முன்னோக்கு

அமெரிக்க தபால் சேவை தொழிலாளர்களான நிக் அக்கர் மற்றும் ரஸ்ஸல் ஸ்க்ரக்ஸ் ஜூனியர், ஆகியோரின் மரணங்கள் தொடர்பாக சாமானிய தொழிலாளர்களின் விசாரணைக்காக!

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

நிக் அக்கர், மற்றும் ரஸ்ஸல் ஸ்க்ரக்ஸ் ஜூனியர்.

கடந்த இரண்டு வாரங்களில், இரண்டு தனித்தனி அமெரிக்க அஞ்சல் நிலையங்களில் நடந்த மரணங்கள் குறித்து, சாமானியத் தொழிலாளர்களின் தலைமையில் ஒரு சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) அழைப்பு விடுக்கிறது. பொருத்தமான தகவல்களுடன் தபால் தொழிலாளர்கள் சாட்சியமளிக்க முன்வர வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். அமெரிக்காவிலும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு அன்றாட யதார்த்தமாக மாறியுள்ள தொழில்துறை மரண இறைச்சிக் கூடத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் தபால் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் கொடூரமான வேலை நிலைமைகளை அம்பலப்படுத்துவது அவசியமாகும்.

நவம்பர் 8 அன்று, மிச்சிகனின் ஆலன் பூங்காவில் உள்ள டெட்ராய்ட் வலையமைப்பு விநியோக மையத்தில் நிக் அக்கர், இயங்கிக் கொண்டிருந்த ஒரு தபால் வரிசைப்படுத்தும் இயந்திரத்தால் நசுக்கி கொல்லப்பட்டார். எட்டு மணி நேரமாக அவரது உடல் மீட்கப்படவில்லை. பின்னர் அவரது மனைவி அவரை அழைத்துச் செல்ல வந்த பிறகுதான் அவரது உடல் மீட்கப்பட்டது. இந்த இயந்திரம் தொடர்பாக தொழிலாளர்கள் புகார் அளித்ததாகவும், இயந்திரத்தின் பாதுகாப்பு அம்சங்களின் செயல்பாட்டைத் தொடரச் செய்வதற்காக, கொடுத்த புகார் முடக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நவம்பர் 15, சனிக்கிழமை அன்று, ஜோர்ஜியாவில் பால்மெட்டோ செயலாக்கம் மற்றும் விநியோக மையத்தில், ரஸ்ஸல் ஸ்க்ராக்ஸ் ஜூனியர் விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார். இந்த விநியோக மையத்தில், செல்போன் சேவை மற்றும் அவசரகால நெறிமுறைகள் இல்லாததால், அவருக்கு மருத்துவ உதவிகள் வழங்குவதற்கு நீண்ட கால தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக, அவரது மரணம் இடம்பெற்றதாக தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் நிர்வாகம் தனது செயல்பாடுகளை தொடர்ந்து இயங்க வைத்ததாக தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்த தடுக்கக்கூடிய துயர சம்பவங்கள், அமெரிக்க தபால் சேவையின் (USPS) கொடூரமான பணி நிலைமைகளை அம்பலப்படுத்தியுள்ளன. ஆலன் பார்க்கில் உள்ள ஊழியர்கள், தபால் விநியோக மையத்தை “மரணப் பொறி” என்று விவரிக்கின்றனர். பால்மெட்டோவில் உள்ளவர்கள் ஜூன் மாதம் இடம்பெற்ற 59 வயதான எரிக் ஸ்மித்தின் மரணத்தையும், சமீபத்தில் இடம்பெற்ற இரண்டு தற்கொலைகளையும் குறிப்பிட்டனர். கடந்த ஆண்டு, 48 வயதான ஷானன் பார்ன்ஸும் இந்த தொழில் மையத்திலேயே இறந்தார்.

அமெரிக்காவில் நடைபெறும் தொடர்ச்சியான பணியிட பேரழிவுகளில் இந்த மரணங்கள் சமீபத்தியவை மட்டுமே. நவம்பர் 4 ஆம் தேதி கென்டக்கியின் லூயிஸ்வில்லில் UPS சரக்கு விமானம் விபத்துக்குள்ளானதில் 14 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் டென்னசியில் உள்ள ஒரு வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட பேரழிவுகரமான வெடிப்பில் 16 பேர் உயிரிழந்தனர். நவம்பர் 14 ஆம் தேதி ஓக்லஹோமாவில் ஏற்பட்ட அமோனியா வாயு விசக் கசிவு 34 பேரை மருத்துவமனைக்கு அனுப்பியது. கடந்த ஆகஸ்ட் மாதம், பிட்ஸ்பேர்க்கிற்கு அருகிலுள்ள கிளேர்டன் எஃகு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த ஆண்டு தபால் தொழிலாளர்களிடையே குறைந்தது ஐந்து பேர் இறந்துள்ளனர். இதில் கொலராடோவின் கிராண்ட் ஜங்ஷனைச் சேர்ந்த டான் வொர்க்மேன் மற்றும் டெக்சாஸின் டல்லாஸைச் சேர்ந்த ஜேக்கப் டெய்லர் ஆகிய இரு கடிதப் போக்குவரத்து ஊழியர்களும் வெப்பம் தொடர்பான சம்பவங்களில் சிக்கியுள்ளனர்.

தென்கிழக்கு மிச்சிகனில் உள்ள ஸ்டெல்லாண்டிஸ் டண்டி இயந்திர ஆலையில் பணிபுரிந்துவந்த வாகனத் தொழிலாளி ரொனால்ட் ஆடம்ஸ் சீனியரின் மரணம் குறித்து IWA-RFC ஏற்கனவே விசாரணையைத் தொடங்கியுள்ளது. நிக் ஆக்கர் கொல்லப்பட்டதைப் போன்ற சூழ்நிலைகளில் பராமரிப்புப் பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது ஆடம்ஸ் இயந்திரத்துக்குள் நசுங்கி இறந்தார். ஜூலை 27 அன்று, இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக் கண்டுபிடிப்பு விசாரணைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இயந்திரங்களை பழுதுபார்க்கும் போது அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கையான மின்சுற்றுகளை நிறுத்தும் Lockout tagout நடைமுறைகளைப் பின்பற்ற நிர்வாகம் தவறியது குறிப்பிடத்தக்க வகையில் இந்த மரணத்திற்கு காரணமாக இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த ஜூன் மாதம், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணியின் பாகமாக இருக்கும் அமெரிக்க தபால் சேவை தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழு, M. வொர்க்மேன் மற்றும் திருமதி டெய்லரின் மரணங்கள் குறித்து விசாரணை நடத்த அழைப்பு விடுத்தது.

இந்தப் பிரச்சினையில் IWA-RFC இன் பணி விரிவுபடுத்தப்பட வேண்டும். இது ஒரு பத்திரிகை பயிற்சி நடவடிக்கை அல்ல. மாறாக இது, தொழிலாளர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், இந்த மரணங்களைத் தவிர்க்க முடியாததாக மாற்றும் பணியிடங்களில், பெருநிறுவன சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்கவும் தேவையான அறிவைக் கொண்டு அவர்களை ஆயுதபாணியாக்கும் முயற்சியாகும்.

பெருநிறுவன ஊடகங்களால், கொடூரமான பணியிட மரணங்கள் மூடிமறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களைப் பாதுகாக்க எதுவும் செய்யாமல், நிர்வாகத்தின் ஒரு அங்கமாகச் செயல்படும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தாலும், இது மூடி மறைக்கப்படுகிறது. இந்த மாதம் இடம்பெற்ற இறப்புகள் குறித்து அமெரிக்க தபால் தொழிலாளர் சங்கம் அமைதியாக உள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட புகார் நிலுவையில் இருப்பதால், நிக் அக்கரின் மரணத்திற்கு இது காரணமாக இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலைமை தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய அனுபவமாகும். UPS இல், டீம்ஸ்டர் தொழிற்சங்கத்தினர் பல்லாயிரக்கணக்கான வேலை வெட்டுக்களை செயல்படுத்த உதவுகின்றனர். வாகனத் தொழிற் துறையில், ஆடம்ஸின் மரணம் குறித்து எதுவுமே செய்யாத, ஐக்கிய வாகனத்துறை தொழிலாளர்கள் சங்கம் (UAW), ஆயிரக்கணக்கானோர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதையிட்டு ஒரு விரலைக் கூட உயர்த்தவில்லை.

இதனால்தான், இந்த விசாரணையை சாமானிய தொழிலாளர்கள் குழுக்களின் விசாரணை மூலம் தொழிலாளர்களே நடத்த வேண்டும். தொழிற்சங்க அதிகாரத்துவத்துக்கு எந்தவிதமான அழுத்தம் கொடுத்தாலும், அதை செயற்படுத்த வைக்க முடியாது. ஏனெனில், தொழிற்சங்கம் இந்தப் பிரச்சினையின் ஒரு பாகமாக இருக்கிறது.

இடைவிடாத செலவின வெட்டுக்கள், இந்த மரணங்களில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அமெரிக்காவுக்கான விநியோக மறுசீரமைப்பு திட்டத்தின் (DFA) நடுவில், அமெரிக்காவின் தபால் சேவை உள்ளது. இது, ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் தொடங்கப்பட்டு பைடெனின் கீழ் தொடர்ந்தது. இது அமேசான் நிறுவனத்தின் பாணி வழிகளில் தபால் சேவையை இலாபகரமாக்குவதையும், இறுதியில் இதனை தனியார்மயமாக்குவதுக்கான தளத்தை தயார் செய்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது. 1,000 உள்ளூர் அலுவலகங்களை மூடுவது, பல்லாயிரக்கணக்கான வழித்தடங்களை ஒருங்கிணைப்பது மற்றும் மிகக் குறைவான தொழிலாளர்கள் தேவைப்படும் சிறிய எண்ணிக்கையிலான பெரிய, தானியங்கி வசதிகளில் செயல்பாடுகளை குவிப்பதை இது உள்ளடக்கியுள்ளது.

நகரத்தில் தபால்களை வழங்கும் ஊழியர்களுக்கான புதிய கண்காணிப்பு அமைப்புகள், “நிலையான நிகழ்வுகளுக்கு” தொழிலாளர்களை தானாகவே பதிவு செய்யப் பயன்படுத்தப்படுகின்றன. 2023 இல், இந்த அமைப்பு, டல்லாஸ்சில் தபால்களை வழங்கும் யூஜின் கேட்ஸின் மரணத்திற்கு பங்களித்தது. கிராமப்புறங்களில், அஞ்சல் ஊழியர்கள் நீண்ட காலமாக துண்டு விகித அடிப்படையில் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் வழித்தடங்களின் மதிப்பை மறு மதிப்பீடு செய்ததன் விளைவாக, அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேருக்கு, பெரும்பாலும் ஆண்டுக்கு 10,000 ம் டாலர்கள் முதல் 20,000 ம் டாலர்கள் வரை, ஊதியக் குறைப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான விநியோக மறுசீரமைப்பு திட்டத்திற்கு, தேசிய தபால் போக்குவரத்து சங்கம் (NALC) மற்றும் தேசிய கிராமப்புற தபால் போக்குவரத்து சங்கம் (NRLCA) ஆகிய தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்துள்ளன. இவை ஊதியக் குறைப்புகளை செயல்படுத்த பக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதோடு, தொழிலாளர்களின் எதிர்ப்பைக் கண்காணித்து வருகின்றன. பால்மெட்டோ தொழிலாளி ஒருவர் கூறுகையில், ஊடகங்கள் அல்லது காங்கிரஸார் பொதுமக்களின் குரலுக்குப் பதிலளிக்கும் போது, விஷயங்கள் “இயல்பு நிலைக்கு” திரும்புவதற்காக மட்டுமே நிர்வாகம் பணியிடங்களை சுத்தம் செய்கிறது.

ஒவ்வொரு நாட்டிலும் தபால் சேவைகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன. கனடா தபால் சேவையில் பாரிய வெட்டுக்கள் நடந்து வருகின்றன. பிரிட்டனின் ரோயல் தபால் சேவை நிறுவனத்தை பில்லியனர் டேனியல் கிரெடின்ஸ்கி கையகப்படுத்தியுள்ளார். ஜேர்மனியின் தபால் சேவை பல ஆண்டுகளுக்கு முன்பே தனியார்மயமாக்கப்பட்டுள்ளது, மேலும் பிரேசிலிய தபால் ஊழியர்கள் தனியார்மயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 10,000 பணிநீக்கங்களை எதிர்கொள்கின்றனர்.

ஒவ்வொரு துறையிலும் ஒரே நிலைமைகள் பிரதிபலிக்கின்றன. அமெரிக்க நிறுவனங்கள் இந்த ஆண்டு 1.1 மில்லியன் வேலைகளை வெட்டியுள்ளன. இது, பெருமந்த நிலைக்குப் பின்னர் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். பத்து மில்லியன் கணக்கான வேலைகளை அழிக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் நிறுவனங்கள் எச்சிலை வெளியேற்றுகின்றன. இந்த மேம்பட்ட தொழிலாளர் சேமிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் ஒரு அடிப்படை முரண்பாடு உள்ளது. இந்த தொழில்நுட்பங்கள், வாழ்க்கைச் செலவு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும், பணியிடத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, 19 ஆம் நூற்றாண்டு காலத்து பணி நிலைமைகளுக்கு திருப்பிக் கொண்டு செல்வதுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிகழ்ச்சிப்போக்கு பெருநிறுவன செல்வந்த தன்னலக்குழு மற்றும் அரசாங்கத்தின் முழுமையான ஒருங்கிணைப்பால் செயல்படுத்தப்படுகிறது. தபால் சேவையின் புதிய இயக்குநர் ஜெனரலான டேவிட் ஸ்டெய்னர் FedEx நிறுவனத்தின் வாரிய உறுப்பினராக உள்ளார். OSHA இன் (தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாகம்) புதிய தலைவரான டேவிட் கீலிங், UPS மற்றும் அமேசான் ஆகியவற்றில் ஒரு முன்னாள் “பாதுகாப்பு” தலைவராக உள்ளார். இந்த இரண்டு நிறுவனங்களும் குறைந்த ஊதியத்தில் வேலை வாங்கும் கொத்தடிமை நிறுவனங்களாகும். ஆளும் வர்க்கம், பாதுகாப்பு முகமைகளை மூடி வருவதுடன், பத்து மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு முத்திரைகள் மற்றும் மருத்துவ உதவிகளை துண்டித்து வருகிறது. மேலும், தொழிலாளர்களை காயங்கள் மற்றும் வறுமையில் இருந்து தொலைதூரத்தில் இருந்து கூட பாதுகாக்கும் எதையும் அழித்தும் வருகிறது.

தபால் சேவையின் வரலாறு, எதிர்ப்பு என்பது சாமானிய தொழிலாளர்களின் முன்முயற்சியைப் பொறுத்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. 1970 தேசிய தபால் வேலைநிறுத்தம், நிக்சனின் முந்தைய தாக்குதல்களுக்கு எதிராக, தபால் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரை மீறி நடந்த ஒரு திடீர் மூர்க்கத்தனமான வேலைநிறுத்தமாகும்.

எதிர்ப்பு உணர்வுகளுக்கு புதிய வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு தொழிலாளர்களின் புதிய அமைப்புகள் – சாமானிய தொழிலாளர் குழுக்கள் - கட்டியெழுப்பப்பட வேண்டும். மேலும், ஜனநாயகக் கட்டுப்பாடு மற்றும் அமைப்பு ஆகியவை, தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிரான கிளர்ச்சியுடன் இணைக்கப்பட வேண்டும். நிர்வாகம் என்ன கொடுக்க விரும்புகிறது என்பது அல்ல விடயம். மாறாக, தொழிலாளர்களின் அவசரத் தேவைகளைப் பாதுகாக்க, உலகளாவிய அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தும் மூலோபாயத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கையை அடிப்படையாகக் கொள்வது கட்டாயமாகும்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை IWA-RFC, அனைத்துத் துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்ட பெருமளவிலான பணிநீக்கங்கள் குறித்த ஒரு கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தின் தொடக்க அறிக்கையில், உலக சோசலிச வலைத் தள (WSWS) எழுத்தாளர் ரொம் ஹால், பணிநீக்கங்கள் “தொழிலாள வர்க்கத்தின் மீதான போரின்” ஒரு பகுதியாகும் என்று விளக்கினார். திங்களன்று IWA-RFC, “ஒவ்வொரு தொழில்துறையிலும் பணியிடத்திலும் சாமானிய தொழிலாளர் குழுக்களின் வலையமைப்பை உருவாக்குவதே தொழிலாள வர்க்கத்தின் தீர்வாக இருக்க வேண்டும், இது தன்னலக்குழுவின் வேரூன்றிய அதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் பலத்தைக் கொண்டுவர வேண்டும்” என்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.

தொழிலாளர்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நிக் அக்கர், ரஸ்ஸல் ஸ்க்ரக்ஸ் ஜூனியர் மற்றும் பிற தபால் ஊழியர்களின் மரணங்கள் குறித்த ஒரு சுயாதீனமான விசாரணையானது, பாதுகாப்பு நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், வாழ்வதற்கான உரிமை, உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமையை உத்தரவாதம் செய்வதற்கும், மற்றும் இலாபத்திற்காக உற்பத்தி செய்யும் சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வருவதிற்கும், சாமானிய தொழிலாளர் குழுக்களுக்கு அதிகாரம் அளிக்கும் போராட்டத்திற்கு ஒரு முன்னணியாக மாறும்.

கீழே உள்ள படிவத்தை நிரப்புவதன் மூலம் இந்த விசாரணையில் சேரவும்.

Loading