மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டு நிறைவுக்கு முன்னரே, பிரிட்டிஷ் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் செவ்வாய்க்கிழமை அமெரிக்க காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அமெரிக்கப் புரட்சி யாருக்கு எதிராகப் போராடியதோ, அந்த மன்னர் மூன்றாம் ஜோர்ஜின் ஐந்தாம் தலைமுறை வாரிசான சார்ல்ஸ், ஆளும் வர்க்கத்தாலும் அதன் இரண்டு அரசியல் கட்சிகளாலும் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனாநாயகக் கட்சி) முழு அரசு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.
ட்ரம்பின் மனப்பான்மையையும், அபிலாஷைகளையும் சுருக்கமாகக் கூறும் வகையில், வெள்ளை மாளிகை சனிக்கிழமை மதியம், ட்ரம்ப்பும் சார்லஸும் ஒன்றாக இருக்கும் ஒரு புகைப்படத்தை, “இரண்டு மன்னர்கள்” என்ற தலைப்பின் கீழ் வெளியிட்டது.

இந்த ஆடம்பரக் காட்சி, செவ்வாய்க்கிழமை காலை வெள்ளை மாளிகையில் தொடங்கியது. அங்கு சார்ல்ஸிற்கு 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை அளிக்கப்பட்டதுடன். ஒரு நாட்டின் தலைவரின் வருகைக்கான மிக உயர்ந்த இராஜதந்திர மரியாதையான “படைகளின் அணிவகுப்பை பார்வையிடுதல்” நிகழ்ச்சியில் அவர் ட்ரம்ப்புடன் பங்கேற்றார். இதன்பின்பு, வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, சார்ல்ஸ் கேபிடல் ஹில்லுக்குச் சென்றதன் மூலம், காங்கிரஸின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய இரண்டாவது பிரிட்டிஷ் மன்னரானார்.
அன்று மாலையில், வெள்ளை மாளிகையின் அரச விருந்தினர் மண்டபத்தில் மன்னருக்கும் ராணி கமீலாவிற்கும் கௌரவ விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்கான விருந்தினர்கள் பட்டியல் ட்ரம்ப்பால் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில், அமெரிக்காவின் “நிழல் முடியாட்சியை” உருவாக்குகின்ற செல்வம் மற்றும் அதிகாரத்தைக் கொண்ட தன்னலக்குழுக்கள் இடம்பெற்றிருந்தனர். பாரமவுண்ட் தலைமை நிர்வாக அதிகாரி டேவிட் எலிசன், அமேசானின் ஜெஃப் பெசோஸ், ஆப்பிளின் டிம் குக் மற்றும் என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் ஆகியோர் கலந்துகொண்டவர்களில் அடங்குவர். அவர்கள், ட்ரம்பின் பாசிச அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பல வலதுசாரி ஊடக ஆளுமைகள், துணிகர முதலீட்டாளர்களுடன் சேர்ந்து டோவர் சோல் மீன் மற்றும் வசந்தகால மூலிகைகள் கலந்த ரவியோலி உணவை உண்டு மகிழ்ந்தனர்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் நிலைப்பாட்டில் இருந்து பார்த்தால், இந்த விஜயம் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையில் சற்றே விரிசல் கண்டுள்ள “சிறப்பு உறவை” வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. காங்கிரஸில் சார்ல்ஸ் ஆற்றிய உரை, “அமைதி” மற்றும் “நட்பு” குறித்த வெற்று உபதேசங்கள் அடங்கிய வழக்கமான அரச மொழியில் பொதிந்திருந்தது. “கிறிஸ்தவ நம்பிக்கையை” அடிப்படையாகக் கொண்ட அந்த உரையின் போர்வையில் இருந்த உண்மையான அக்கறை இதுதான்: அது போர்.
பனிப்போருக்குப் பிறகு பிரிட்டிஷ் இராணுவச் செலவினங்களில் ஏற்பட்டுள்ள “மிகப்பெரிய நீடித்த அதிகரிப்பு” குறித்து சார்லஸ் பெருமை பீற்றிக்கொண்டார். மேலும், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் தொடர்ச்சியான ஈடுபாட்டை ஊக்குவிப்பதில் அவர் குறிப்பாக கவனம் செலுத்தினார். “மன்னர்கள் வேண்டாம்” என்று தமது நேர்மையற்ற ஆதரவைத் ட்வீட் செய்த அதே ஜனநாயகக் கட்சியினர், ஒரு உண்மையான மன்னர் போரைப் பற்றிப் பேசிய தருணத்தில் எழுந்து நின்று கைதட்டினர். போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் பிற அழிவுச் சாதனங்களின் உற்பத்தியில் வெளிப்படும் இரு நாடுகளின் “கூட்டுப் பிணைப்பை” குறிப்பிடுவதற்காக சார்ல்ஸ் சிறிது நேரத்தைச் செலவிட்டார்.
பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கம் “பழைய அரச மற்றும் பிரபுத்துவ கோட்டையை வணிக நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளது” என்று ட்ரொட்ஸ்கி ஒருமுறை குறிப்பிட்டார் - அந்த விளக்கம் இன்றும் அதன் முழு வலிமையையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. அரச குடும்பம் ஊழலிலும் முறைகேடுகளிலும் மூழ்கியிருந்தாலும் கூட, முடியாட்சியானது பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் ஒரு கருத்தியல் மற்றும் அத்தியாவசியமான அரசியல் ஆதாரமாக செயல்பட்டு வருகிறது.
சார்ல்ஸின் சகோதரரும் ட்ரம்ப்பின் நண்பருமான இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் பாலியல் துஷ்பிரயோக வலையமைப்பில் நேரடியாகச் சிக்கியுள்ளார், மேலும் அவர் பொதுப் பணிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அதேவேளை எப்ஸ்டீனைச் சுற்றியுள்ள தகவல்கள், முடியாட்சி, நிதித்துறை, உளவு அமைப்புகள் மற்றும் உலகளாவிய ஆளும் உயரடுக்கினரை இணைக்கும் செல்வம் மற்றும் குற்றச் செயல்களின் சர்வதேச வலையமைப்பை அம்பலப்படுத்தியுள்ளன. ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி ரோ கன்னா ஏற்பாடு செய்திருந்த எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுடனான சந்திப்பில் கலந்துகொள்ள சார்ல்ஸ் மறுத்துவிட்டார். இருப்பினும், இது ரோ கன்னா தனது சக ஜனநாயகக் கட்சியினரான பெர்னி சாண்டர்ஸ் மற்றும் அலெக்ஸாண்டிரியா ஒகாசியோ-கோர்டெஸ் ஆகியோருடன் இணைந்து மன்னருக்கு மரியாதை செலுத்துவதைத் தடுக்கவில்லை.
ஆனால், சார்ல்ஸின் விஜயத்தின் மிக அடிப்படையான முக்கியத்துவம் அமெரிக்கச் சூழலில் தான் அடங்கியுள்ளது. இந்த அருவருக்கத்தக்கக் காட்சி, அமெரிக்க ஆளும் வர்க்கம் நீண்ட காலத்திற்கு முன்பே கைவிட்ட புரட்சிகர மரபுகளுடனான அதன் தற்போதைய உறவை அம்பலப்படுத்துகிறது.
அமெரிக்கப் புரட்சியானது அறிவொளிக் காலத்துக் கொள்கைகளின் அடிப்படையில் உலகின் முதல் பெரும் முதலாளித்துவ ஜனநாயகக் குடியரசை நிறுவியது. அரசியலமைப்பின் பிரிவு I, உட்பிரிவுகள் 9 மற்றும் 10-ல் உள்ள பிரபுத்துவப் பட்டங்களுக்கான தடை என்பது, பிறப்பு அதிகாரத்தை வழங்குகிறது மற்றும் மக்கள் வம்சாவளி ஆட்சிக்கு அடிபணிய வேண்டும் என்ற சமூகக் கொள்கையை நனவுபூர்வமாக நிராகரித்ததாகும்.
அமெரிக்கப் புரட்சிக்கு அரசியல் வடிவம் கொடுக்க உதவிய பொது அறிவு என்ற நூலை எழுதிய தோமஸ் பெயின், வாரிசுரிமை அடிப்படையிலான முடியாட்சியைப் பெருமளவு எள்ளி நகையாடினார். “மன்னர்களின் பரம்பரை உரிமையின் முட்டாள்தனத்திற்கு இயற்கையே வழங்கும் வலுவான ஆதாரங்களில் ஒன்று என்னவென்றால், இயற்கை அதை ஏற்காததுதான்” என்று அவர் எழுதினார், “இல்லையென்றால், அது மனிதகுலத்தை இழிவுபடுத்தும் வகையில் ஒரு சிங்கத்திற்குப் பதிலாக ஒரு கழுதையைப் பிறக்கச் செய்து, அதை அடிக்கடி கேலிக்குரியதாக மாற்றியிருக்காது” — செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டவருக்கும் (சார்ல்ஸ்),, விருந்தளித்தவருக்கும் (ட்ரம்ப்) இது பொருத்தமான எதிர்காலக் கல்வெட்டு வாசகமாகும்.
பிரிட்டிஷ் முடியாட்சியின் இந்தப் பிரதிநிதியின் விஜயமானது, 1776 புரட்சியின் ஜனநாயகக் கொள்கைகளைச் சொல்லிலும் செயலிலும் நிராகரித்துள்ள ஒரு நிர்வாகத்தின் கீழ் நடைபெறுகிறது. உரிமைகள் மசோதா காலால் மிதிக்கப்பட்டுள்ளது, மேலும் மூன்றாம் ஜோர்ஜ் மன்னருக்கு எதிராகச் சுதந்திரப் பிரகடனத்தில் பட்டியலிடப்பட்டுள்ள குறைகள் வெள்ளை மாளிகையின் தற்போதைய குடியிருப்பாளருக்கு எதிரான குற்றப் பத்திரிகை போலவே வாசிக்கப்படுகின்றன.
ட்ரம்ப், முடியாட்சிக் கொள்கையின் அடிப்படையில் அதிகார நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணிக்குக் பாதாள உலகக் குற்றவாளிகளின் கலாச்சார உணர்வுகளைப் பயன்படுத்துகிறார். அவர் தனிநபர் ஆட்சிக்கான ஒரு நினைவுச்சின்னமாக, 90,000 சதுர அடி பரப்பளவிலான வேர்சாய்ஸ் அரண்மனையின் பாணி நடன அரங்கை அமைப்பதற்காக வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதியை இடித்துள்ளார். அவர் டாலர் நோட்டில் தனது கையொப்பத்தைப் பொறிக்கவும், தங்க நாணயத்தில் தனது உருவப்படத்தைப் பதிக்கவும், அமெரிக்க கடவுச்சீட்டுகளில் தனது படத்தை அச்சிடவும், கென்னடி மையத்திற்குப் பெயர் மாற்றவும், அரசின் ஒவ்வொரு நிறுவனத்தையும் தனது தனிப்பட்ட புகழுக்கான ஒரு கருவியாக மாற்றவும் முயன்றுள்ளார்.
இருப்பினும், ட்ரம்ப் தனக்காக மட்டும் பேசவில்லை அல்லது செயல்படவில்லை. மாறாக, தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்கு அரசியலமைப்புத் தடைகளையும் ஜனநாயக உரிமைகளையும் தாங்கிக்கொள்ள முடியாத தடைகளாகக் கருதும் ஒரு தன்னலக்குழுவின் பிரதிநிதியாகவே அவர் செயல்படுகிறார்.
சார்ல்ஸின் விஜயத்திற்கு உத்தியோகபூர்வமான பதிலிறுப்பில் இது தெளிவாகத் தெரிகிறது. ஊடகங்கள் மன்னரைத் துதிபாடின, அவருடைய சாதாரணமான பேச்சுகளை ஜனநாயகக் கொள்கையின் ஆழமான கூற்றுகளாக அவை சித்தரித்தன. ஜனநாயகக் கட்சியும், தாராளவாத பத்திரிகைகளும் பல ஆண்டுகளாக, நியூ யோர்க் டைம்ஸின் 1619 திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய முயற்சிகள் மூலம், ஜெபர்சன், ஜோர்ஜ் வாஷிங்டன் மற்றும் லிங்கனை இனவாத வில்லன்களாகக் சித்தரித்து வந்துள்ளன. இருப்பினும், அவர்கள் இப்போது பரம்பரைச் சலுகையில் வாழும் உயிருள்ள உருவத்திற்கு முன்னால் தலைவணங்கி நிற்கிறார்கள். அவர்களின் பிரச்சனை ஒருபோதும் ஒடுக்குமுறையுடன் இருக்கவில்லை, மாறாகத் தற்போதைய ஒழுங்கிற்கு எதிரான எதிர்ப்பைத் தூண்டக்கூடிய புரட்சிகர மரபுகளுடனேயே அவர்களுக்குப் பிரச்சனை இருந்து வருகிறது.
நியூ யோர்க்கின் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் (DSA) அமைப்பைச் சேர்ந்த மேயர் மம்தானி, செப்டம்பர் 11 தாக்குதல்களின் நினைவு நிகழ்வில் இன்று சார்ல்ஸுடன் தோன்றித் தனக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை சரியாகச் செய்து வருகிறார்.
ஜனநாயகக் கட்சியினர் சர்வாதிகாரத்தை எதிர்ப்பதில்லை, ஏனெனில் அவர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதற்குத் தூண்டுதலாய் இருக்கும் அதே வர்க்க நலன்களையே பாதுகாக்கிறார்கள்.
வரலாற்றாசிரியர் ஆர்னோ மேயர் தனது பழைய ஆட்சியின் நிலைத்தன்மை என்ற நூலில், 1914 க்கு முந்தைய ஐரோப்பிய சமூகம் முதலாளித்துவச் செல்வத்தை முடியாட்சி, பிரபுத்துவம் மற்றும் மத நிறுவன வடிவங்களுடன் எவ்வாறு இணைத்தது என்பதை விவரிக்கின்றார். முதலாளித்துவ வர்க்கம் அதன் கீழ் உள்ள பொருளாதார அடிப்படைகளை மாற்றியமைத்த போதிலும், பழைய ஆட்சிக்குத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது. இந்தக் கூட்டணி முதலாம் உலகப் போர், ரஷ்யப் புரட்சி மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த புரட்சிகர எழுச்சிகளால் மட்டுமே முறியடிக்கப்பட்டது.
இதே போன்ற ஒரு இயக்கம் இன்று சற்றே மாறுபட்ட வடிவத்தில் நிலவுகிறது. அமெரிக்காவின் தன்னலக்குழு மனிதகுல வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவில் செல்வத்தைக் குவித்து வைத்துள்ளது. இந்தச் செல்வத்தை —சட்டரீதியாகவும், கருத்தியல் ரீதியாகவும் மற்றும் பௌதீக ரீதியாகவும்— தான் உருவாக்கிய சமூக எதிர்ப்பிலிருந்து எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதே அதன் மைய அரசியல் அக்கறையாக உள்ளது.
இதன் விளைவாகப் பிரபுத்துவ வடிவங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றன. இந்த தன்னலக்குழுக்கள் மற்றவர்கள் தங்களுக்கு அடிபணிந்து நடக்க வேண்டும் என்று விரும்புகின்றன. அவர்கள் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். சாமானிய மக்கள் தங்களது நிலையை அறிந்துகொண்டு, தங்களை விட உயர்ந்தவர்களின் முன்னிலையில் அடிபணிந்து மண்டியிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பரம்பரைச் செல்வமும் வம்சவழிச் சிறப்புரிமைகளும் உண்மையாக மட்டும் இருக்காமல், சமூக நடைமுறைகளிலும் அரசியல் கலாச்சாரத்திலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். பிரபுத்துவப் பட்டங்களுக்கான அரசியலமைப்புத் தடையை, சட்டப்பூர்வமாக இன்னும் நீக்காவிட்டாலும், நடைமுறையில் அதனை தூக்கியெறிவதுக்கு அவர்கள் தயாராகி வருகின்றனர்.
ட்ரம்ப் “இரண்டு மன்னர்கள்” என்று பதிவிடும்போது, இதில் அவர் முற்றிலும் தீவிரமாகவே இருக்கிறார். இது, ஜனாதிபதி மற்றும் அவருக்குப் பின்னால் உள்ள சமூக சக்திகளின் நோக்கத்தின் பிரகடனமாகும். அவர்கள் பரம்பரை ஆட்சி மற்றும் தடையற்ற நிர்வாக அதிகாரத்தின் கொள்கைகளை நிறுவ முயல்கின்றனர். இது அரசின் துணை இராணுவக் காவல் அமைப்புகள் மற்றும் பாசிசக் கும்பல்களைத் அணிதிரட்டுவதன் மூலம் செயல்படுத்தப்படுகிறது.
ட்ரம்ப்புக்குப் பின்னால் எலோன் மஸ்க், லாரி எலிசன், ஜெப் பெசோஸ், மார்க் ஜுக்கர்பெர்க், வோல் ஸ்ட்ரீட் நிதியாளர்கள், தொழில்நுட்ப ஏகபோக உரிமையாளர்கள் மற்றும் தனியார் பங்கு பிரபுக்கள் நிற்கிறார்கள். இவர்களுடைய செல்வமானது, வரலாற்றில் இருந்த எந்தவொரு மன்னரின் செல்வத்தையும் விடப் பன்மடங்கு அதிகமாகும். இவர்களின் செல்வம் அரண்மனைகள், பண்ணை வீடுகள் மற்றும் அரச ஆபரணங்களால் அளவிடப்படுவதில்லை. மாறாக, நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள், பரந்த பெருநிறுவன சாம்ராஜ்யங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் மீதான கட்டுப்பாடு, இராணுவ ஒப்பந்தங்கள், செயற்கை நுண்ணறிவு, விநியோகச் சங்கிலி, நிதி மற்றும் சமூக வாழ்வின் உச்சகட்டக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் அளவிடப்படுகிறது.
ஜூன் மற்றும் அக்டோபர் 2025ம் ஆண்டு, மற்றும் மார்ச் 2026 ஆகிய மாதங்களில் நடைபெற்ற ‘மன்னர்கள் வேண்டாம்’ போராட்டங்கள் —கடைசியாக நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 8 மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர்— முடியாட்சி மற்றும் சர்வாதிகார வடிவங்களின் மீள் எழுச்சிக்கு எதிரான மக்கள் எதிர்ப்பை, தெளிவற்றதாக இருந்தாலும், வெளிப்படுத்தின. ஆனால், இந்தப் போராட்டங்களை ஜனநாயகக் கட்சியினரின் கைகளில் விட்டுவிட முடியாது, ஏனெனில் அவர்கள் மக்களின் கோபத்தை மீண்டும் முதலாளித்துவ அரசியலின் எல்லைக்குள்ளேயே அடைக்க முயல்கிறார்கள். அபாயம் ட்ரம்ப் என்ற தனிநபர் மட்டுமல்ல; அவரை உருவாக்கிய அந்தத் தன்னலக் குழுவினரின் ஆட்சி முறைதான் உண்மையான ஆபத்தாகும்.
சார்ல்ஸ் தனது உரையில், ஆங்கிலோ-அமெரிக்க உறவு என்பது “சர்ச்சையிலிருந்து பிறந்த ஒரு கூட்டாண்மை” என்று அறிவித்தார். இதன் மூலம், முடியாட்சிக்கு எதிரான அந்தப் புரட்சிகரமான போராட்டத்தை, பிற்போக்குத்தனத்தின் பொதுவான வெற்றியில் ஒரு சிறிய நிகழ்வாகக் குறைக்க அவர் முயன்றார். ஆனால் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் உள்ள பெருந்திரளான மக்கள், இந்த வரலாற்றிலிருந்து மிகவும் மாறுபட்ட முடிவுகளையும் உத்வேகத்தையும் பெறப்போகிறார்கள்.
1776-ல் பிரகடனப்படுத்தப்பட்ட ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாப்பது, இன்று சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு வெளியே சாத்தியமில்லை. 18-ஆம் நூற்றாண்டில், முடியாட்சிக்கு எதிரான போராட்டம் முதலாளித்துவ வர்க்கத்தின் எழுச்சியுடனும், ஜனநாயகக் குடியரசை உருவாக்குவதுடனும் பிணைக்கப்பட்டிருந்தது. 21-ஆம் நூற்றாண்டில், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும், நிதிய தன்னலக்குழுவின் ஆட்சியை அகற்றி, சமூகத்தை தனியார் இலாபத்தை அடிப்படையாகக் கொள்ளாமல், மனிதத் தேவைகளின் அடிப்படையில் சோசலிச ரீதியாக மறுஒழுங்கமைப்பது அவசியமாகும்.
1776 இன் புரட்சிகர-ஜனநாயகக் கொள்கைகளை, முதலாளித்துவ சமூகத்தின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்வதன் மூலம் மட்டுமே பாதுகாக்க முடியும். இன்று, கேபிடல் காங்கிரஸ் கட்டிடத்தில் மூன்றாம் சார்ல்ஸ் கைதட்டி வரவேற்கப்படுகிறார். இருநூற்று ஐம்பத்தொன்று ஆண்டுகளுக்கு முன்பு, லெக்சிங்டன் மற்றும் கொன்கோர்டில், சாமானிய மக்கள் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கைக்கு எதிராக ஆயுதம் ஏந்தினர். அன்று இவர்கள் போராடிய கொள்கைகள் அழிந்துவிடவில்லை. அவை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்களில் உயிர் வாழ்கின்றன. அவை இப்போது சோசலிசத்திற்கான போராட்டத்தில் நனவான அரசியல் வடிவத்தை எடுக்க வேண்டும்.
