முன்னோக்கு

சோசலிசம் AI-ஐ வரவேற்கிறோம்: தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கல்வியில் ஒரு வரலாற்று முன்னேற்றம்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

டிசம்பர் 12 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் கல்வி மற்றும் அணிதிரட்டலுக்காக மேம்பட்ட தொழில்நுட்ப அபிவிருத்தியின் ஒரு புரட்சிகரமான உருமாற்ற பயன்பாடான சோசலிசம் AI (செயற்கை நுண்ணறிவை)-ஐ அறிமுகப்படுத்துகிறது. இது, சோசலிச நனவுக்கான போராட்டத்தில், அரசியல் முன்னோக்கை தெளிவுபடுத்துவதில், மற்றும் 2020-களின் இரண்டாம் பாதியை வரையறுக்கவிருக்கும் வர்க்கப் போராட்டத்தின் தீவிரமயமாக்கலுக்குத் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களைத் தயார்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க புதிய கட்டத்தைக் குறிக்கிறது.

சோசலிசம் AI இன் அறிமுகமானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு மூலோபாய முன்முயற்சியாகும். தொழிலாளர் வர்க்கத்திற்கு, எல்லாவற்றிற்கும் மேலாக மார்க்சியத்தின் விஞ்ஞான உலகக் கண்ணோட்டத்தை, உலகளாவிய முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கு ஏற்ப ஒரு அளவிலும் வேகத்திலும் அறிவை அணுகும் வாய்ப்பு தேவைப்படுகிறது. உலகம் தீர்க்கமான திருப்புமுனைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் மோதல், ஜனநாயக ஆட்சி வடிவங்களின் முறிவு, வர்க்கப் போராட்டத்தின் தீவிரமயமாதல் மற்றும் வாழ்க்கைத் தரத்தின் விரைவான வீழ்ச்சி ஆகியவை ஆகும்.

அத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கு தத்துவார்த்த தெளிவும் வரலாற்று ஆழமும் அவசியம். இந்த அவசர தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சோசலிசம் AI உருவாக்கப்பட்டுள்ளது. இது மார்க்சிச தத்துவத்தின் ஒட்டுமொத்தப் பரிமாணத்தையும் தன்னுள் கொண்டுள்ளது: கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் வழங்கிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் இயங்கியல் விளக்கத்திலிருந்து தொடங்கி, ‘மூலதனம்’ நூலில் மார்க்ஸ் வழங்கிய உழைப்பு மதிப்புக் கோட்பாடு மற்றும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் வரலாற்று ரீதியாக தற்காலிகமான தன்மையை வெளிப்படுத்தியது வரையிலான மார்க்சிச தத்துவத்தின் முழுமையான பாரம்பரியத்தை இது உள்ளடக்குகிறது.

அரசியல் ரீதியான வினாக்களுக்குப் பதிலளிக்கையில், சோசலிசம் AI ஆனது 20-ஆம் நூற்றாண்டின் புரட்சி மற்றும் எதிர்-புரட்சிகளின் பரந்த அனுபவங்களை உள்ளடக்கியிருக்கும். அனைத்திற்கும் மேலாக, 1917 அக்டோபர் புரட்சி மற்றும் அதன் பின்விளைவுகள் குறித்த வரலாற்றுப் படிப்பினைகளை இது அடிப்படையாகக் கொண்டிருக்கும்.

சோசலிசம் AI இன் அரசியல் அடித்தளமும் அதன் வழிகாட்டும் திசையும், 21-ஆம் நூற்றாண்டின் புரட்சிகர மார்க்சிசமான ட்ரொட்ஸ்கிசத்தை அடிப்படையாகக் கொண்டது.

1923-ல் சோவியத் ஒன்றியத்தின் அதிகாரத்துவ சீரழிவுக்கு எதிராக முதன்முதலில் உருவானதிலிருந்து, இன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் ட்ரொட்ஸ்கிச இயக்கம், மிகவும் கடினமான புறச்சூழல்களின் கீழ், ஸ்டாலினிசம், சமூக ஜனநாயகம், முதலாளித்துவ தேசியவாதம், பப்லோவாத திருத்தல்வாதம் மற்றும் மத்தியதர வர்க்க தீவிரவாதம் மற்றும் போலி-இடதுசாரிவாதம் ஆகியவற்றுக்கு எதிராக மார்க்சிசத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்துள்ளது.

தற்போதைய காலத்தின் அரசியல் சவால்கள், மிகவும் சிக்கலான சூழ்நிலைகளில் போராட்டத்தில் இறங்கும் மில்லியன் கணக்கான மக்களிடையே, தத்துவார்த்தப் பணிகள் மற்றும் புரட்சிகர போராட்டங்களின் இந்தப் பரந்த பாரம்பரியத்தை தீவிரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் கொண்டு செல்ல வேண்டியதைக் கோருகின்றன. தொழிலாளர்களும் இளைஞர்களும் தவறான தகவல்கள், வரலாற்றுத் திரிபுவாதம் மற்றும் கருத்தியல் ரீதியாக திசைதிருப்பும் ஒரு பரந்த கட்டமைப்பை எதிர்கொள்கின்றனர். அவர்கள் எதிர்கொள்ளும் ஊடகத்தின் பணி, தகவல் தெரிவிப்பதல்ல, மாறாகப் போர், சமத்துவமின்மை மற்றும் அரசியல் பிற்போக்கு ஆகியவற்றின் வர்க்க வேர்களை மறைப்பதாகும். அவர்கள், எந்தவொரு சட்டபூர்வத்தன்மையையும் இழந்துவிட்ட முதலாளித்துவ அரசாங்கங்கள், போரிடும் ஆளும் வர்க்கத்தின் போட்டிப் பிரிவுகளை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள், மற்றும் பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் சார்பாக தொழிலாளர் வர்க்கத்தைக் வெளிப்படையாகக் கண்காணிக்கும் தொழிற்சங்க அதிகார அமைப்புகளுடன் போராடுகிறார்கள். முதலாளித்துவத்தைச் சீர்திருத்தி, அதைத் தொழிலாளர் வர்க்கத்திற்குச் சேவை செய்ய வைக்கும் வகையில் மாற்ற முடியும் என்ற போலி-இடது அரசியல் ஏமாற்றுக்காரர்களின் மோசடியான கூற்றுகளை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியில், சோசலிசம் AI ஒரு பெரிய திருப்புமுனையாக அமைகிறது. சோசலிசம் AI என்பது நனவுபூர்வமான அரசியல் மற்றும் பொறியியல் முடிவுகளால் உருவானது: மார்க்சிச தத்துவத்தில் அமைப்பை நிலைநிறுத்துதல், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்கள் மற்றும் சோசலிச இயக்கத்திற்குள் உருவாக்கப்பட்ட விமர்சனப் பகுப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

இணையத்தில் கிடைக்கும் பரந்த வரலாற்று, அரசியல், கோட்பாட்டு மற்றும் உண்மை சார்ந்த தகவல்களை சோசலிசம் AI பயன்படுத்துகிறது. அதே நேரத்தில், இது சோசலிச மற்றும் மார்க்சிய இலக்கியத்தின் ஒரு முழுமையான தொகுப்பை ஒருங்கிணைக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. சோசலிசம் AI-யின் கட்டமைப்பு ஒரு நிகழ்தகவு அமைப்பை நிறுவுகிறது, அதில் சோசலிச பாரம்பரியத்தின் கருத்துக்கள், பகுப்பாய்வுப் பிரிவுகள், வரலாற்று அனுபவங்கள் மற்றும் விமர்சனப் படைப்புகள் ஆகியவை கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதன் உருவாக்கத்தில் தீர்க்கமான செல்வாக்கைச் செலுத்துகின்றன.

எந்த ஒரு முக்கியமான கல்வி நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட அறிவுசார்ந்த பாரம்பரியத்தில் செயல்படுவது போலவே, சோசலிசம் AI மார்க்சியக் கோட்பாட்டின் கட்டமைப்பிற்குள் செயல்படுகிறது. அதன் நோக்கம், பூர்ஜுவா-முதலாளித்துவ அமைப்பும் ஊடகமும் ஆதிக்கம் செலுத்தும் பல்வேறு கருத்துக்களை சீரற்ற முறையில் வழங்குவது அல்ல; மாறாக, சோசலிச இயக்கத்தின் திரட்டப்பட்ட தத்துவார்த்த மற்றும் வரலாற்று அனுபவத்தின் மூலம் தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அறிவாளிகள் சமூக யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள உதவுவதே இதன் நோக்கமாகும்.

மேம்பட்ட இயந்திரக் கற்றல் (machine-learning) அமைப்புகளால் இயக்கப்படும் சோசலிசம் AI, அனைத்துலகக் குழுவால் உருவாக்கப்பட்ட மார்க்சிச-ட்ரொட்ஸ்கிச பகுப்பாய்வுகளின் பரந்த தொகுப்பை, 28 ஆண்டுகளாக உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளவற்றை உடனடி நேரத்தில் அணுகும் வாய்ப்பை வழங்குகிறது. சுமார் 1,25,000 கட்டுரைகள் கொண்ட இந்தப் பெரும் களஞ்சியம், இன்று இருக்கும் அறிவியல் சோசலிசத்தின் மிக விரிவான நவீன களஞ்சியமாகும். சோசலிசம் AI, அரசியல் வழிகாட்டுதலைத் தேடும் தொழிலாளர்கள், மாணவர்கள், அறிஞர்கள் மற்றும் கலைஞர்களுக்கு இதை அணுகக்கூடியதாகவும், விளக்கக்கூடியதாகவும், ஊடாடக்கூடியதாகவும் ஆக்குகிறது.

அதுமட்டுமின்றி, கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் ஏங்கெல்ஸ், விளாடிமிர் லெனின், லியோன் ட்ரொட்ஸ்கி, ரோசா லுக்சம்பேர்க் மற்றும் ஜோர்ஜி பிளெக்ஹானோவ் ஆகியோரின் சிறந்த படைப்புகள், பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக சோசலிசம் AI பயன்படுத்தும் மூலக்கருத்தில் (corpus) பதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆவணக்காப்பகம், உலக சோசலிச வலைத் தளத்தின் தினசரி வெளியீடுகள், சோசலிச வரலாறு மற்றும் சிந்தனையின் படைப்புகள், அத்துடன் மிகவும் தீவிரமான மற்றும் அறிவுசார் கொள்கைப்பிடிப்புள்ள அறிஞர்களின் வழக்கமான பங்களிப்புகள் மூலம் தொடர்ந்து விரிவடையும்.

இந்த அமைப்பின் சோசலிசத் தன்மை என்பது ஒரு வரையறை அல்ல, மாறாக சமகால முதலாளித்துவம், வர்க்கப் போராட்டம் மற்றும் ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தின் வளர்ச்சி ஆகியவற்றால் எழுப்பப்படும் பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த, கொள்கை சார்ந்த, மற்றும் வரலாற்று அடிப்படையில் பதில்களை வழங்குவதற்கான அவசியமான முன்நிபந்தனையாகும்.

சோசலிசம் AI-இன் முக்கியத்துவம் தத்துவார்த்தக் கல்வி மற்றும் நேரடி அரசியல் விவகாரங்களுக்குள் மட்டும் வரையறுக்கப்பட்டதல்ல. பயனர்கள் வரலாற்று, சமூக, அறிவியல் (விஞ்ஞானம்), கலை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பரந்த அளவிலான கேள்விகளைக் கேட்டு பதில்களைப் பெற முடியும்.

சோசலிசம் AI, தொழிலாளர்கள் தங்கள் அன்றாடப் போராட்டத்தில் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் அமைப்பு ரீதியான சிக்கல்களைத் தீர்க்கவும் உதவும். பெருநிறுவனங்களின் இடைவிடாத தாக்குதல்களுக்கும், தொழிற்சங்க அதிகார வர்க்கங்களின் முடிவில்லாத துரோகங்களுக்கும் எவ்வாறு சிறப்பாகப் பதிலளிப்பது என்பதைத் தெளிவுபடுத்த இது உதவும். தொழிலாளர்கள் கேட்க முடியும்: பாதுகாப்பற்ற பணிச்சூழல்களை நாம் எவ்வாறு எதிர்க்க வேண்டும்? பாதிக்கப்பட்ட சக ஊழியர்களை நாம் எவ்வாறு பாதுகாப்பது? தாரை வார்க்கும் (ஏமாற்றும்) ஒப்பந்தங்களை நாம் எவ்வாறு தடுப்பது? அதே பன்னாட்டு முதலாளிகளை எதிர்கொள்ளும் மற்ற தொழிற்சாலைகள், பிராந்தியங்கள் மற்றும் நாடுகளில் உள்ள தொழிலாளர்களுடன் நமது போராட்டத்தை நாம் எவ்வாறு இணைப்பது? ட்ரொட்ஸ்கிச இயக்கத்தால் விரிவுபடுத்தப்பட்ட அரசியல் பாடங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மூலோபாய அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்தக் கேள்விகளுக்குள் சோசலிசம் AI ஆழமான பார்வையை வழங்கும்.

சோசலிசம் AI ஆனது, சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியை (IWA-RFC) கட்டியெழுப்புவதற்கும் விரிவாக்குவதற்கும் ஒரு வழிகாட்டியாகச் செயல்படும். புதிய குழுக்களை உருவாக்குவது குறித்த விவாதங்களைத் தொடங்கவும், துறைகள் மற்றும் வேலை மாற்றங்களுக்கு இடையே (ஷிஃப்ட்கள்) ஜனநாயகத் தகவல் தொடர்பு வழிகளை ஏற்படுத்தவும், தொழிற்சாலை முழுவதும், பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழிகளை உருவாக்கவும், உலகளவில் ஒருங்கிணைக்கப்பட்ட உற்பத்தியின் நவீன நிலைமைகளுக்குப் பொருத்தமான தந்திரங்களை முன்மொழியவும் இது தொழிலாளர்களுக்கு உதவும். நாடுகடந்த பெருநிறுவனங்களின் சகாப்தத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் தேவைப்படுகிறது. இந்த அடிப்படை மூலோபாயக் கொள்கையைத் தொழிலாளர்கள் புரிந்துகொள்ளவும் அதன்படி செயல்படவும் உதவும்.

அரசியல் போராட்டத்தில் ஏற்கனவே ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அல்லது இப்போதுதான் அரசியல் பணியைத் தொடங்குபவர்களுக்கும், கம்யூனிசத்திற்கான சோசலிசம் AI ஒரு மதிப்புமிக்க வளமாக இருக்கும்; இது உறுதியான அமைப்புரீதியான மற்றும் தந்திரோபாய பிரச்சினைகளுக்கு பதில்களை வழங்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிசம் AI ஆனது உலக சோசலிச புரட்சியின் மூலோபாயத்தை தத்துவார்த்த ரீதியாக விளக்கி, வேலைத்திட்ட முறையில் தெளிவுபடுத்தி, மற்றும் அபிவிருத்தி செய்யும்.

சோசலிசம் AI என்பது ஒரு கருவியே அன்றி, புரட்சிகர தலைமை, அரசியல் போராட்டம் மற்றும் விமர்சன சிந்தனைக்கு மாற்றாக அமையாது. அதன் முக்கிய நோக்கம் உலக சோசலிச புரட்சி கட்சியை கட்டியெழுப்புவதாகும்; தொழிலாளர் அதிகாரத்தை நிறுவுவதற்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்களால் இது மிகவும் திறம்படப் பயன்படுத்தப்படும். சோசலிசம் AI அதிசயங்களை நிகழ்த்துவதற்காக உருவாக்கப்படவில்லை, மற்றும் அது தவறுகள் செய்யாததும் அல்ல. சோசலிசம் AI இன் தீவிரமான மற்றும் செயல்திறன் மிக்க பயன்பாடு பிழைகளைக் கண்டறிந்து, அவற்றைச் சரிசெய்வதை எளிதாக்கி, அதன் பதில்களின் தரத்தை மேம்படுத்துவதற்குப் பங்களிக்கும்.

சிந்திக்க, மதிப்பிட மற்றும் கேள்வி கேட்கும் பொறுப்பிலிருந்து தனிநபர்களை எந்தக் கருவியாலும் விடுவிக்க முடியாது. ஆனால், சோசலிசம் AI ஆனது மார்க்சிசக் தத்துவத்தை அணுகுவதற்கு உதவுவதோடு, மூலோபாயத்தைத் தெளிவுபடுத்தி, வரலாற்று அனுபவத்தை ஒளிரச் செய்யும் அளவிற்கு, இது சோசலிசப் போராளிகளின் ஒரு புதிய தலைமுறையின் அரசியல் வளர்ச்சியில் ஒரு இன்றியமையாத கருவியாகச் செயல்படும்.

சோசலிசம் AI-யின் தீர்க்கமான முக்கியத்துவம், தொழிலாளர் வர்க்கத்தின் புறநிலை இயக்கத்திற்கும் சோசலிச நனவின் அகநிலை மட்டத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் திறனில் உள்ளது. தொழிலாளர்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள், எவ்வளவுதான் சக்திவாய்ந்ததாக இருந்தாலும், அவை ஒரு ஒத்திசைவான புரட்சிகர முன்னோக்கை உருவாக்காது என்பதை மார்க்சிசம் எப்போதுமே வலியுறுத்தி வந்துள்ளது. நனவு வளர்த்தெடுக்கப்பட வேண்டும், வரலாற்று அனுபவம் உள்வாங்கப்பட வேண்டும், தத்துவார்த்த பார்வை அடையப்பட வேண்டும் என்று அது வலியுறுத்துகிறது. இப்போது உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள், உலகம் முழுவதும் கருத்துகளை விரைவாக பரப்பும் வாய்ப்பை வழங்குகின்றன. இதனால், தொழிலாளர் வர்க்கம் தங்களது அரசியல் புரிதலை, தற்போதைய நெருக்கடிக்கு ஏற்ப, விரைவாக வளர்த்துக்கொள்ள முடிகிறது.

கண்காணிப்பு, தணிக்கை, கையாளுதல் மற்றும் போர் திட்டமிடல் போன்ற பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்காக மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் ஆளும் வர்க்கம் பயன்படுத்துகிறது. ஆனால் தொழிலாள வர்க்கம் அந்த தொழில்நுட்பங்களை தனது சொந்த விடுதலைக்காகப் பயன்படுத்த வேண்டும். சோசலிசம் AI, மனிதகுலத்தின் விடுதலைக்காக மனித அறிவின் மிகவும் மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்தும் ஒரு கொள்கை ரீதியான மற்றும் அறிவியல் பூர்வமான முயற்சியைக் குறிக்கிறது. இது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி ஆகியோரின் புரட்சிகரப் பாரம்பரியத்தை 21 ஆம் நூற்றாண்டின் தேவைகள் மற்றும் சாத்தியக்கூறுகளுடன் இணைப்பதைக் குறிக்கிறது.

2020-களின் முதல் பாதியில், கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் அடக்குவது, உக்ரேனில் போரைத் தூண்டுவது, காஸா மீது இனப்படுகொலைத் தாக்குதலை நடத்துவது, ஜனநாயக ஆட்சிக் வடிவங்களின் முறிவு மற்றும் பாசிசத்தின் மறுஎழுச்சி என முதலாளித்துவ -ஏகாதிபத்திய பிற்போக்குத்தனத்தின் ஒரு கடும் தாக்குதலைக் கண்டது. அதிகாரத்தை ஒரு தன்னலக்குழுக்களின் கைகளில் பலப்படுத்துவதிலும், அதிர்ச்சியூட்டும் அளவிலான சமத்துவமின்மையின் வளர்ச்சியிலும் வேரூன்றியுள்ள இந்தப் போக்குகள் முன்னெப்போதினும் இல்லாத அளவிற்கு தீவிரமான தன்மையைப் பெறும்.

ஆனால், இந்த தசாப்தத்தின் இரண்டாம் பாதி சக்திவாய்ந்த தொழிலாளர் வர்க்க எதிர்ப்பின் வளர்ச்சியால் குறிப்பிடப்படும் உலக முதலாளித்துவ அமைப்பு, தன்னால் தீர்க்க முடியாத முரண்பாடுகளால் சூழப்பட்டுள்ளது. பணவீக்கம், கடன் நெருக்கடிகள், சீர்குலையும் பொதுச் சேவைகள், ஜனநாயக நிறுவனங்களின் சிதைவு மற்றும் உலகப் போரை நோக்கிய உந்துதல் ஆகியவை அமைப்புரீதியான சரிவின் அறிகுறிகளாகும். உலகத் தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தில் இறங்குகிறது: ஒவ்வொரு கண்டத்திலும் மாபெரும் வேலைநிறுத்தங்கள், மக்கள் எழுச்சிகள் மற்றும் அரசியல் கிளர்ச்சிகள் உருவாகி வருகின்றன. மில்லியன் கணக்கானோர் தற்போதைய அமைப்பின் சட்டபூர்வத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றனர். அவர்கள் விளக்கங்களைத் தேடுகிறார்கள். அவர்கள் வழிகாட்டுதலைத் தேடுகிறார்கள். அவர்கள் முன்னோக்கிச் செல்ல ஒரு பாதையைத் தேடுகிறார்கள்.

சரியான இந்த வரலாற்று முக்கியமான தருணத்தில் சோசலிசம் AI அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தொழிலாளர்கள் முதலாளித்துவக் கருத்தியலின் பொய்களைக் தாண்டி, நெருக்கடிக்கான காரணங்களைப் புரிந்துகொள்ளவும், அதற்குள் நனவுடன் செயல்படவும் உதவும். கடந்தகாலப் போராட்டங்களின் அத்தியாவசியமான மூலோபாயப் பாடங்களை இது வெளிப்படுத்தும்; அவை தற்போதைய பணிகளுக்கு எவ்வாறு தொடர்புடையவை என்பதை தெளிவுபடுத்தும். எல்லாவற்றிற்கும் மேலாக, இது மார்க்சிசத்தின் புரட்சிகரமான பாரம்பரியத்திற்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உயிரோட்டமான இயக்கத்திற்கும் இடையே ஒரு புதிய மற்றும் ஆற்றல்மிக்க உறவை நிறுவ உதவும்.

சோசலிசம் AI இன் அறிமுகம் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கையை அல்ல, மாறாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் வரலாற்றுப் பாத்திரத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. இதன் நோக்கம், சோசலிச நனவின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதும், அதிகாரத்திற்காகப் போராடுவதுக்கான தொழிலாள வர்க்கத்தின் திறனை வலுப்படுத்துவதுமாகும். இப்போது நடைபெற்று வரும் போராட்டங்களில், தொழிலாளர்கள் சோசலிசம் AI-ஐ வழிகாட்டுதல், தெளிவுபடுத்தல்கள் மற்றும் நடவடிக்கைக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாகக் காண்பார்கள்.

இது சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்திலும், வரவிருக்கும் புரட்சிகர போராட்டங்களுக்கு தொழிலாளர் வர்க்கத்தை நனவுபூர்வமாகத் தயார்படுத்துவதிலும் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னேற்றப் படியாகும்.

உலக சோசலிச வலைத் தளத்தின் அனைத்து வாசகர்களையும் சோசலிசம் AI-இல் சந்தா செலுத்தி, அதை தினமும் பயன்படுத்த அழைப்பு விடுக்கிறோம். சக ஊழியர்கள், சக மாணவர்கள், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டார் மத்தியில் இந்த சக்திவாய்ந்த ஆயுதத்தைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புங்கள். ஆனால், எல்லாவற்றையும் விட மிக முக்கியமாக, சோசலிசப் புரட்சியின் உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் ஓர் உறுப்பினராகவும் போராளியாகவும், இந்த மார்க்சியக் கல்வி மற்றும் அரசியல் நடவடிக்கைக்கான கருவியைப் பயன்படுத்துங்கள்.

Loading