹெக்டேர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ள நிலையில், இது ஒரு புதிய சாதனையாகப் பதிவாகியுள்ளது. புதன்கிழமை ஜிரோண்ட்  பிராந்தியத்தின் சோமோஸ் (Saumos) அருகே தொடங்கிய தீ, தனது சொந்த வானிலைச் சூழலையே உருவாக்கியது. 20 கிலோமீட்டருக்கும் அதிகமாக நீண்டிருந்த தீ முனையால் தங்கள் வீரர்கள் நிலைமையைச் சமாளிக்க முடியாமல் திணறினர் என்று ஜிரோண்ட் தீயணைப்பு வீரர்கள் தொழிற்சங்கத் தலைவர் செபாஸ்டியன் பெர்ஜே (Sébastien Berge) தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை, லோரன்ட் நுனெஸ், தீ போர்டோவை நோக்கி முன்னேறி வரும் நிலையில், அது தொடர்ந்தும் மிகத் தீவிரமாகவும், கணிக்க முடியாத வகையிலும் உள்ளது என்று கூறினார்.

அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள காப் ஃபெரெட் (Cap Ferret) தீபகற்பத்தின் ஒரே அணுகுமுறைச் சாலை தீப்பிளம்புகளால் அச்சுறுத்தப்பட்டதால், அங்கிருந்து சுமார் 44,000 பேர் தப்பிச் சென்றனர்; படகுத்துறைகளில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை படகுகள் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தெற்கே உள்ள பிஸ்காரோஸில் (Biscarrosse), வெளியேற்றப்பட்டவர்களில் குழந்தைகளுக்கான கோடைக்கால முகாம் மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். விடியற்காலையில் காட்டுப்பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட 86 வயதான ஜான் மசோடியே (Jean Mazodier), லு மொண்ட் (Le Monde) நாளிதழிடம் கூறுகையில்: “எல்லாமே எரிந்துவிட்டது. இது ஒரு குழந்தையை இழந்ததைப் போன்ற உணர்வைத் தருகிறது” என்றார்.

வார இறுதிக்குள் தீ போர்டோ (Bordeaux) நகரை நோக்கித் திரும்பியதைத் தொடர்ந்து, நகரின் விமான நிலையம் மற்றும் அதைச் சுற்றிய பரந்து விரிந்த புறநகர் பகுதிகளில் வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. நகரை ஒட்டியுள்ள கிராமங்களில் இருந்து ஒரே இரவில் சுமார் 55,000 பேர் வெளியேற்றப்பட்டனர். மேயர் தோமா காசனாவ் (Thomas Cazenave), தீ பெருநகரப் பகுதியின் வாசலை எட்டியுள்ளது  என்று கூறியதுடன், முழுமையான வெளியேற்றம் வரை செல்லக்கூடிய பல்வேறு சூழ்நிலைகளுக்கான திட்டங்களை நகராட்சி ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தார். தென்மேற்குப் பிரான்ஸில் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 68 தீயணைப்பு வீரர்கள் காயமடைந்தனர்.

நகருக்கு வெளியே தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டியிருந்த நிலையில், பிரான்ஸின் போர்டோவில் உள்ள போர்டோ கண்காட்சி மையத்தில் வெளியேற்றப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர், ஞாயிற்றுக்கிழமை, ஜூலை 26, 2026 [AP Photo/Caroline Blumberg]

1,500-க்கும் மேற்பட்ட பிரெஞ்சு ராணுவ வீரர்களும், கூடுதலாக 1,700 பாதுகாப்புப் பணியாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்; தீயணைக்கும் நீர் ஊற்றும் விமானங்களுடன் A400M ராணுவப் போக்குவரத்து விமானமும் இணைந்துள்ளது. பாதுகாப்புப் படைகள் மறுபடியும் களமிறக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாரிஸில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ‘டூர் டி பிரான்ஸ்’ (Tour de France) போட்டியின் இறுதிச் சுற்று சுருக்கப்பட்டது.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிவில் பாதுகாப்பு பொறிமுறையைச் செயல்படுத்தி, குரோஷியா, போர்த்துக்கல், செக் குடியரசு மற்றும் ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளிலிருந்து விமானங்கள் மற்றும் பணியாளர்களைப் பெற்றார்; ஜெர்மனி ஹெலிகாப்டர்களையும் மீட்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றின் நாட்டின் தலைவர், பல மாதங்களாக முன்னறிவிக்கப்பட்ட ஒரு அவசரநிலையின் போது விமானங்களுக்காக கண்டம் முழுவதிலும் கோரிக்கை விடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பது, ஐரோப்பா முழுவதிலும் உள்ள எந்தவொரு முதலாளித்துவ அரசாங்கமும் தனது மக்களைப் பாதுகாப்பதற்கான வளங்களைக் கொண்டிருக்கவில்லை என்பதற்கான ஒப்புதலாகும்.

ஸ்பெயினில், மெட்ரிட் மற்றும் ஆவிலா (Ávila) மாகாணத்தை உள்ளடக்கிய தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, செயல்பாட்டுக் கட்டுப்பாடு ராணுவத்தின் அவசரநிலைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு முன்பு, 2025 ஏப்ரலில் நாடு தழுவிய மின்தடையின் போது மட்டுமே இத்தகைய தேசிய அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்தது. மெட்ரிட்டுக்கு மேற்கே ஏற்பட்ட இரண்டு பெரிய காட்டுத்தீகள் ஒன்றிணைந்து, ஸ்பெயின் தலைநகருக்கு 50 கிலோமீட்டர் தொலைவு வரை நெருங்கின. ஞாயிற்றுக்கிழமைக்குள், தோலேடோ (Toledo) அருகே புதிதாக வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆவிலாவிலிருந்து 30,000-க்கும் அதிகமானோரும், கிழக்கில் உள்ள கஸ்டெயோன் (Castellón) பகுதியில் இருந்து 15,000-க்கும் அதிகமானோரும் வெளியேற்றப்பட்டனர்.

மெட்ரிட்டின் பிராந்திய அவசரநிலைத் தலைவர் கார்லோஸ் நோவில்லோ (Carlos Novillo), தீ “அதன் உச்சத்தில் உள்ளது என்றும், தற்போது அதைக் கட்டுப்படுத்துவது தீயணைப்பு வீரர்களின் திறனுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது” என்றும் ஒப்புக்கொண்டார். பிராந்தியத் தலைவர் இசபெல் டயஸ் ஆயுசோ (Isabel Díaz Ayuso) அதை “எங்கள் பிராந்தியத்தின் வரலாற்றிலேயே மிக மோசமான காட்டுத்தீ” என்று அழைத்தார். மெட்ரிட் பிராந்தியத்தில் சுமார் 24,000 ஹெக்டேரும், ஆவிலாவில் 21,000 ஹெக்டேரும் எரிந்து சாம்பலானதாக எல் முண்டோ (El Mundo) செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்பெயினும் ஐரோப்பிய ஒன்றிய பொறிமுறையின் மூலம் விமானங்களைக் கோரியது.

இத்தாலியில், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் 40,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. இது அண்மைய ஆண்டுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில் 81 சதவீத அதிகரிப்பாகும். சிசிலி முழுவதும் பல நாட்களாக காட்டுத்தீ கொழுந்துவிட்டு எரிந்து வந்தது. அங்கு வெப்பநிலை 40°C-ஐத் தாண்டியதுடன், வெப்பமான பலத்த காற்றும் தீ மேலும் வேகமாகப் பரவக் காரணமாக இருந்தது. வாரத்தின் நடுப்பகுதியில், தீயை அணைக்கும் நீர் வீச்சு விமானங்களின் உதவியுடன், சுமார் 6,000 தீயணைப்பு வீரர்கள், வனக் காவலர்கள் மற்றும் சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் குறைந்தது 50 காட்டுத்தீகளைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக பிராந்தியத் தலைவர் ரெனாட்டோ ஷிஃபானி (Renato Schifani) தெரிவித்தார்.

இந்த வார இறுதியில் காட்டுத்தீ சிசிலியிலிருந்து இத்தாலியின் பிரதான நிலப்பரப்புக்கும் பரவியது. ஞாயிற்றுக்கிழமை, புக்லியா (Puglia) பகுதியில் உள்ள கர்கானோ (Gargano) நிலமுனையில் ஏற்பட்ட பெரிய காட்டுத்தீ கடற்கரையை எட்டியது. இதையடுத்து, கடற்கரைகளில் இருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் படகுகள் மூலம் வெளியேற்றப்பட்டனர். சிசிலியில், பலேர்மோ (Palermo) மற்றும் டிரபானி (Trapani) மாகாணங்களுக்கு சிவில் பாதுகாப்பு அமைப்பு மீண்டும் மிக உயர்ந்த அளவிலான காட்டுத்தீ எச்சரிக்கையை அறிவித்தது.

கிரீஸில், கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட 50 கிராமப்புற மற்றும் காட்டுத்தீ சம்பவங்களுக்கு தீயணைப்பு வீரர்கள் பதிலளித்தனர். பெரும்பாலான தீகள், அவற்றின் ஆரம்ப நிலையிலேயே தரைவழி தீயணைப்புப் படையினரும் வான்வழி தீயணைப்பு பிரிவினரும் இணைந்து கட்டுக்குள் கொண்டுவந்ததாக தோ விமா (To Vima) நாளிதழ் வியாழக்கிழமை தெரிவித்தது. மிகப்பெரிய தீயணைப்பு நடவடிக்கைகள், கிரீட் (Crete) தீவில் உள்ள ரெதிம்னோ (Rethymno) பிராந்தியத்தின் ஜோனியானா (Zoniana), அட்டிகா (Attica) பிராந்தியத்தின் அபிட்னெஸ் (Afidnes), அக்ரினியோ (Agrinio) அருகேயுள்ள அனோ கெரசோவோ (Ano Kerasovo), கெஃபலோனியா (Kefalonia) தீவின் கல்லிகட்டா (Kalligata), பிகெர்மி (Pikermi) பகுதியில் உள்ள இமெரோ பெஃப்கோ (Imero Pefko), மற்றும் லூட்ராக்கி (Loutraki) அருகேயுள்ள பெராச்சோரா (Perachora) ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்பட்டன. தலைநகர் ஏதென்ஸை உள்ளடக்கிய அட்டிகா, எவியா (Evia) மற்றும் ரோட்ஸ் (Rhodes) ஆகிய பகுதிகளுக்கு மிக அதிக காட்டுத்தீ அபாயத்தைக் குறிக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான காட்டுத்தீ தெற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியைச் சூழ்ந்திருப்பதற்குக் காரணம், கார்பன் உமிழ்வுகளையும் புவி வெப்பமடைதலையும் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை உலக நாடுகளின் அரசுகள் எடுக்கத் தவறியதே ஆகும். இதனுடன், பல தசாப்தங்களாக வனத்துறை மற்றும் சிவில் பாதுகாப்புத் துறைகளுக்கான நிதி குறைக்கப்பட்டு கைவிடப்பட்டமையானது இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது.

வெப்பமான தட்பவெப்பநிலை கொண்ட பகுதிகளில் மட்டுமல்லாமல், வடக்கில் பிரிட்டன் முதல் நோர்வே வரையிலான பகுதிகளிலும் தீ பரவியுள்ளது.

உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதார நாடான பிரிட்டன், எந்த வகையான வான்வழி தீயணைப்பு திறனையும் கொண்டிருக்கவில்லை. ஸ்காட்லாந்தில் உள்ள கெயர்ன்கோர்ம்ஸ் (Cairngorms) தேசியப் பூங்காவில், ஜூலை 15 முதல் எரிந்து வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 500-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி (John Swinney), யுகே தொழிற்கட்சி அரசாங்கத்திடம் வான்வழி ஆதரவுக்காக ராணுவ உதவியை கோரியுள்ளதாகவும், அதற்கான பதிலை நாங்கள் இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு வேல்ஸ் மற்றும் அப்பர் செவர்ன் (Upper Severn) ஆகிய பகுதிகள், ஜூலை மாத சராசரி மழையளவில் வெறும் 3 சதவீதத்தை மட்டுமே பெற்ற நிலையில், பிரிட்டனில் வறட்சியை அறிவித்த முதல் பகுதிகளாக மாறியுள்ளன; அத்துடன் வரும் வாரத்தில் நான்காவது வெப்ப அலை வீசக்கூடும் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது. வேர்ல்ட் வெதர் அட்ரிபியூஷன் (World Weather Attribution) கூட்டமைப்பு இந்த வாரம் வெளியிட்ட பகுப்பாய்வில், கண்டத்தை உலர வைக்கும் ஆவியாதல் நிலைமைகள், உலகளாவிய வெப்பமயமாதலால் மேற்கு ஐரோப்பாவில் 80 மடங்கும் கிழக்கில் 40 மடங்கும் அதிக சாத்தியக்கூறைக் கொண்டுள்ளன எனக் கண்டறியப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை, உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிராந்தியத் தலைவர் ஹான்ஸ் ஹென்றி பி. குளூகே (Hans Henri P. Kluge) எச்சரித்தார்! பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் மேலும் வெப்பமடைந்து வரும் நிலையில், அடிக்கடி ஏற்படும் தீவிரமான காட்டுத்தீகளை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். 2022 முதல், உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பியப் பிராந்தியம் முழுவதும் காட்டுத்தீக்களின் எண்ணிக்கை 57 சதவீதம் அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு போர்த்துக்கல் மற்றும் ஸ்பெயின் நாடுகளில் காட்டுத்தீ சம்பவங்கள் 100 சதவீதம் அதிகரித்துள்ளன.

ஐரோப்பிய காட்டுத்தீ தகவல் அமைப்பின் (EFFIS) கூற்றுப்படி, கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு எரிந்து சாம்பலானது; அதேவேளையில் இந்த ஆண்டு ஜூலை 22 நிலவரப்படியே 2,54,388 ஹெக்டேர் நிலப்பரப்பு ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டது. அதற்குப் பிந்தைய நாட்களில், இந்த அழிவு கணிசமாக மோசமடைந்துள்ளது.

பாரிஸ் நகரை முக்கியமாகக் கொண்ட பிரான்ஸ், ஆண்டுதோறும் 100 மில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் உலகின் மிக அதிகமானோரால் பார்வையிடப்படும் நாடாகும். இந்தத் தொடர்ச்சியான சமூகப் பேரழிவிற்கு பிரெஞ்சு அரசாங்கம் அளித்த பதிலானது, எக்காரணம் கொண்டும் நிறுவனங்களின் வருவாயில் எந்தப் பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதாகவே இருந்தது. வெளியுறவு அமைச்சகத்தின் இளநிலை அமைச்சர் எலியனோர் கரோயிட் (Éléonore Caroit) சனிக்கிழமையன்று பிபிசி-யிடம் பேசுகையில், சுற்றுலாப் பயணிகள் தங்கள் விடுமுறைப் பயணங்களை ரத்து செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். “நான் பாரிஸில் இருக்கிறேன், இங்கே எதுவுமே நடக்கவில்லை [!], பெரும்பாலான பிற பகுதிகளும் இயல்பாகவே உள்ளன,” என்று அவர் கூறினார்.

பாரிஸுக்குத் தென்கிழக்கே அமைந்துள்ள ஃபோன்டைன்ப்ளூ (Fontainebleau) காட்டில் சுமார் 2,000 ஹெக்டேர் பரப்பளவைத் தீ நாசமாக்கி, 1,000 பேரை வெளியேற்றக் கட்டாயப்படுத்தியதுடன், தலைநகர் பிராந்தியத்தைப் பாதுகாக்க அதன் வரலாற்றிலேயே முதல்முறையாக நீர் வீச்சு விமானங்கள் செய்ன் (Seine) நதியிலிருந்து நீரை அள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட இரண்டு வாரங்களுக்குள்ளாகவே இந்தக் கருத்து வெளிவந்தது.

ஜூலை 14 அன்று உலக சோசலிச வலைதளம் (WSWS) செய்தி வெளியிட்டிருந்தபடி, யூரோமோமோ (EuroMOMO) அமைப்பானது இந்த கோடைகால வெப்ப அலையினால் சுமார் 10,600 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. மேலும், பொலிடிகோ (Politico) நடத்திய பகுப்பாய்வில், ஜூன் மாத வெப்ப அலையின் போது மட்டும் ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய ஆறு நாடுகளில் 14,000 அதிகப்படியான மரணங்கள் பதிவாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது. இத்தாலி, போர்த்துக்கல் மற்றும் கிரீஸ் போன்ற கடுமையாகப் பாதிக்கப்பட்ட பிற நாடுகளில் ஏற்பட்ட மரணங்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

கடுமையான வெப்பநிலை காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பாவில் சுமார் 200,000 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. இந்த மரணங்களில் பெரும்பாலானவை முற்றிலும் தவிர்க்கக்கூடியவை என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அவை தடுக்கப்படாமல் போவதற்குக் காரணம், பெரும் செல்வந்த முதலாளித்துவ வர்க்கத்தினராலும் அவர்களின் நலன்களுக்காகச் செயல்படும் அரசாங்கங்களாலும் கட்டுப்படுத்தப்படும் சமூக வளங்கள் வேறு தேவைகளுக்குத் திருப்பிவிடப்பட்டிருப்பதே ஆகும். தீப்பிழம்புகளுக்கு எதிராக நீர் வீச்சு விமானங்களை வழங்குமாறு தற்போது ஒருவரிடம் ஒருவர் கோரிக்கை விடுத்துக்கொண்டிருக்கும் அதே அரசாங்கங்கள், மறுஆயுதமயமாக்கலுக்காக நூற்றுக்கணக்கான பில்லியன்களை வாரி இறைக்கின்றன. ஐரோப்பாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களில் ஆறு நிறுவனங்கள், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 21.7 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளன; இது 2025-ஆம் ஆண்டை விட 43 சதவீதம் அதிகமாகும்.

Loading