மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.
அமெரிக்கா முழுவதிலும் உள்ள திரையரங்குகள் தற்போது இயக்குனர் ஜேம்ஸ் வான்டர்பில்ட் இயக்கிய நியூரம்பேர்க் என்ற திரைப்படத்தை திரையிட்டுள்ளன. இந்த திரைப்படம், 1945 ஆம் ஆண்டில் நாஜி ஜேர்மனியில் உயிர் பிழைத்த தலைவர்கள் மீது “அமைதிக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் அந்த குற்றங்களைச் செய்வதற்கான ஒரு பொதுவான திட்டம் அல்லது சதி” ஆகியவற்றிற்கான விசாரணையை மையமாகக் கொண்டு, இயக்குனர் ஜேம்ஸ் வோன்டர்பில்ட்டால் இயக்கப்பட்டுள்ளது.
நூரெம்பேர்க் நீதிமன்றம், சர்வதேச சட்டத்தின் தற்போதைய செயல்பாட்டு கட்டமைப்பை உருவாக்கியிருந்தது. இதன் கீழ், அரசியல்வாதிகளும் இராணுவத் தளபதிகளும் ஆக்கிரமிப்புப் போரை நடத்துவது, மற்றும் போர்க்குற்றங்களைச் செய்வது என்பது, ஒரு தனிப்பட்ட குற்றமாகும்.
இந்த திரைப்படத்தின் கருப்பொருள் மிகவும் சரியான நேரத்தில் அமைந்துள்ளது. கரீபியன் கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலில் தொடர்ச்சியான படுகொலைகள் தொடர்பாக, ட்ரம்ப் நிர்வாகத்தைச் சூழ்ந்துள்ள ஆழமடைந்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் இது வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 2 இல் இருந்து, ட்ரம்ப் நிர்வாகம், நிராயுதபாணியான மற்றும் பாதுகாப்பற்ற மக்களால் நிர்வகிக்கப்படும் 22 போக்குவரத்து படகுகள் மீது நடத்தப்பட்ட 21 ஏவுகணைத் தாக்குதல்களில், குறைந்தது 83 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எந்தவொரு ஆதாரமும் இன்றி, இவர்கள் மீது, போதைப்பொருட்களைக் கொண்டு சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2 அன்று, ஒரு ஏவுகணைத் தாக்குதல் மூலம் முதல் தடவையாக நடத்திய படுகொலைகளின்போது, யுத்த அமைச்சர் பீட் ஹெக்சேத் “அனைவரையும் கொல்வதிற்கான” ஒரு உத்தரவை பிறப்பித்தார். இதற்கு இணங்க, முதல் தாக்குதலில் இருந்து தப்பிப்பிழைத்தவர்களைக் கொல்வதிற்கு, இரண்டாவது ஏவுகணையை ஏவுவதிற்கு உத்தரவு இடப்பட்டதாக, கடந்த வெள்ளிக்கிழமை வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டது.
நவம்பர் 18 ஆம் திகதி, அமெரிக்க அரசுக்குள் நெருக்கடி அதிகரித்த நிலையில் இந்த சம்பவங்கள் வெளி வந்துள்ளன. அப்போது ஜனநாயகக் கட்சியின் சட்டமியற்றுபவர்கள் குழு ஒன்று, சர்வதேச சட்டத்திற்கு கீழ்ப்படிந்து சட்டவிரோத உத்தரவுகளை நிராகரிக்கும் கடமையை அமெரிக்க படையினர்களுக்கு நினைவூட்டும் வீடியோ காணொளி ஒன்றை வெளியிட்டது.
இந்த காணொளியைக் குறிப்பிட்டு, நவம்பர் 23 அன்று “இந்த வாரம்” நிகழ்ச்சியின் போது, செனட்டர் எலிசா ஸ்லாட்கின், கரீபியன் பகுதியில் ட்ரம்பின் ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்க நகரங்களுக்கு துருப்புக்கள் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இந்தக் காணொளி வெளியிடப்பட்டதாகக் கூறினார். இதில், “சட்டவிரோத உத்தரவுகள்” இருப்பதை வலியுறுத்திய ஸ்லாட்கின், “நூரம்பேர்க் உதாரணத்தை மேற்கோள் காட்டி, ‘சரி, அவர்கள் என்னை இதைச் செய்யச் சொன்னார்கள், அதனால்தான் நான் மக்களைக் கொன்றேன்’ என்று கூறுவது ஒரு சாக்குப்போக்கு அல்ல” என்று வலியுறுத்தினார்.
ட்ரம்ப் அரசாங்கத்தின் அப்பட்டமான குற்றவியல் தன்மையானது, போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டம் பற்றிய பிரச்சினையை கிட்டத்தட்ட கட்டாயமாக எழுப்பியுள்ளது. வெள்ளை மாளிகையிலிருந்து வெளிப்படும் நாற்றம்பிடித்த குண்டர்வாதம் ஒரு திருப்புமுனையைக் குறிக்கிறது. இருப்பினும், இது தொடர்பான உண்மையான அரசியல் மற்றும் வரலாற்று சூழல் பற்றியும், ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்ததற்கான காரணங்களைப் பற்றியும், ஜனநாயகக் கட்சியிலோ அல்லது ஊடகங்களிலோ எந்தவொரு தீவிரமான கலந்துரையாடலும் இல்லை.
உண்மையில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, உலக சோசலிச வலைத் தளம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பின் உள்ளடக்கத்தில் நூரெம்பேர்க் முன்னுதாரணத்தின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி வந்துள்ளது.
2004 இல், அயர்லாந்தின் டப்ளினில் உள்ள டிரினிட்டி கல்லூரியின் தத்துவவியல் சங்கத்தில் நடந்த ஒரு விவாதத்தில், உலக சோசலிச வலைத் தளத்தின் தலைமை ஆசிரியர் டேவிட் நோர்த், புஷ் நிர்வாகம் “முன்கூட்டியே தாக்கும்” போரின் கோட்பாட்டை அறிவித்ததன் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட கருத்துக்களை வழங்கினார். ஆக்கிரமிப்பு போர் என்பது “மிகவும் உயர்ந்த சர்வதேசக் குற்றம்” என்ற கோட்பாட்டை நூரெம்பேர்க் விசாரணைகள் வகுத்தன என்று நோர்த் குறிப்பிட்டார்.
தோற்கடிக்கப்பட்ட அச்சு வல்லரசுகளை மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட வெற்றிபெற்ற நேச நாட்டு வல்லரகளையும் கட்டுப்படுத்தும் முன்னுதாரணத்தை இது அமைத்துள்ளதாக நீதிமன்றம் வெளிப்படையாக அறிவித்தது. அமெரிக்க வழக்குரைஞர் குழுவின் தலைவரான உச்ச நீதிமன்ற நீதிபதி ரொபேர்ட் ஜாக்சன் கூறியதை டேவிட் நோர்த் பின்வருமாறு மேற்கோள் காட்டினார்:
ஒப்பந்தங்களை மீறும் சில செயல்கள் குற்றங்களாக இருந்தால், அவை அமெரிக்கா செய்தாலும் சரி, ஜேர்மனி செய்தாலும் சரி, அவை குற்றங்களே. மேலும், எமக்கு எதிராக நாம் பயன்படுத்த விரும்பாத ஒரு குற்றவியல் விதிமுறைகளை மற்றவர்களுக்கு எதிராக வகுக்க நாங்கள் தயாராகக் கூடாது.
“இந்த பிரதிவாதிகளுக்கு ஒரு விஷம் கலந்த கிண்ணத்தை வழங்குவது என்பது எங்கள் சொந்த உதடுகளிலும் வைப்பதற்கு சமம்” என்று ஜாக்சன் மேலும் கூறினார்.
“இந்த வார்த்தைகள் உச்சரிக்கப்பட்டதிலிருந்து நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன” என்று நோர்த் குறிப்பிட்டார். தற்போது, நோர்த் பின்வருமாறு எழுதினார்:
இன்றைய உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியம், பூகோள மேலாதிக்கத்தை தொடருவதுக்காக, வன்முறை, சுரண்டல் மற்றும் மனிதாபிமானமற்ற தன்மை ஆகியவற்றை முக்கியமாக தூண்டி வருகிறது. அதன் வெளியுறவுக் கொள்கை, ஒரு பரந்த சர்வதேச குற்றவியல் நடவடிக்கையின் தன்மையை எடுத்துள்ளது.
இந்த மதிப்பீடு, 2003 ஆம் ஆண்டு, புஷ் நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்ட ஈராக் மீதான சட்டவிரோத படையெடுப்பின் பின்னணியில் அமைந்துள்ளது. இது, சோவியத் ஒன்றியத்தின் கலைப்பின் போதும், அதற்குப் பின்னரும் நடத்தப்பட்ட தொடர்ச்சியான ஆக்கிரமிப்புப் போர்களைத் தொடர்ந்து வந்தது. இதில், 1991 இல் புஷ் சீனியர் தலைமையில் இடம்பெற்ற முதல் வளைகுடாப் போர் மற்றும் 1999 இல் கிளிண்டன் தலைமையில் இடம்பெற்ற சேர்பியாவிற்கு எதிரான போர் ஆகியவை உள்ளடங்குகின்றன.
2001 இல் தொடங்கப்பட்ட ஈராக்கிற்கு எதிரான போர் “பயங்கரவாதத்தின் மீதான போரின்” பாகமாக இருந்தது. இது முதலில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், பின்னர் ஈராக்கிற்கு எதிராகவும், ஆக்கிரமிப்பு போரை நெறிப்படுத்துவதற்கு மட்டுமல்ல, மாறாக படுகொலை, சித்திரவதை மற்றும் பாரிய உத்தரவாதமற்ற உள்நாட்டு கண்காணிப்பு ஆகியவற்றை நியாயப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த டிக் செனி, “நாம் இருண்ட பக்கத்தில் வேலை செய்ய வேண்டும்... நாங்கள் நிழல்களில் நேரத்தை செலவிடப் போகிறோம்” என்று அறிவித்தார்.
இரண்டாம் வளைகுடாப் போரின் ஒரு பகுதியாக, புஷ் நிர்வாகம் உலகெங்கிலும் தொடர்ச்சியான “கருப்பு தளங்களை” அமைத்தது. இந்த தளங்களுக்கு, “அசாதாரணமான கடத்தல்” கொள்கையின் மூலம், சட்டவிரோதமாக ஆயிரக்கணக்கான மக்களை கடத்தி இழுத்துச் சென்றது. வெள்ளை மாளிகை சித்திரவதை செய்யும் கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதில், “விசாரிப்பு நுட்பங்கள்” “தந்திரோபாயங்கள்” என்ற பேரில் “நீரில் மூச்சுத் திணறும் வகையில் மூழ்கடித்தல்”, “விரக்திக்கு உள்ளாக்குதல்” மற்றும் “முகமூடி அணிவித்தல், காதை செவிடாக்கும் சத்தத்திற்கு உள்ளாக்குதல், தூக்கத்தை கலைத்தல்” போன்ற சித்திரவதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
புஷ் நிர்வாகத்தின் குற்றங்களை சுருக்கமாகக் கூறும் வகையில், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, “நாங்கள் சிலரை சித்திரவதை செய்தோம்” என்று கூறினார். ஆனால், ஒபாமா தனது சொந்த கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தினார். இதில், 2,500 முதல் 4,000 பேர் வரை கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான ட்ரோன் தாக்குதல்களும் அடங்கும். அமெரிக்க குடிமக்கள் உட்பட, முறையான விசாரணையின்றி படுகொலை செய்யும் கொள்கை, வாராந்திர “பயங்கரவாத செவ்வாய்க்கிழமை” கூட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக ஒரு சிக்கலான அதிகாரத்துவ அமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த குற்றவியல் மரபைக் கட்டியெழுப்பிய முதலாவது ட்ரம்ப் நிர்வாகம், கடற்படையின் முதன்மை சிறப்பு நடவடிக்கைப் படையின் எடி கல்லாகர் என்பவனுக்கு மன்னிப்பு வழங்கியது. எடி கல்லாகர், கைதியாக இருந்த ஒரு சிறுவனை கத்தியால் குத்திக் கொலை செய்த பின்பு, அந்த சடலத்துடன் தன்னை புகைப்படம் எடுத்துக் கொண்டான். இந்த மரபு, ஈரானிய ஜெனரல் காஸிம் சுலைமானி பாக்தாத்தில் படுகொலை செய்யப்பட்டதை உள்ளடக்கிய, வெளிநாடுகள் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை அதிகரித்தது.
நாஜித் தலைவர்களின் குற்றங்களில் மிகவும் கொடூரமான மற்றும் தனித்துவமான இனப்படுகொலையை மீண்டும் அறிமுகப்படுத்தும் பொறுப்பு பைடென் நிர்வாகத்திடம் விடப்பட்டது. காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு பைடென் நிதியளித்து, ஆயுதபாணியாக்கி, அரசியல் ரீதியில் அதனைப் பாதுகாத்தார். குறைந்தது 60,000ம் பாலஸ்தீனியர்களை படுகொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான 2,000ம் பவுண்டுகள் எடை கொண்ட குண்டுகளை இஸ்ரேலுக்கு பைடென் வழங்கினார். பாலஸ்தீனியர்களை “மனித விலங்குகள்” என்று அழைத்த, இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் போர்க் குற்றங்களை மேற்கொண்டதுக்கு, இந்த ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டார்.
இரண்டாவது ட்ரம்ப் நிர்வாகம், இந்த சடலங்களின் குவியலின் மீது அமர்ந்திருக்கிறது. அடால்ஃப் ஹிட்லரின் அபிமானியான ட்ரம்ப், அமெரிக்க வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சித்திரவதை, படுகொலை மற்றும் இனச்சுத்திகரிப்பு ஆகியவற்றை வெளிப்படையாக ஆதரிக்கிறார். டரம்ப், அமெரிக்க அரசின் அதிபராக பதவி உயர்வு பெற்றிருப்பது, அவரது பதவி உயர்வுக்கு முன்னர் நடந்த அனைத்துக் குற்றங்களுக்கும் ஒரு சான்றாகும்.
கரீபியன் பகுதியில் ஆயுதமற்ற பொதுமக்களைக் கொல்வது அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்திற்குள் ஒரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது. ஏனென்றால், இராணுவத்தின் சில பிரிவுகள் மேற்கொள்ளும் இத்தகைய கட்டுப்பாடற்ற குற்றச் செயல்கள், அமெரிக்க பூகோள மேலாதிக்கத்தின் முழுத் திட்டத்தையும் முற்றிலுமாக மதிப்பிழக்கச் செய்வதாக காண்கின்றன. அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தின் அதிக தொலைநோக்குள்ள பிரிவுகள், இராணுவப் பலத்தின் மூலம் உலகை மேலாதிக்கம் செலுத்துவதில் வெற்றிபெற வேண்டுமானால், அமெரிக்க ஏகாதிபத்தியம் சர்வதேச சட்டத்தை நிலைநிறுத்துகின்றது என்ற போலித்தனத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று நம்புகின்றன.
ஆனால், இந்தப் பாசாங்கு ஒரு மோசடியாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் பூகோள மேலாதிக்கத்தைப் பின்தொடர்வதற்கு பயன்படுத்தும் குற்றவியல் வழிவகைகள், அதன் குற்றவியல் நோக்கங்களின் விளைவு ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முழு மூலோபாயத் திட்டமும், அதன் வீழ்ச்சியடைந்து வரும் உலகளாவிய மேலாதிக்கத்தை ஈடுசெய்வதிற்கு, அதன் இராணுவ சக்தியைப் பயன்படுத்துவதை உள்ளடக்கியிருக்கிறது. இது, ஒரு ஆக்கிரமிப்புப் போரை நடத்துவதற்கான ஒரு சதித்திட்டமாகும். இதை நூரம்பேர்க் நீதிமன்றம் “அமைதிக்கு எதிரான குற்றங்கள்” என்று வரையறுத்தது. மேலும் இந்தத் திட்டம்தான், டொனால்ட் ட்ரம்பையும் அவரது பாசிசக் குழுவையும் வாந்தி எடுக்க வைத்துள்ளது.
அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெடிப்பின் அனுபவத்தில் இருந்து படிப்பினைகளைப் பெற வேண்டும். தொழிலாளர்களின் ஜனநாயக, பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்திற்கு, ஏகாதிபத்தியப் போருக்கு எதிரான போராட்டம் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவது அவசியமாகும்.
