இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) தொழிற்சங்கத் தலைவர்கள் தங்கள் உறுப்பினர்களின் அழுத்தத்தின் கீழ், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்யும் அரச நிறுவனத்தை, திட்டமிடப்பட்டுள்ளவாறு ஆறு புதிய அரச நிறுவனங்களாகப் பிரிப்பதற்கு முன்பு, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிப்பதாக, கடந்த வாரம் மிரட்டல் விடுத்தனர்.
இதே தொழிற்சங்க அதிகாரிகள் நான்கு மாதங்களுக்கு முன்பு, இ.மி.ச.யை கலைத்துவிடுவதற்கு அரசாங்கத்திற்கு வழிவிட்டு, தொழிலாளர்களின் அனைத்து போராட்ட நடவடிக்கைகளையும் முடக்கினர். புதிய நிறுவனங்களில் தங்கள் தொழில்கள், சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஏனைய உரிமைகள் சம்பந்தமாக காணப்படும் நிச்சயமற்ற தன்மையால் ஊழியர்களிடையே அதிருப்தி அதிகரித்து வரும் நிலையிலேயே, தொழிற்சங்க அதிகாரத்துவம் இப்போது அதன் உறுப்பினர்களின் அழுத்தத்திற்கு உள்ளாகி வேலைநிறுத்த அச்சுறுத்தலை விடுக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சும் இ.மி.ச.யும் இந்த அரச நிறுவனத்தின் மறுசீரமைப்பை ஜனவரி இறுதிக்குள் முடித்து, பெப்ரவரி 1 அன்று ஆறு புதிய அரச நிறுவனங்களின் செயல்பாடுகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன. இந்த மறுசீரமைப்பு, நானூறுக்கும் மேற்பட்ட அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்குதல் அல்லது வணிகமயமாக்குவதை இலக்காகக் கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
ஜனவரி 20 அன்று, இ.மி.ச. தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டணியின் (JACEBTU) தலைவர்கள் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தங்கள் 24 கோரிக்கைகளைப் பற்றி கலந்துரையாடத் தவறினால், 'மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்' என்று எச்சரித்தனர்.
இந்த மாத இறுதியில் வெளியிடப்படவிருந்த இ.மி.ச.யை கலைக்கும் வர்த்தமானியை தாமதப்படுத்தும்படி தொழிற்சங்கங்கள் கோரியுள்ளன. ஆனால், வேலைநிறுத்த நடவடிக்கைக்கான எந்த சாத்தியமான திகதியையும் அவர்கள் இன்னும் அறிவிக்கவில்லை;
இ.மி.ச. தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டணியில், இ.மி.ச. சுதந்திர ஊழியர் சங்கம், இலங்கை மின்சாரத் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம், இ.மி.ச. பொறியியலாளர்கள் சங்கம், தொழில்நுட்பப் பொறியியலாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்கள் சங்கம், தேசிய ஊழியர் சங்கம், இணை மின்சாரத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஐக்கிய ஊழியர் சங்கம் உட்பட சுமார் 20 சங்கங்கள் உள்ளன.
சங்கங்களின் கோரிக்கைகள், முதன்முதலில் செப்டம்பரிலேயே முன்வைக்கப்பட்டன. அதில் இ.மி.ச.யை கலைப்பதற்கு முன்னர் தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள உரிமைகளை வழங்குதல், புதிய நிறுவனங்களில் சம்பளம், பதவி உயர்வுகள், கடன்கள், ஓய்வூதியம், விடுமுறை ஆகியவற்றுக்கு உத்தரவாதம் அளித்தல், தொழில்துறை முரண்பாடகுளைத் தீர்த்தல் போன்ற கோரிக்கைகள் உள்ளடங்கியிருந்தன. இவை அரசுடனான ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் அதிகாரப்பூர்வமாக்கப்பட வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
செப்டம்பர் 17-18 ஆம் திகதிகளில், மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசுக்கு எதிராக இ.மி.ச. ஊழியர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்திலும், ஒத்துழையாமை பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். இருப்பினும், அக்டோபர் 13 அன்று அமைச்சர் ஜயகொடி 24 கோரிக்கைகளுக்கும் ஒப்புக்கொண்டதாகக் கூறி, தொழிற்சங்கத் தலைமைத்துவம் அந்தப் போராட்டத்தைத் திடீரென நிறுத்தியது.
நிலுவையில் இருந்த கொடுப்பனவுகள் உட்பட இ.மி.ச.யின் செயல்பாடுகள் தொடர்பான சில பிரச்சினைகளை அரசாங்கம் அனுகியிருந்தாலும், புதிய நிறுவனங்கள் தொடர்பான கோரிக்கைகளைப் புறக்கணித்து, சொத்துக்களை புதிய நிறுவனங்களுக்கு மாற்றும் தயாரிப்புகளைத் தொடர்ந்தது. இது, புதிய நிறுவனங்கள் முந்தைய இ.மி.ச. வேலை நிலைமைகளைக் கைவிட்டு, தங்களின் தேவைகளின்படி வேலைவாய்ப்பை நிர்ணயிக்க அனுமதிக்கப்படும் என்பதைக் குறிக்கிறது.
இ.மி.ச.யின் தன்னார்வ ஓய்வுத் திட்டங்களின் கீழ் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெற விண்ணப்பித்திருந்தாலும், எரிசக்தி அமைச்சு உறுதியளித்த ஓய்வுத்தொகையை வழங்கவில்லை. இந்தத் தாமதங்களும், பிற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையும் தொழிலாளர்கள் மத்தியில் கவலையையும் கோபத்தையும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக, திட்டமிடப்பட்ட இ.மி.ச. பிரிப்பை ஒத்திவைத்து, பேச்சுவார்த்தைகள் நடத்தி, கூட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்குவோம் என்று இ.மி.ச. தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணியின் தலைமை எச்சரித்துள்ளது.
இ.மி.ச. தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணியின் வெற்றுப் பேச்சுகளால் தொழிலாளர்கள் ஏமாற்றப்படக் கூடாது என்று சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) எச்சரிக்கின்றது. கடந்தகால அனுபவங்கள் காட்டுவது போல், தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் அழைக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் தொழிலாளர்களின் கோபத்தைக் கட்டுப்படுத்தி, புதிய வலையை விரிப்பதற்கான பேச்சுவார்த்தைக்கு அனுமதிப்பதாகும். ஒரு கூட்டு ஒப்பந்தம் கையெழுத்தானாலும், அதை எளிதில் கிழித்தெறிய முடியும்.
கடந்த செப்டம்பரில் இ.மி.ச. தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டணியின் தலைவர் பிரியந்த பிரபாத் ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறியது போல்: 'நாம் இன்னும் ஒரு ஏழை நாடு, [ஆனால்] சர்வதேச நாணய நிதியத்தின் உதவியுடன் நாம் முன்னேறி வருகின்றோம். பெரிய மின்சாரத் திட்டங்களுக்கு வெளிநாட்டு முதலீடு தேவை.' பிரபாத்தின் கருத்துக்கள் இலங்கையின் முழு தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன.
இ.மி.ச. தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டணியின் பல தொழிற்சங்கங்கள், ஆளும் ஜே.வி.பி./தே.ம.ச. அல்லது பாராளுமன்ற எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை ஆதரிப்பதுடன் அதன் சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தியுள்ளன.
இ.மி.ச. தொழிலாளர்கள் கடந்தகாலப் போராட்டங்களிலிருந்து அரசியல் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த நிறுவனத்தைத் தனியார்மயமாக்குவதற்கான முந்தைய முயற்சிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், தனியார்மயமாக்கல் மற்றும் தொழில் அழிப்புக்கான உந்துதல் நீடித்தது. இலங்கையின் ஆளும் வர்க்கம், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பைத் திசைதிருப்பவும் சிதறடிக்கவும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைச் சார்ந்துள்ளது.
ஆழமடைந்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், இலங்கையின் 2022 நிதி நெருக்கடியும், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியதும், அரசுக்குச் சொந்தமான துறைகளைத் தனியார்மயமாக்குவதை தாமதப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளியது. சர்வதேச நாணய நிதியம் வழங்கிய பிணையெடுப்புக் கடன்கள், அதன் அதிகாரிகளே 'கொடூரமான பரிசோதனை' என்று விவரித்த கொள்கைகளை அமுல்படுத்த நிர்ப்பந்தித்தன் விளைவாக, விக்கிரமசிங்க அரசாங்கம் இ.மி.ச.யை மறுசீரமைத்து தனியார்மயமாக்குவதற்கான சட்டத்தை நிறைவேற்றியது.
தொழிலாளர்களின் அழுத்தத்திற்கு உள்ளான ஜே.வி.பி. சார்ந்த, முன்னர் ரஞ்சன் ஜயலால் தலைமையிலான, தொழிற்சங்கங்களின் ஒன்றிணைந்த கூட்டணி, 2024 ஜனவரி வரை மட்டுப்படுத்தப்பட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. அரசாங்கம் கொடூரமான அத்தியாவசிய சேவைகள் சட்டத்தைப் பயன்படுத்தி 62 தொழிலாளர்களை இடைநீக்கம் செய்ததன் மூலம் பிரதிபலித்தது.
ஜூன் 2024ல், ஜே.வி.பி. தொழிற்சங்கப் பிரிவு, சர்வதேச நாணய நிதிய திட்டத்தை பற்றி 'மீண்டும் பேச்சுவார்த்தை' நடத்துவதாக பொய்யாக உறுதியளித்த அனுரகுமார திசாநாயகவின் ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்திற்காக, அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் அவற்றின் நடவடிக்கைகளை நிறுத்த உத்தரவிட்டது. ஜே.வி.பி. தலைமையிலான இ.மி.ச. சங்கம் அந்த கட்டளைக்கு அடிபணிந்ததோடு மற்ற சங்கங்களும் அதைப் பின்பற்றின.
அதிகாரத்திற்கு வந்தவுடன், திசாநாயக சர்வதேச நாணய நிதிய திட்டம் சம்பந்தமாக மறுபேச்சுவார்த்தை நடத்தும் வாக்குறுதியைக் கைவிட்டு, இ.மி.ச. மறுசீரமைப்பு உட்பட அதன் ஆணைகளை விரைந்து அமல்படுத்தினார். விக்கிரமசிங்க அரசாங்கம் உருவாக்கிய சட்டத்தில் மேலோட்டமான மாற்றங்களுடன் புதிய மின்சாரத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. கடந்த செப்டம்பரில் இ.மி.ச. தொழிலாளர்கள் இத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியபோது, ஜே.வி.பி. தலைமையிலான சங்கம் அதை வெளிப்படையாக எதிர்த்தது.
தொழிலாளர்களின் எதிர்ப்பை 'பிற்போக்கானது' என்று முத்திரை குத்திய திசாநாயக, சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கையை 'முற்போக்கான மாற்றம்' என்று பாராட்டியதுடன் இ.மி.ச. மீது அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை மீண்டும் திணித்து தொழிற்சங்க நடவடிக்கைகளைத் தடை செய்தார். இந்த அச்சுறுத்தல்களின் கீழ், இ.மி.ச. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் மீதமுள்ளவர்கள் சரணடைந்து, அமைச்சர் ஜயகொடியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு, அக்டோபரில் அனைத்து நடவடிக்கைகளையும் கைவிட்டனர்.
போலி-இடது முன்னிலை சோசலிசக் கட்சி அரசாங்கத்துக்கு எதிராக வாயளவில் மட்டும் விமர்சிக்கின்ற அதேநேரம், அதன் 'தொழிலாளர் போராட்ட மையம்' இ.மி.ச. தொழிற்சங்கத் தலைமையின் துரோகங்களுடன் நெருக்கமாக ஒத்துழைத்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலையில் முன்னிலை சோசலிசக் கட்சி உருவாக்கிய கூட்டு மின்சாரத் தொழிலாளர்கள் சங்கம், இ.மி.ச. தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணியின் தலைமையை சவால் செய்யாமல், அதற்கு வெள்ளை பூசும் வேலைய செய்தது. கூட்டணியின் உள்ளிருந்து செயல்படும் அது, அதே போலி வாய்ச்சவடால்களை விடுத்து, தொழிலாளர்களை முதலாளித்துவ சார்பு தொழிற்சங்க எந்திரத்துடன் கட்டிப்போடும் மற்றொரு கருவியாக மாறியுள்ளது.
ஜனவரி 6 அன்று கூட்டு மின்சாரத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் சரித ஸ்ரீ சிந்தக, இ.மி.ச. தொழிற்சங்கங்களின் கூட்டு முன்னணி முன்மொழிந்த கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்களின் உரிமைகளை 'திட்டமிட்டு மற்றும் ஒழுங்கான முறையில்' பாதுகாக்கும் எனக் கூறினார். வேறு வார்த்தைகளில் கூறினால், தொழிற்சங்கத் தலைவர்களுடனான ஒப்பந்தங்கள் மூலம் 'முறையாக' முன்னெடுக்கப்பட்டால், சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் கீழ் இ.மி.ச.யை மறுசீரமைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது, என்பதாகும்.
ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் போலவே, முன்னிலை சோசலிசக் கட்சியும் சர்வதேச நாணய நிதிய திட்டத்திற்கும் அதை அமுல்படுத்தும் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதை எதிர்க்கிறது.
ஜனாதிபதி திசாநாயகவும் அவரது அரசாங்கமும் 'மக்களின் எதிர்பார்ப்புகளை' பிரதிநிதித்துவப்படுத்துவதாக முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்துகிறது. இந்தக் கூற்றுக்கள், ஜே.வி.பி. தலைமையிலான அரசாங்கம் இலங்கையின் ஆளும் வர்க்கத்தினதும் சர்வதேச நிதி மூலதனத்தினதும் கோரிக்கைகளை முழுமையாக அமுல்படுத்துகின்றது என்ற உண்மையை மூடி மறைக்கும் அவநம்பிக்கையான முயற்சிகள் ஆகும்.
இத்தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் துரோக சூழ்ச்சிகளுக்கு எதிராக, சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டும், சர்வதேச நாணய நிதிய சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஜே.வி.பி. அரசாங்கத்துக்கும் எதிராக தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்ட அழைப்பு விடுக்கிறது.
ஆரம்பத்திலிருந்தே, சோ.ச.க. மற்றும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களிலிருந்து சுயாதீனமாக தொழிலாளர்கள் தங்கள் சொந்த நடவடிக்கைக் குழுக்களை அமைக்குமாறு வலியுறுத்துகின்றன. இத்தகைய குழுக்கள் தொழிலாளர்களுக்கு தங்கள் செயல் திட்டத்தை ஜனநாயக முறையில் தீர்மானிக்கவும், தேசிய-சர்வதேச அளவில் தொழிலாளர்களுடன் ஒன்றிணையவும் அனுமதிக்கும். வேலை, ஊதியம், உரிமைகளைப் பாதுகாக்கப் போராடும் இ.மி.ச. தொழிலாளர்களுக்கு இத்தகைய அமைப்புகள் மட்டுமே முன்னோக்கிச் செல்லும் பாதையை வழங்குகின்றன.
இந்தப் போராட்டம், தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், ஒரு சோசலிசத் திட்டத்திற்காகவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கத்திற்காகவும் தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டுவதோடு பிணைக்கப்பட்டுள்ளது. அத்தகைய தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தின் கீழ் அனைத்து அரசுக்குச் சொந்த நிறுவனங்களும் தொழிலாளர்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுவதுடன் அனைத்து பிரதான நிறுவனங்கள், தொழில்துறைகள் மற்றும் வங்கிகளும் தேசியமயமாக்கப்படுவதோடு, அனைத்து வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதும் நிராகரிக்கப்படும்.
இ.மி.ச. ஊழியர்களையும்—அனைத்துத் தொழிலாளர்களையும்—எங்களைத் தொடர்புகொண்டு இந்த வேலைத் திட்டம் குறித்து கலந்துரையாடுமாறு சோ.ச.க. கேட்டுக்கொள்கிறது.
