இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.
இலங்கையின் மத்திய பெருந்தோட்ட மாவட்டமான நுவரெலியாவிலிருந்து 9 கி.மீ தொலைவில் உள்ள கந்தப்பளையில் உள்ள சித்தி விநாயகர் கோயில் மண்டபத்திற்கு டிசம்பர் 3 அன்று உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சென்றிருந்தனர். தீவின் பெரும்பகுதியை பேரழிவிற்குள்ளாக்கிய டிட்வா சூறாவளியில் இருந்து தப்பியவர்களுடன் அவர்கள் பேசினர். இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான தற்காலிக தங்குமிடமாக இந்த கோயில் மாற்றப்பட்டுள்ளது.
மலையகப் பகுதியான 724,957 மக்கள்தொகை கொண்ட நுவரெலியா மாவட்டம், கனமழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் கல் சரிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாகும். செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, 89 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேர் காணாமல் போயுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது - கண்டி மாவட்டத்தை அடுத்து நுவரெலியாவிலேயே இரண்டாவதாக அதிக இறப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது – என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கால்நடைகள், பயிர்கள் மற்றும் சொத்துக்களும் அழிக்கப்பட்டுள்ளன. சேதமடைந்த உள்கட்டமைப்பு மற்றும் முற்றிலும் அழிந்துபோன வீதிகளும் மீட்புப் பணிகளை கடுமையாக பாதித்துள்ளன. மாவட்டத்தின் பெரும்பாலான மக்கள் குறைந்த ஊதியம் பெறும் தமிழ் பேசும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர்.
சித்தி விநாயகர் கோயில் மண்டபம் தற்போது கிட்டத்தட்ட 300 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் தங்குமிடமாக உள்ளது - குழந்தைகள் உட்பட சுமார் 800 பேர் இங்கு தங்கியுள்ளனர். WSWS நிருபர்கள், வரையறுக்கப்பட்ட பிரவுன்ஸ் தனியார் நிறுவனத்தின் துணை ஸ்தாபனமான உடபுசலாவை பெருந்தோட்டத்தால் நிர்வகிக்கப்படும் கொன்கோர்டியா மற்றும் எஸ்க்டேல் தேயிலைத் தோட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பலருடன் பேசினர்.
'நவம்பர் 27 காலை, நிலச்சரிவு ஏற்படுவதைக் கண்டதும், எங்கள் வீடுகளை விட்டு விரைவாக வெளியேறினோம்' என்று ஒரு தொழிலாளி விளக்கினார். அதிகாரிகளின் அலட்சியத்திற்கு மாறாக, உள்ளூர் சமூகம் எவ்வாறு செயற்பட்டது என்பதை அவர் விவரித்தார்: 'கந்தப்பளை நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் எங்களுக்கு ஆதரவளித்து, ஒவ்வொரு நாளும் மூன்று வேளை உணவு வழங்குகிறார்கள். அவர்களால் முடிந்தால் மருந்து மற்றும் ஏனைய வசதிகளையும் வழங்குகிறார்கள்.'
தோட்ட உரிமையாளர்கள், மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா.) உட்பட தோட்ட தொழிற்சங்கங்களை அவர் கண்டனம் செய்தார்: 'தோட்ட நிர்வாகத்திலிருந்தோ, அரசாங்கத்திலிருந்தோ அல்லது தொழிற்சங்கங்களிலிருந்தோ யாரும் எந்த ஆதரவையும் வழங்கவில்லை. அவர்கள் நேரில் சென்று உதவி செய்வதாக வாக்குறுதிகளை வழங்குகிறார்கள், ஆனால் எதுவும் வழங்கப்படவில்லை.'
எஸ்க்டேல் தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தொழிலாளி, தங்கள் மோசமான வீட்டு நிலைமைகளை விவரிக்கத் தொடங்கினார்: 'நாங்கள் லைன் அறைகளில் வசிக்கிறோம், அவை நரகத்தைப் போன்றவை. அங்கு வாழ்வது கடினம். சுவர்களில் பல விரிசல்கள் உள்ளன. மழைக்காலங்களில் பிள்ளைகளுடன் வாழ்வது மிகவும் கடினம். தோட்ட நிர்வாகத்திடம் நாங்கள் புகார் செய்தாலும், எங்கள் வீட்டுவசதி பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.'
தங்களின் நிலமைகளை அம்பலப்படுத்துமாறு அவர் WSWS செய்தியாளர்களிடம் வலியுறுத்தினார். 'தயவுசெய்து இந்த வீடுகளில் நாங்கள் எப்படி வாழ்கிறோம் என்பதைப் போய்ப் பாருங்கள், வீடியோக்களை எடுத்து உலகிற்கு அம்பலப்படுத்துங்கள். நாங்கள், எங்கள் வீடுகளுக்கு மீண்டும் திரும்ப விரும்பவில்லை. முதலில், பாதுகாப்பான இடங்களில் கட்டப்பட புதிய வீடுகள் எமக்கு வேண்டும். இல்லையென்றால், இந்த வகையான நரக வாழ்க்கையை நாங்கள் விரும்பவில்லை', என கூறிய அவர், தொழிற்சங்கங்களையும் விமர்சித்தார்: 'எங்கள் தோட்டத்தில் பெரும்பாலான தொழிலாளர்கள் இ.தொ.கா. உறுப்பினர்கள். ஆனால் அதன் அதிகாரிகள் நாங்கள் எதிர்கொள்ளும் நிலைமைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை,' என்றார்.
கொன்கோர்டியா தோட்டத்தைச் சேர்ந்த இளம் தொழிலாளி சித்திரசேனா சுதா பின்வருமாறு கூறினார்: '27 அன்று, எங்கள் உடைமைகள் மற்றும் அனைத்தையும் விட்டுவிட்டு, எங்கள் வீடுகளை விட்டு வெளியேறினோம். இந்த இடத்தை அடைய கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரம் மிகவும் கடுமையான சூழ்நிலையில் நடக்க வேண்டியிருந்தது. அனைத்து வீதிகளும் வெள்ளத்தால் சேதமடைந்து சேற்றால் நிரம்பியுள்ளன.' அவர்கள் வசிக்கும் இடங்கள் மனித வாழ்விடத்திற்கு ஏற்றவை அல்ல என்றும், 'தோட்ட நிர்வாகமும் அரசாங்கமும் எங்களைப் பற்றி கவலைப்படவில்லை' என்றும் அவர் மேலும் கூறினார்.
கொன்கோர்டியாவைச் சேர்ந்த மற்றொரு பெண் தொழிலாளி நிர்வாகத்தின் சுரண்டலைப் பற்றி விவரித்தார்: “நாங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையில் தோட்டத்தில் வேலை செய்கிறோம். தோட்ட நிர்வாகம் எங்களை அதிக தேயிலை கொழுந்துகளைப் பறிக்குமாறு கேட்கிறது. ஒவ்வொரு முறை அவர்கள் கொழுந்துகளை எடைபோடும் போதும், மூன்று கிலோவைக் கழிக்கிறார்கள், இதன் காரணமாக, மூன்று முறை எடைபோடும் போது ஒரு நாளைக்கு ஒன்பது கிலோவைக் கழிக்கிறார்கள். எங்கள் தொழிற்சங்கங்கள் இதை எதிர்க்கவில்லை. இந்த சூழ்நிலையில், வாழ்க்கைச் செலவு அதிகமாக இருப்பதால், எங்கள் அன்றாட ஊதியத்தில் உயிர்வாழ்வது மிகவும் கடினம்.”
உள்ளூர்வாசிகள் மற்றும் வணிக உரிமையாளர்களின் ஆதரவுடன் கோயில் குழுவால் கோயில் தங்குமிடம் நடத்தப்படுவதை எமது நிருபர்கள் அவதானித்தனர்.
நவம்பர் 27 அன்று, கந்தப்பளையில் புரூக்சைட் சென் ஜோன்ஸ் தோட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் - நிக்கோலஸ்ராஜ், அவரது மனைவி மற்றும் அவரது தந்தை - கொல்லப்பட்டதாக செல்வகுமார் விளக்கினார். அருகிலுள்ள சூரியகாந்தி தோட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வெள்ள நீர் அவர்களின் வீட்டிற்கு அருகிலுள்ள கால்வாய்க்கு திரும்பியிருந்தது.
நிக்கலஸ்ராஜின் மனைவி திடீரென வந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். இரண்டு வயது குழந்தையை கையில் வைத்துக்கொண்டிருந்த நிக்கலஸ்ராஜ் அவரைக் காப்பாற்றச் சென்ற போது அவரும் அடித்துச் செல்லப்பட்டார். தோட்டத்தில் மிதந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மறுநாள் சேற்றில் இருந்து பலத்த காயங்களுடன் வெளியே எடுக்கப்பட்ட அவரது தந்தை, மருத்துவமனைக்குச் செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் உயிரிழந்தார். அவர்களது மற்றொரு உறவினரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவர்களது பிரதேசத்தில் பல வீடுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன.
வெள்ளத்தால் கழுவிச் செல்லப்பட்ட நிக்கலஸ் ராஜின் வீடு இருந்த பிரதேசத்தை இந்த வீடியோ இணைப்பில் காணலாம்
நிக்கலஸ்ராஜ் மற்றும் அவரது மனைவியின் உடல்கள் பல கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டன. இரண்டு வீடுகள் இடிந்து விழுந்தன, மேலும் பல பகுதியளவு சேதமடைந்தன. குடும்பத்தினர் அப்பகுதியை விட்டு வெளியேறி மற்ற உறவினர்களுடன் தங்கியிருந்ததாக உறவினர் ஒருவர் நமது நிருபர்களிடம் தெரிவித்தார். இருப்பினும், மாற்று வழிகள் இல்லாததால், அவர்கள் அதே இடத்திற்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கண்டபொலவில், பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் மேலதிக வருமானத்திற்காக விவசாயத்தை நம்பியுள்ளனர். விவசாய நிலத்தின் பெரும்பகுதி இப்போது அழிக்கப்பட்டுள்ளது, மேலும் அதை பயிர்ச்செய்கைக்காக மீட்டெடுப்பது மிகவும் கடினமாக இருக்கும்.
டிசம்பர் 4 அன்று, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள மஸ்கெலியாவின் சாமிமலையில் உள்ள ஃபெயர்லான் தோட்டத்திற்கு WSWS நிருபர்கள் சென்றிருந்தனர். அங்கு 40 குடும்பங்களும் 49 வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆறு வீடுகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. வீதிகள் மற்றும் நிலங்கள் விரிசல் அடைந்துள்ளன, மேலும் மழை தொடர்ந்து வருவதால் மேலும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.
ஃபெயர்லோன் தோட்டத்தில் வீடுகளும் நிலமும் வெடித்திருப்பதை காட்டும் வீடியோ
ஆபத்திலிருந்து தப்பிக்க, 150 குடும்பங்கள் அருகிலுள்ள பாடசாலையில் தஞ்சம் புகுந்துள்ளனர். உள்ளூர்வாசிகளும் அருகிலுள்ள வணிகர்களும் சில உதவிகளை வழங்கியுள்ளனர். சேதமடைந்த வீடுகளுக்குத் திரும்புவதற்கு பயப்படுவதாகக் கூறி, தங்களுக்கு நிரந்தர வீட்டுவசதி தேவை என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர். தங்குமிடத்தில் கழிப்பறை வசதிகள் கடுமையான பற்றாக்குறையாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
நுவரெலியா மாவட்டம் முழுவதும் உள்கட்டமைப்பு மற்றும் சொத்து சேதம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா, கந்தப்பளை மற்றும் ராகல போன்ற நகரங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான ஏக்கர் மரக்கறி விவசாயங்கள் அழிக்கப்பட்டுள்ளன. நுவரெலியாவை, கண்டி மற்றும் பதுளையுடன் இணைக்கும் வீதிகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. நுவரெலியாவிற்கும் ஹட்டனுக்கும் இடையிலான வீதி ஓரளவு பயணிக்கக் கூடியதாக இருந்தாலும், பல பகுதிகள் நிலச்சரிவுகள் மற்றும் பாரிய கல் சரிவுகளால் சேதமடைந்துள்ளன.
